Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

Published:Updated:
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
##~##
தொ
ண்டை மண்டலத்தில் சைவ வேளாளர் குடியில் தோன்றிய குகபாதாசிருதர்- சக்திவேல் அம்மை தம்பதியின் மகனாக பிறந்தவர் பொய்யாமொழி. இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்ற ஊரில் தமிழாசிரியர் ஒருவரிடம் கல்வி பயின்றார்.

ஒருநாள், தமது ஆசிரியரின் பயிர்க் கொல்லையில் தினைப் புனத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான் சிறுவன் பொய்யாமொழி. அங்கே தென்றல் காற்றின் சுகத்தினால், சற்றே கண் அயர்ந்தான். அப்போது, பயிர்களை குதிரை ஒன்று மேய்வதாகக் கனவு வந்தது. திடுக்கிட்டு எழுந்தவன், கனவில் கண்டவாறே குதிரை ஒன்று பயிரை மேய்வதைக் கண்டு அதிர்ந்தான். ஓடிச் சென்று குதிரையை விரட்டினான்.

அவன் சிறுவன் அல்லவா? எனவே, அவன் எவ்வளவோ விரட்டியும் குதிரையானது பயிரை மேய்வதை விடவில்லை. உடனே, அருகே இருந்த காளி கோயிலுக்கு ஓடி னான். தமது ஆசிரியருக்குப் பிழை செய்ததாகக் கருதி, அதனை நீக்க அருள்புரிய வேண்டினான். காளிதேவி அவனுக்குக் காட்சியளித்து அருள் புரிந்தாள். அவள் அருளால் கல்வி- கேள்விகளில் ஞானமும், பாடல்கள் புனையும் திறனும் கைவரப் பெற்றான். தினைப்புனம் குதிரையால் அழிவுற்றதற்கு மிகவும் கோபம் கொண்டு, அப்படியரு வெண்பாவை பாடினான்.

''வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
ஆய்த்த மணலில் அணிவரையில் - காய்த்த
கதிரை மாளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரை மாளக் கொண்டு போ...''

என்று, அவன் பாடி முடிக்க, தினைப்புனத்தில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை கீழே விழுந்து இறந்தது. அருகில் இருந்தோர் அதிர்ந்தனர். உடனே சிறுவனின் ஆசிரியரிடம் சென்று, நடந்ததைக் கூறினர். ஆசிரியர் நேரில் வந்து பார்த்தார். ''இது காளிங்கராய அரசனின் குதிரை ஆயிற்றே! இது இறந்ததை அவன் அறிந்தால் என்ன நடக்குமோ?'' எனக் கலங்கினார். உடனே பொய்யாமொழி, முன்பு தான் பாடிய வெண்பாவின் ஈற்றடியை மட்டும் 'குதிரை மீளக் கொண்டு வா’ என்று மாற்றிப் பாடினான். என்ன ஆச்சரியம்... குதிரை சட்டென்று உயிர் பெற்று எழுந்தது. எல்லோரும் வியந்தனர்!

தமது மாணவனின் அற்புத சக்தியைப் புரிந்து கொண்ட ஆசிரியர், அவனைப் புகழ்ந்து கீழ்க் காணும் பாடலைப் பாடினார்.

''பொதியில் அகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்ச்
சிதைவில் புலவர் சிகாமணியாய்த் - துதி சேரும்
செங்காட்டங் கோட்டத் துறையூர் எனும் தலத்தில்
தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்...''

இந்த சம்பவத்துக்குப் பிறகே அந்த மாணவன் 'பொய்யாமொழி’ என்று அழைக்கப்பட்டான். நாளடைவில், காளியின் அருளால் மேலும் பல கவிகளை இயற்றும் திறமை பெற்றார் பொய்யாமொழி. இவரது பெருமைகளை அறிந்த அப்பகுதி அரசன் காளிங்கராயன் இவருக் குப் பல பரிசுகளை வழங்கிப் பாராட்டினான்.

கல்வி- கேள்விகளில் புகழ்பெற்று வரும் நாட்களில் பொய்யாமொழிக்கு சிவனார் மீதும் பக்தி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவரைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை என்ற விரதம் மேற்கொண்டார். அந்த நேரத்தில்தான், முருகப்பெருமான் அந்தப் பக்தனிடம் திருவிளை யாடல் நிகழ்த்தத் திருவுளம் கொண்டார்.

ஒருநாள், முருகனடியார் ஒருவர் பொய்யா மொழியைத் தேடி வந்தார். தமது ஊரில் கோயில் கொண்டுள்ள முருகனைப் பற்றிப் பாடல் எழுதித் தருமாறு வேண்டினார். பொய்யா மொழியோ, ''கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடுவேனோ?'' என்று மறுத்து விட்டார். பாடல் கேட்டுவந்த அடியார், 'சிவனையும் முருகனையும் வேறு வேறாக நினைக்கும் பொய்யாமொழியின் அறியாமை நீங்க முருகனே அருள வேண்டும்’ என்று வேண்டியபடி வெளியேறினார்.

பொய்யாமொழிப் புலவருக்கு மதுரை சென்று, அங்கே பழைய தமிழ்ச்சங்கத்தை மீண்டும் நிறுவி நடத்த ஆசை. மதுரைக்குப் புறப்பட்டார். வழியில், திருச்சி ஸ்ரீதாயுமானப் பெருமானைப் போற்றி, கலித்துறை ஒன்று பாடினார். அங்கிருந்து மதுரைக்கு பயணித்தார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

அப்போது கோடைகாலம். வெம்பரற் கற்களும் வேலமுட்களும் படர்ந்த அனல் கொளுத்தும் காட்டின் வழியே பயணித்தார். அப்போது, முருகப்பெருமான் ஒரு வேட்டுவச் சிறுவன் போல் உருவம் எடுத்து வந்து புலவரை வழிமறித்து, 'தன்னந்தனியாய் வரும் நீர் யார்?' என்று கடுகடுத்த குரலில் கேட்டார் முருகன்.

''நான் ஒரு புலவன்.''

''எனில், என் மீது ஒரு பாடல் பாடும்.''

''உம் பெயர் யாது?'' என்று கேட்டார் பொய்யா மொழி. முன்பு 'குஞ்சைப் பாடுவேனோ...’ என்று பொய்யாமொழி கூறியதை நினைவில் கொண்டு, ''என் பெயர் முட்டை'' என்றார் முருகவேடன். உடனே பொய்யாமொழி,

 'பொன் போலும் கள்ளிப் பொறி பறக்கும் கானலிலே
என் பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்
கானவேல் முள்தைக்கும் காடு...’

எனும் வெண்பாவைப் பாடினார். உடனே முருகன், ''புலவரே! உமது செய்யுளில் பொருட் குற்றம் உள்ளது. அதாவது, கள்ளிச் செடியே பொரிந்து தீயாகி, அதன் பொறி பறக்கும் கானலில் வேல முட்கள் வெந்து எரிந்து போகாமல் கிடப்பது எப்படி? அப்படியே, வேல முள் வெந்து போகாது கிடந்தாலும், காலில் தைக்க இயலுமோ? இவ்வாறு குற்றமுள்ள பாடலை ஒரு புலவர் பாடலாமா? உமது பாடலைத் திருத்தி, நான் பாடுகிறேன். சரி, உம் பெயர் என்ன?'' என்று கேட்டார் வேடமுருகன்.

''பொய்யாமொழி' என்றார் புலவர். உடனே முருகன், 'உமது மொழியும், பொய் - ஆம் - மொழியே...'' என்று நகைத்தார். தொடர்ந்து,

''விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர் சுடுமென் றேங்கிச் - செழும்கொண்டல்
பொய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே
பொய்யா மொழிப் பகைஞர் போல்...''

எனும் பதில் வெண்பாவைப் பாடினார். அதோடு, ''நீர் முன்பு 'குஞ்சைப் பாடேன்’ என்று கூறிய வாயால், இப்போது முட்டையைப் பாடியது வியப்புக்கு உரியதே!'' எனவும் நகையாடினார்.

புலவருக்கு உண்மை புரிந்தது. தன்னுடன் திருவிளையாடல் புரிவது சாட்சாத் முருகனே என்று கண்டுகொண்டார். தம் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினார். கந்தனும் தம் தெய்வத் திருக்கோலம் காண்பித்து, புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தார்.

பிறகு, பாண்டியநாடு சென்றார் பொய்யாமொழிப் புலவர். பழைய தமிழ்ச்சங்கத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்ற தமது ஆவலை பாண்டிய மன்னனிடம் சொன்னார். மன்னனோ, ''நீர் பாடல் பாடி இங்கு கல்லுருவில் இருக்கும் சங்கப் புலவரைத் தலையசைக்கவும் கைதட்டவும் செய்தால், தமிழ்ச்சங்கம் தொடங்குவது பற்றிச் சிந்திக்கலாம்'' என்றான்.

பொய்யாமொழி ஒரு பாடலைப் பாட... அன்னை மீனாட்சி கோயிலில் சிலை வடிவில் இருந்த சங்கப்புலவர் ஒருவர் தலையசைத்தார். அதைப் பார்த்து அதிசயித்தான் மன்னன். அக்கணமே, ''பொற்றாமரைக் குளத்தில் அமிழ்ந்து கிடக்கின்ற சங்கப் பலகையை மிதக்கப் பாடுக'' என்று புலவரை வேண்டினான். பொய்யாமொழியும் ஒரு வெண்பா பாட... அமிழ்ந்து கிடந்த சங்கப் பலகை மிதந்தது. இப்படி, அதிசயங்கள் நிகழ்த்தினாலும், புலவரின் தமிழ்ச்சங்க விருப்பத்தை நிறைவேற்ற, பாண்டிய மன்னன் ஏனோ விரும்பவில்லை.

பிறகு, பாண்டிய நாட்டில் இருந்த குறுநில நாடுகளில் ஒன்றான மாறை நாட்டைச் சேர்ந்த தஞ்சாக்கூர் என்னும் ஊரை அடைந்தார். அங்கே புலவர்களை ஆதரித்துப் போற்றும் சந்திர வாணன் என்னும் வேளாளச் செல்வந்தரை சந்தித்தார். அங்கிருந்த நாட்களில் நாற்கவிராச நம்பி, அகப்பொருள் இலக்கணத்துக்கு இலக்கிய மாக 'கோவை’ ஒன்று பாடினார். அதன் பாட்டு டைத் தலைவன் சந்திரவாணன் என்பதால், அதற்குச் 'சந்திரவாணன் கோவை’ என்றும், 'தஞ்சைவாணன் கோவை’ என்றும் பெயர். பொய்யாமொழிப் புலவர் அதனை அரங் கேற்றம் செய்தபோது, ஒவ்வொரு பாடலுக்கும் பொன் தேங்காய் ஒவ்வொன்றின் மூன்று கண்களிலும் மணி பதித்து, பரிசாக வழங்கிச் சிறப்பித்தான்.

தொடர்ந்து, பொய்யாமொழியார் சோழ நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தராகிய சீனக்க முதலியார் என்பவரிடம் நட்பு கொண்டார். இருவரும் உயிரும் உடலும் போல வாழ்ந்து வந்தனர். புலவர் ஒருநாள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் சீனக்க முதலியாரின் வாழ்வு முடிந்துவிட்டது. புலவர் வருமுன் முதலியாரின் உடலை காட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். புலவர் விரைந்து சென்றபோது, சீனக்க முதலியாரின் உடலைக் கிடத்தி சிதைகள்அடுக்கப் பெற்றிருந் தன. அதன் அருகில் சென்று, ''அன்று நீ செல்லக் கிட என்றாய்...'' என்று தொடங்கி, ஒரு

வெண்பா பாடினார். அப்போது சிதையில் இருந்த உடல் ஒரு பக்கமாக ஒதுங்கியது. உடனே, தன் நண்பரின் உடல் அருகே புலவரும் படுத்தார். இவரது உயிரும் பிரிந்தது.

பொய்யாமொழிப் புலவர் 12-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் என்று அறிய முடிகிறது.

''தாதை செஞ் சிவனும் சேயும் தன்மையில் ஒன்றென்று ஓராப்
பேதைமை அகற்ற முட்டைப் பெயர் சொலிப் பெற்ற பாவில்
ஏதம் என் றுணர்த்திச் சீராய் எழுந்தபா தந்து வேலோன்
போதுடன் காத்த பொய்யா மொழிப் புலவர் வாழி!

(தணிகைமணியார்)

- அடியார் வருவார்....