
ஆதிசங்கரர் அருளிய சுப்ரமணிய கராவலம்பம் மற்றும் லட்சுமி நரசிம்மரின் கராவலம்பம் ஆகியவற்றைத் தமிழில் படிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பாடல்கள் தமிழில் வெளிவந்து, அது உங்களில் யாரிடமாவது இருந்தால், எனக்கு அதன் நகல் பிரதியை அனுப்பி வைக்க வேண்டுகிறேன். மேற்படி பாடல்கள் தமிழில் தனிப் புத்தகமாகக் கிடைக்கும் என்றால், எங்கே கிடைக்கும் எனத் தெரிவித்தால் மிகவும் மகிழ்வேன்.
- வி.சதாசிவம், சென்னை-80

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குகஸ்ரீ ரசபதி அடிகள் உரை எழுதிய கந்தர் அநுபூதி, கந்தர் கலிவெண்பா, திருக்கயிலாய ஞானஉலா ஆகிய புத்தகங்களை 1950-ல், எண்.54, பந்தர் தெரு, சென்னை-1 எனும் முகவரியில் இயங்கி வந்த அமிர்தவசனி காரியாலயம் வெளியிட்டது. தற்போது எனக்கு அந்தப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. எங்கு தேடியும் அவை கிடைக்கவில்லை. அந்தப் புத்தகங்கள் இப்போதும் விற்பனையில் உள்ளதா? இருக்கிறது என்றால் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்தவர்கள், அதுபற்றி எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். அதேபோல், அந்தப் புத்தகங்கள் உங்களில் யாரிடமேனும் இருந்து, அவற்றை நகல் எடுத்து அனுப்பினாலும் மகிழ்வேன்.
- ஜி.அனந்தபத்மநாபன், பெங்களூரு-78
நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நிலக்கோட்டை அஹோபில பெருமாள் கோயிலில் உள்ள மூன்று வில்வ மரங்களையே குலதெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறோம். ஓராண்டுக்கு முன்பு பெய்த கன மழையில் அந்த மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. தற்போது, மரங்கள் இருந்த இடத்திலேயே பொங்கல் வைத்து வழிபடுகிறோம். எங்கள் முன்னோர்களின் வழியற்றியே நாங்களும் இந்த வழிபாட்டைத் தொடர்ந்தோம். எங்கள் குலதெய்வம் உருவமுள்ள தெய்வம்தான் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால், அது எந்த தெய்வம் என்பதுதான் தெரியவில்லை. நாங்கள் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். உங்களில் யாருக்கேனும் எங்களின் குலதெய்வம் பற்றித் தெரியும் என்றால், தகவல் தந்து உதவிட வேண்டுகிறேன்.
- எம்.பாலசுப்பிரமணி, மதுரை
சர்வாங்க சுந்தரீ ஸ்லோகம் படிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஸ்லோகம் கொண்ட புத்தகம் எங்கே கிடைக்கும் என்பது தெரியவில்லை. அந்தப் புத்தகத்தை எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது? எங்கே சென்றால் அந்தப் புத்தகத்தை வாங்கலாம்?
- ஆர்.சாந்தா, மதுரை
முருகப்பெருமானுக்குத் தொண்டுகள் பல செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெண் மகான்கள் பற்றிப் படிக்க ஆசைப்படுகிறேன். ஒளவையார், முருகம்மையார் தவிர, முருகப்பெருமானுக்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து அதிசயங்கள் நிகழ்த்திய பெண் மகான்கள் வேறு யார், யார்? இதன் விவரம் உங்களுக்குத் தெரியும் என்றால் அதுபற்றித் தகவல் தாருங்களேன்..!
- சி.சுந்தரேஸ்வரன், சென்னை-44


'நல்ல மருந்து மிக நல்ல மருந்து... சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து...’ என்கிற, ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி பற்றிய பாடல்கள் முழுமையாகத் தேவை என்று, 30.10.12 இதழில் சென்னை வாசகி எஸ்.இந்திரா கேட்டிருந்தார்.
திருச்சி வாசகர், ஓய்வுபெற்ற பேராசிரியர் டி.ஏ.சண்முகசுந்தரம் என்பவர் மேற்படி பாடல்களைக் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார். அந்தப் பாடல்கள் கொண்ட தொகுப்பு, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
'எனது தாயார் குதம்பாய் என்கிற பாடல்களை மிக அழகாகப் பாடுவார். இப்போது எனக்கு அந்தப் பாடல்கள் தேவைப்படுகின்றன. வாசகர்கள் உதவுவார்களா?' என்று, 30.10.12 இதழில் மும்பை வாசகி கே.சௌந்தரவல்லி கேட்டிருந்தார்.
'வாசகி கே.சௌந்தரவல்லி கேட்டிருந்த குதம்பாய் பாடல்களை இயற்றியவர் குதம்பைச் சித்தர். குதம்பை என்பது பெண்கள் தங்களது காதுகளில் அணியும் தொங்கட்டான் நகை.
குதம்பைச் சித்தரின் பாடல்களில், குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். அதனால், அவரைக் குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்' என்று தகவல் தெரிவித்துள்ள சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி, குதம்பாய் பாடல்களை நகல் எடுத்து அனுப்பி இருக்கிறார். அந்தப் பாடல்கள் வாசகி கே.சௌந்தரவல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
##~## |
'சுந்தர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 'ஸ்ரீசுந்தர லீலாமிர்தம்’ என்னும் புத்தகம் மற்றும் சுவாமிகளின் வரலாறு தொடர்பான மேலும் சில புத்தகங்கள், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரத வீதியில் உள்ள தேவார மடத்தில் உள்ளன. நேரடியாகச் சென்று மடத்தின் பொறுப்பாளரை அணுகினால், அந்தப் புத்தகங்களைப் பெற்றுப் படிக்கலாம்; தேவையானவற்றை நகல் எடுத்துக்கொள்ளலாம்'' என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் வாசகர் எஸ்.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
'தேவி பாகவதம் புத்தகம் படிக்க ஆசைப்படுகிறேன். அதை எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது?' என்று, 30.10.12 இதழில் விருதுநகர் வாசகி சி.ஆனந்திஜோதி கேட்டிருந்தார்.
'தேவி பாகவதம் புத்தகத்தை எல்.கே.எம். பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. பழைய எண் 15/4, புதிய எண் 33/4, ராமநாதன் தெரு, தியாகராயநகர், சென்னை-17 என்னும் முகவரியில் உள்ள இந்த பதிப்பகத்தை அணுகினால் மேற்படி புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்'' என்று சென்னை வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
'கார்த்திகேயன் என்பவர் தமிழில் உரைநடையாக எழுதிய தேவி பாகவதம் மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் எதிரே உள்ள கிரி டிரேடிங் கம்பெனியில் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்'' என்று செகந்திராபாத் வாசகி வெ.சியாமளா தெரிவித்துள்ளார்.