Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

Published:Updated:
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

கண்ணேறு வாராது பிணியன்று சேராது
கவலைப் படாது நெஞ்சம்
கலியாது சலியாது நலியாது மெலியாது
கலியென்ற பேயடாது
விண்ணேறும் அணுகாது கன்மவினை தொடராது
விஷமச் சுரம்வராது
வெய்ய பூதம் பில்லி வஞ்சனைகள் தொடரா
விடம் பரவு செந்துமடரா
எண்ணேறு சனனங்கள் கிடையாது காலபயம்
எள்ளளவுமே இரா(து)இவ்
ஏழைக் கிரங்கியருள் தெய்வமுனை யல்லாமல்
இன்னமொரு தெய்வமுளதோ!
தண்ணேறு கங்கைமலை மங்கை அருள் தங்கமே
சரச கோபாலன் மருகா
சதுர்மறைகளே தந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஸ்ரீசுப்பிரமணியர் திருவிருத்தம்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

மிழினில் உருகிய சரவணபவன் பேரருளைப் போற்றும் மேற்கண்ட அற்புதமான பாடலை இரண்டு முறையாவது படித்துப் பாருங்கள்... அந்த வரிகளில் உள்ள சொல்லழகும் பொருளழகும் நம் உள்ளத்தில் ஓர் ஒலி அதிர்வை உண்டாக்கும். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். தினமும் பாராயணம் செய்யத் தூண்டும்.

இந்தப் பாடலை பல ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் தினமும் பாராயணம் செய்து பலன் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பதிகத்தை அருளியவர் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் எனும் பேரருளாளர். தம் மீது மிகவும் அன்புகொண்ட பக்தர் ஒருவருக்கு ஏற்பட்ட குஷ்ட ரோகம் என்னும் கொடிய நோயை நீக்கியருளும்படி முருகப்பெருமானை வேண்டி சுப்பிரமணிய முனிவர் பாடியதுதான் இந்தப் பதிகம். அந்த அன்பரும் இதனைப் பாராயணம் செய்து நோய் நீங்கி இன்புற்றார் என்பது வரலாறு.

இனி, தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரைப் பற்றி அறிவோமா?

சைவர்களுக்குக் கோயில் என்றாலே, அது சிதம்பரம். தில்லை என்பது இந்த ஊரின் பெயர்; சிதம்பரம் என்பது கோயிலின் பெயர். இங்கே பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

இத்தகைய சிறப்புமிக்க சிதம்பரம் அருகில் காட்டுமன்னார்கோயில் என்றொரு ஊர் உள்ளது. இந்த ஊரில் வீரநாராயணப் பெருமாள் மேலவீதியில் கார்காத்த வேளாளர் குடியில் அவதரித்தவர் சுப்பிரமணிய முனிவர். இவரது காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர்.

##~##
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை உபாசனா மூர்த்தியாகக் கொண்டு வழிபட்டு வந்த தம் முன்னோர்களைப் போன்று சுப்பிரமணிய முனிவரும் இளம்வயதில் முருக பக்தியில் திளைத்தார். சிவஞான போதம் எனும் சித்தாந்த நெறியை வகுத்த ஸ்ரீமாதவ சிவஞான சுவாமிகள் காஞ்சிபுரத்தில் வசித்த காலத்தில், அவரிடம் மாணவராகச் சென்று தமிழ் இலக்கணம், இலக்கியம் என பலவற்றையும் கற்றார். சைவ சித்தாந்த சாத்திரத்தையும் அவரிடம் முறையாகப் பயின்றார். திருவாவடுதுறை ஆதீனத்தில் தவச்சீலராக விளங்கிய அம்பலவாண தேசிகரிடம் சைவ சந்நியாசமும், சிவதீட்சையும், ஞானோபதேசமும் பெற்றார்.

அக்காலத்தில் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய நூல்கள் உள்ள ஏட்டுச்சுவடிகள் சிலவற்றில் 'திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை நவசிவாய மூர்த்தி குருமரபில் அம்பலவாண தேசிகருடைய ஞானபுத்திரனார் சுப்ரமண்ய தம்பிரான் செய்தது’ என்று காணப்படுகிறது. அதாவது, சுப்பிரமணிய முனிவருக்கு ஞானோபதேசம் செய்வித்த அம்பலவாண தேசிகருக்கு அவர் ஞானப்புதல்வராக விளங்கினார் என்று அறிய முடிகிறது. இதிலிருந்தே அவரது தவப்பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்மைப் போன்றவர்கள், தமக்கு மேலானவர்கள் என்றிருந்த பல அறிஞர்களோடு இடைவிடாது பழகுதலிலும், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார் சுப்பிரமணிய முனிவர். கற்றோர் நிறைந்த அவையில் அருமையாகச் சொற்பொழிவாற்றும்போது இவரது புலமையையும் ஞானத்தையும் பக்தியையும் கண்டு பரவசமடைந்தனர் பொதுமக்கள். இவர் திருவாவடுதுறைப் பெருமான் மீது பாடியுள்ள 'திருவாவடுதுறைக் கோவை’ மிக அழகான பிரபந்தமாகும்.

கேட்பவர்கள் வியக்குமாறு மிகவும் இனிமையாக செய்யுள் இயற்றுவதிலும் வல்லவராக இருந்ததால், திருவாவடுதுறை ஆதீனத்தில் இவரை 'மதுரகவி’ என்ற சிறப்புப் பெயரால் அழைத்தனர். தொண்டை மண்டலத்தில் திருவள்ளூர் அருகில் உள்ள தொட்டிக்கலை என்ற தலத்தில் பெரும்பாலும் இவர் வசித்த காரணத்தால், இவரை 'தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்’ என்றே குறிப்பிடுவர்.

தொட்டிக்கலையில் வாழ்ந்த கேசவ முதலியார், வேதாசல முதலியார் என்ற இருவர் இவரை மிகவும் போற்றி ஆதரித்து வந்தனர். அத்தலத்தில் உள்ள ஸ்ரீசிதம்பரேசர் கோயில் அருகே மடம் ஒன்று கட்டி, அதில் சுப்பிரமணிய முனிவரை வசிக்கும்படி வேண்டி, தேவையான உதவிகளையும் செய்து வந்தனர்.

தொட்டிக்கலை ஊருக்கு கலைசை என்றும் பெயர் உண்டு. அந்தத் தலத்து இறைவன் மீது சிலேடை வெண்பா, சந்நிதிமுறை (29 பிரபந்தங்கள்), வண்ணம், பஞ்சரத்னம், பரணி, கட்டியம் முதலான பல்வேறு வகைச் சிற்றிலக்கியங்களைப் பாடியுள்ளார் சுப்பிரமணிய முனிவர். தவிர, தொட்டிக்கலைக்கு அருகில் உள்ள ஆயலூர் முருகப்பெருமான் மீது பிள்ளைத்தமிழ், தொண்டை நாட்டு பாலாற்றின் வடகரையில் உள்ள ஆவினன்குடி கயிலாய நாதர் மீது பதிற்றுப்பத்தந்தாதி முதலியனவும் இயற்றியுள்ளார்.

தமது வித்யாகுருவான ஸ்ரீசிவஞான முனிவருடைய திருவுருவை தொட்டிக்கலை சிதம்பரேசர் திருக்கோயிலில் சந்நிதி மண்டபத்தில் அமைத்து, அதனை நாள்தோறும் போற்றி வழிபட்டதோடு, அவர் மீதும் ஞானகுரு மீதும் பல விருத்தங்களைப் பாடியுள்ளார். இவர் சென்னையில் உள்ள கோயில்களை தரிசித்த காலத்தில், வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி பிள்ளைத்தமிழ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

செந்தில் ஆண்டவன் இவரை அழைத்து, சந்தவிருத்தம் என்னும் பாமாலையைப் பாட வைத்துச் சூடி மகிழ்ந்தான். பழநி முருகனைத் தரிசித்தபோது 'பழநிக் குழந்தைவேலர் பஞ்ச ரத்னமாலை’யால் போற்றி மகிழ்ந்தார். திருக்குற்றாலத்தைத் தரிசித்தபோது, அங்குள்ள சித்ரசபையின் அழகை 'சிவகாமவல்லிமகிழ் சித்ரசபை தன்னில் திருச்சிலம்பொலிதர திருநடம்புரிவரதனே’ என்ற பதிகம் மூலமாக வியந்து போற்றினார்.

ஒருமுறை, சுப்பிரமணிய முனிவர் திருத்தணிகைத் திருமுருகனைக் காணச் சென்றபோது, அங்கே பார்வையற்ற ஓர் அன்பர் அருணகிரிநாதரது திருப்புகழை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது 'பதியான திருத்தணிமேவும் சிவலோகம் எனப்பரிவேறு பவரோக வைத்தியநாதப் பெருமாளே’ என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளது இவரது சிந்தனைக்கு வந்தது. உடனே 'திருத்தணிகைத் திருவிருத்தம்’ என்னும் பதிகத்தால் திருத்தணி முருகப்பெருமானை பாடி மகிழ்வித்தார்.

'பன்னரிய உன் அற்புதத் திருப்புகழை பகர்ந்துகொண்டு உன் திருமலைப் படிஏறும் அன்பர்வினை பொடியாகும் என்று நிறைமொழி மாந்தர் பகருவது கேட்டு என்னுடைய பொல்லாத சஞ்சிதப் பிணி ஒழித்து எனையும் வாழ்வித்தருள்க என்று இரவு- பகல் உன் அருள் சந்நிதியில் வந்து முறையிடுவோருக்கு இரங்கி அருள்வாய்....’ என்ற இந்தப் பதிகத்தை பார்வையற்ற அந்த அன்பர் பாராயணம் செய்து, தணிகேசன் திருவருளால் கண் ஒளி பெற்றுப் பேரானந்தம் அடைந்தார்.

முருக பக்தியில் திளைத்த சுப்பிரமணிய முனிவரது ஸ்ரீசுப்ரமணியர் திருவிருத்தம், திருத்தணிகை திருவிருத்தம் முதலான பதிகங்களைப் பாராயணம் செய்தால் நாமும் முருகப்பெருமானின் பேரருளைப் பெற்று இன்புற்று வாழலாம்!

அழகமர் கலைசை கோவை ஆவடுதுறையின் கோவை
பழநியங் குழந்தைவேலன் பஞ்சரத் தினமும்பாடி
மழைதவழ் தணிகை சுப்ரமண்ய விருத்தம் சாற்றி
விழைவுரு சுப்ரமண்ய வித்தகன் நற்றாள் வாழி!

- ஈ.வே.வேங்கடசுப்ரமண்யம்

- அடியார் வருவார்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism