சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம்... வாருங்கள்!

குழந்தையானந்த சுவாமிகளின் வரலாற்றைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். காசியில், கங்கைக்கரையில் இருந்த திரிலிங்க சுவாமிகள்தான் இவர் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் இவருக்கு நேபாளம், தென்காசி, மதுரைக்கு அருகில் உள்ள சமயநல்லூர், வத்தலகுண்டு ஆகிய இடங்களில் சமாதி இருப்பதாகவும் சொல்கிறார்கள். எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. குழந்தையானந்த சுவாமிகளின் வரலாறு முழுமையாக உள்ள புத்தகம் உங்களிடம் இருந்தாலோ அல்லது எங்கு கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்தாலோ எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். அதோடு, குழந்தையானந்த சுவாமிகளின் வம்சாவளியினர் எவரேனும் இருப்பதாக நீங்கள் அறிந்து அந்தத் தகவலைத் தெரிவித்தாலும், நான் அவர்களைத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரிக்க வசதியாக இருக்கும். உதவுவீர்களா வாசகர்களே?

- பா.சௌந்திரபாண்டி, மதுரை-1

##~##
ங்களின் பூர்வீகம் தென்காசி அருகில் உள்ள ஆய்க்குடி கிராமம். இங்கே அனுமன் நதிக்கரையில் அமைந்திருக்கும் பாலசுப்ரமணிய ஸ்வாமியை இதுநாள் வரையில் குலதெய்வமாக எண்ணி வழிபாடு செய்து வருகிறோம். அண்மையில் ஜாதகம் பார்த்தபோது, முருகக்கடவுள் குலதெய்வமாக இருக்க வாய்ப்பில்லை என்று ஜோதிடர் கூறினார். அதோடு மேற்கூரை, பெரிய கட்டடம் போன்று எதுவும் இல்லாமல் குளக்கரையில் வீற்றிருக்கும் சாஸ்தா, பெண் தெய்வம் போன்றவர்கள்தான் உங்களது குலதெய்வமாக இருக்க முடியும் என்றும் ஜோதிடர் தெரிவித்தார். இதன்படி, எங்களது குலதெய்வம் எது என்பது உங்களுக்குத் தெரியும் என்றால், எனக்கு தகவல் தாருங்களேன்!

- ரா.பாஸ்கரன், பெங்களூரு-60

னக்கு 'சிவப்பிரதிஷ்டை விதி’ என்ற வழிபாடு அல்லது கிரந்தத்தில் உள்ள அல்லது தமிழாக்கம் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் கொண்ட புத்தகம் தேவைப்படுகிறது. அதோடு, சண்டிகேஸ்வரர் அஷ்டோத்திரமும் தேவை. இந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?

- கி.ராஜகோபாலன், சென்னை-92

முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவன் நான். இப்போது திருமுருகனின் அருமைகளையும் பெருமைகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இதற்காக திருமுருகனின் ஆகமமான 'குமார தந்திரம்’ தேவைப்படுகிறது. பல இடங்களில் கேட்டும் அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. இது உங்களில் யாரிடமாவது இருக்கிறது என்றாலும், அல்லது எங்கே கிடைக்கும் என்று தெரிந்தாலும், அதுபற்றி எனக்குத் தகவல் தந்து உதவுங்களேன்..!

- சு.கார்த்திகேயன், மதுரை-11

னக்கு நடராஜர் பத்து, துர்கா புஜங்கம், தேவி மானஸ பூஜா ஆகிய புத்தகங்கள் தேவைப்படுகின்றன. இவற்றைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவை எங்கே கிடைக்கும்?

- வெ.சியாமளா ரமணி, செகந்திராபாத்-9

நான் மீஞ்சூர் ஸ்ரீமங்களாம்பிகை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நான்காவது செவ்வாய் அன்று திருவிளக்கு பூஜை நடத்தி வருகிறேன். கடந்த 12 ஆண்டுகளாகச் செய்து வரும் இந்த இறைப்பணியில் காமாட்சி விளக்கு பூஜை, குபேர விளக்கு பூஜை, கூத்து விளக்கு பூஜை மற்றும் குருவாயூர் விளக்கு பூஜையை மாற்றிமாற்றி செய்து வருகிறேன். தற்போது, நவரத்தின விளக்குபூஜை செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இந்தப் பூஜை பற்றிய முழு விவரம் எனக்குத் தேவைப்படுகிறது. அந்த வழிபாட்டு முறை பற்றி நீங்கள் அறிந்திருந்தால் எனக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். அல்லது, அதுபற்றி புத்தகம் ஏதும் உள்ளது என்றால், அது எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தந்தால் மிகவும் மகிழ்வேன்.

- ஏ.ஆர்.லோகநாதன், மீஞ்சூர்

மிழில் ஏராளமான பிள்ளைத் தமிழ் நூல்கள் இருப்பதை அறிவேன். எனக்கு இப்போது மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ், மணவைத் திருவேங்கடமுடையான் பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், திருவெண்ணெய்நல்லூர் வைகுந்தநாதர் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் தேவைப்படுகின்றன. அவை எங்கு கிடைக்கும்? இதேபோல், மீனாட்சி அம்மன் கோயில்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளதாக அறிகிறேன். எந்தெந்த ஊர்களில் அவை உள்ளன என்கிற விவரமும் எனக்குத் தேவை.

- அவினாசி முருகேசன், காரமடை

உதவிக்கரம் நீட்டியவர்கள்

உதவலாம்... வாருங்கள்!

'ஆதிசங்கரர் அருளிய சுப்ரமணிய கராவலம்பம் மற்றும் லட்சுமிநரசிம்மரின் கராவலம்பம் ஆகியவற்றைத் தமிழில் படிக்க ஆசைப்படுகிறேன். அவை உங்களிடம் இருந்தால் அனுப்பிவையுங்களேன்...' என்று, 27.11.12 இதழில் சென்னை வாசகர் வி.சதாசிவம் கேட்டிருந்தார்.

மேற்படி வாசகர் கேட்ட ஸ்லோகங்களை சென்னை வாசகி இராஜேஸ்வரிமதி பிரதி எடுத்து அனுப்பிவைத்துள்ளார். அந்தப் பிரதிகள் வாசகர் வி.சதாசிவத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

'ஸ்ரீலட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம், ஸ்வாமிநாத கராவலம்ப அஷ்டகம் ஆகியவை, 'சகல சௌபாக்யங்களும் தரும் ஸ்தோத்ரமாலா பாகம்-1’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் கம்பெனியில் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்'' என்று, சென்னை வாசகி மீனலோசனி தெரிவித்துள்ளார்.

இதேபோல், பெங்களூரு வாசகர் எஸ்.சண்முகம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தையும், ஸ்ரீசுப்ரமண்ய அஷ்டகத்தையும் நகல் எடுத்து அனுப்பி இருக்கிறார். இதுவும் சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

'தேவி பாகவதம் படிக்க ஆசைப்படுகிறேன். எந்தப் பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது?' என்று, 30.10.12 இதழில் விருதுநகர் வாசகி சி.ஆனந்திஜோதி கேட்டிருந்தார்.

'கேதாரீச்வர சர்மா என்பவர் ஸ்தோத்திரங்களுடன் தொகுத்த தேவி பாகவதம், 'ஸகல காரிய ஸித்தியும், ஸ்ரீதேவி பாகவதமும்’ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் இயங்கிவரும் 'தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி’ இதை வெளியிட்டுள்ளது. சென்னையில், ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்திலும் இதை வாங்கலாம்'' என்று, பெங்களூரு வாசகி எஸ்.தாரிணி தெரிவித்துள்ளார்.