

கவியோகி சுத்தானந்த பாரதி இயற்றிய நூல்கள் முழுவதையும் படிக்க ஆவலாக இருக்கிறேன். அவரது புத்தகங்களை எந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது? எந்தெந்த இடங்களில் அவற்றை வாங்கலாம்? உங்களுக்குத் தெரியும் என்றால், எனக்கு தகவல் தந்து உதவுங்களேன்..!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- பா.சௌந்திரபாண்டி, மதுரை-1
'முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்’ தொடரில் வெளியான தொட்டிக்கலை சுப்ரமணிய முனிவர் இயற்றிய 'ஸ்ரீசுப்ரமணியர் திருவிருத்தம்’ நூலை படிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அந்த நூல் எங்கே கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை. உங்களில் யாரிடமாவது அந்த நூல் இருந்தால் எனக்கு அனுப்பி உதவுங்கள். அல்லது, அந்த நூல் எங்கே கிடைக்கும் என்று தகவல் சொன்னாலும் மகிழ்வேன்.
- எஸ்.ஹரித்ரா, உடுமலைப்பேட்டை
என்னுடைய மகளின் கணவர் வீட்டார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டையை பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது எனது மகள், அவளது கணவர், குழந்தையுடன் திருப்பூரில் வசித்து வருகிறாள். இவர்களது குலதெய்வம் 'களக்கோடி அய்யனார்’ என்று சொல்கிறார்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாததால் என் மகளின் மாமனார், மாமியாருக்கு அந்த குலதெய்வத்தின் கோயில் எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில்தான் அந்தக் கோயில் இருக்க வேண்டும் என்கிறார்கள் உறவினர்கள். ஆனால், எங்களுக்கு அதுபற்றிய தகவல் தெரியவில்லை. களக்கோடி அய்யனார் என்கிற பெயரில் அமைந்துள்ள அந்தக் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கே உள்ளது? திருநெல்வேலி மாவட்ட அன்பர்கள் அல்லது அதுபற்றிய விவரம் தெரிந்தவர்கள், எனக்கு அதுபற்றி தெரிவித்து, என் மகள் வீட்டாரின் குலதெய்வ வழிபாடு தடைபடாமல் தொடர உதவி செய்வீர்களா?
- எஸ்.சித்திவிநாயகம், சாத்தூர்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அருள் நூல்களில் ஒன்றான 'குவிபா ஒருபது’ என்கிற நூல், தமிழ் நூல்களில் இதழ் முயற்சியால் உதடு ஒட்டுதலும், குவிதலும் உண்டாகிற 119 எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி உருவான நூல் என்று அறிந்தேன். அந்த 119 எழுத்துகள் எவை என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். அதோடு, குவிபா ஒருபது நூல் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் கிடைத்தாலும் மகிழ்வேன்.
- ஏ.வைத்தியநாதன், சென்னை-44
நாங்கள் தமிழ் பேசும் ஆயிர வைசியர் (நகரம்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு குலதெய்வம் எது என்பது தெரியவில்லை. அதனால், பழநி முருகப்பெருமானை குலதெய்வமாக வணங்கி வருகிறோம். எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொன்னபடி, சேலம் கந்தாஸ்ரமத்தின் மலையில் இருந்து ஒரு கல்லை எடுத்துவந்து, மகா சிவராத்திரி அன்று அதற்கு பூஜை செய்வதை கடந்த 2 வருடமாக வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால், எங்களது குலதெய்வம் வேறு தெய்வம் என்று சிலர் சொல்கிறார்கள். அதன்படி, எங்களது குலதெய்வம் எது என்பது உங்களுக்கு தெரியும் பட்சத்தில், அதை எனக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
- வி.விஜயகுமார், அஸ்தம்பட்டி
கச்சியப்பரின் மாணவர்களுள் ஒருவரான கந்தப்ப ஐயருக்கு வயிற்றில் குன்மநோய் ஏற்பட்டு மிகவும் வருந்தியதாகவும், கச்சியப்ப முனிவர் தணிகைக்குமரன் அருள்கொண்டு 'தணிகை ஆற்றுப்படை’ எனும் அற்புதமான பிரபந்தத்தை பாடியருளி அவரது குன்மநோயை நீக்கினார் என்றும் அண்மையில் படித்தேன். சக்திமிக்க தணிகை ஆற்றுப்படை பிரபந்தத்தை நானும் படிக்க ஆசைப்படுகிறேன். அது எங்கே கிடைக்கும்?
- ஜி.தண்டபாணி, சிதம்பரம்
'நவராத்திரி கீர்த்தனைகள்’ என்ற நூலில் ஸ்ரீலலிதா நவாவர்ணம் என்று, அம்பாளின் மீது பாடப்பெற்ற 9 கீர்த்தனைகள் ஸ்லோகத்துடன் இடம்பெற்றுள்ளதைப் படித்தேன். இந்த நவாவர்ணக் கீர்த்தனைகள் இசை வடிவில் குறுந்தகடாக வெளிவந்துள்ளதா? வெளிவந்துள்ளது என்றால், அவை எங்கே கிடைக்கும்?
- சி.ஹேமா கோவிந்தராஜன், சென்னை-33
ரமணி அண்ணா எழுதிய 'அனுபவம் ஆயிரம்’ என்கிற நூலையும், திருக்கடவூர் சுப்ரமணியபட்டரின் வரலாறு மற்றும் அபிராமி அம்மன் கோயிலில் நிகழ்ந்த அற்புதங்கள் என்கிற நூலையும் படிக்க விரும்புகிறேன். இந்த 2 புத்தகங்களையும் யாரேனும் அனுப்பிவைத்தால் மகிழ்வேன். அல்லது, அந்தப் புத்தகங்களை எந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்று சொன்னாலும் நல்லது.
- எம்.சுப்ரமணியன், செங்கோட்டை
உதவிக்கரம் நீட்டியவர்கள்!

'ஒரு புத்தகத்தில் 'திருக்கோளுர் பெண் பிள்ளை ரகசியம்’ என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று படித்தேன். 81 புராண- இதிகாச கதைகளைக் கொண்ட அந்த புத்தகம் எங்கே கிடைக்கும்'' என்று, 11.12.12 இதழில் திருவள்ளுர் வாசகி செஞ்சுலக்ஷ்மி கேட்டிருந்தார்.
'திருக்கோளுர் பெண் பிள்ளை ரகசியம் புத்தகம், எண்.29, திலக் தெரு, தியாகராயநகர், சென்னை-17 என்கிற முகவரியில் இயங்கி வரும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தில் கிடைக்கும்'' என்று சென்னை வாசகர் ச.இராசகோபாலன் தெரிவித்துள்ளார்.
'கந்தர் அநுபூதி, கந்தர் கலிவெண்பா, திருக்கயிலாய ஞான உலா ஆகிய புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன' என்று, 27.11.12 இதழில் பெங்களூரு வாசகர் ஜி.அனந்தபத்மநாபன் கேட்டிருந்தார்.
'நடராசன் என்பவர் கந்தர் அநுபூதி, கந்தர் கலிவெண்பா, திருக்கயிலாய ஞான உலா ஆகிய நூல்களுக்கு உரை எழுதி இருக்கிறார். இவர் எழுதிய நூல்கள் சென்னை மயிலாப்பூரில் இயங்கிவரும் கிரி டிரேடிங் கம்பெனியில் கிடைக்கின்றன' என்று, சென்னை வாசகர் பத்மினி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
'நவதுர்கை ஆலயம் எந்த ஊரில் இருக்கிறது? அதுபற்றிய விவரம் தேவை' என்று, 11.12.12 இதழில் பொள்ளாச்சி வாசகி டி.ராஜேஸ்வரி கேட்டிருந்தார்.
'நவதுர்கைக்கு பொள்ளாச்சியிலேயே கோயில் இருக்கிறது. அங்குள்ள குன்னத்தூரில், ஊத்துக்குளி செல்லும் பிரதான சாலையில், சங்கு மாரியம்மன் கோயில் தெருவில் அந்தக் கோயில் அமைந்துள்ளது. சென்னையில், தாம்பரம் அருகில் உள்ள சேலையூரிலும் நவதுர்கைக்கு கோயில் இருக்கிறது' என்று தெரிவித்துள்ள சென்னை வாசகர் கே.பாலா கனகராஜ், காமாட்சி அம்மனின் ஆயிரம் போற்றிகளை நகல் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இது, சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.