
காலா யுதத்தான் மெய் கண்டவே லாயுதன்மேல்
வேலா யுதச் சதக மேயுரைக்கச் - சேலார் கண்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கும்பதனச் சம்பீரமக் கொம்பிமயத் தம்பிகைசொற்
கம்பமதத் தும்பிமுகன் காப்பு!
##~## |
'அழகுமுத்து! ஐயா அழகுமுத்து!'' - ஸ்ரீமெய்கண்ட வேலாயுதர் கோயில் குருக்கள், இப்படி அந்த அழகுமுத்துவைத் தேடியபோது, அவரைக் காணவில்லை. 'கோயில் அர்த்தஜாம பூஜை முடிந்தபின், முருகப்பெருமானின் நைவேத்திய பிரசாதம் மட்டுமே உட்கொளும் வழக்கம் உடையவர் ஆயிற்றே அழகு முத்து! இன்று எங்கே போனார்?’ என்று யோசித்த குருக்கள், அவர் வராத காரணத்தால்... ஏதோ வேலையாக வெளியில் சென்றிருப்பார் என்று எண்ணிக் கோயில் கதவை பூட்டிவிட்டுத் தமது இல்லம் சென்றுவிட்டார்.
இதையடுத்து என்ன அற்புதம் நடந்தது என்பதைப் பார்க்கும் முன், யார் இந்த அழகுமுத்து என்பதைப் பார்த்துவிடுவோம்.
'திருநாகைக் காரோணம்’ என்று தேவார மூவரால் பாடல்பெற்ற நாகப்பட்டினம், சப்தவிடங்தத் தலங்களில் ஒன்று. இங்கு நீலாயதாட்சி அம்பிகையுடன் காயாரோகண ஸ்வாமி காட்சியளிக்கிறார். இத்தலத்தில் அமைந்துள்ள மெய்கண்ட வேலாயுதசுவாமி திருக்கோயிலில் மெய்க்காவல் வேலை பார்த்து வந்தவர்தான் இந்த அழகுமுத்து.
சிறுவயதில் அவருக்கு உடலில் மேகரோகம் என்னும் தோல் நோய் ஏற்பட்டு, பலவித வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. எனவே, அவரது பெற்றோர் அவரைக் கல்விக்கூடத்துக்கு அனுப்பவில்லை. அவரது தந்தையார் இந்த வேலாயுத ஸ்வாமி கோயிலில் பணியாற்றி வந்தார். இளமைப் பருவம் முதற்கொண்டு குமாரக் கடவுளிடம் அன்பு பூண்டு, தமது தந்தையுடன் கோயில் பணிகளை ஆர்வமுடன் செய்வார் அழகுமுத்து. தந்தையின் மறைவுக்குப் பின் அவர் பார்த்து வந்த மெய்க்காவல் வேலையை இவரிடம் ஒப்படைத்தனர் கோயில் நிர்வாகிகள். அழகுமுத்து சில நேரங்களில் தன்னை மறந்து முருகப்பெருமானை நினைத்து தியானத்தில் ஈடுபடுவார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் இவரிடம் அன்பும் ஆதரவும் காட்டுவார்கள்.

சரி, இனி விஷயத்துக்கு வருவோம்...
திடீரென்று காணாமல் போன அழகு முத்து எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்? அன்று அர்த்தஜாம பூஜை நேரத்தில், உடல் அசதி காரணமாக வாகன மண்டபத்தில் சற்றுக் கண் அயர்ந்துவிட்டார். அதனால்தான் குருக்கள் இவரை அழைத்தும் வரவில்லை.
நள்ளிரவில் திடீரென்று கண் விழித்த அழகுமுத்து, கோயில் கதவுகள் தாளிடப் பட்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். இரவில் சாப்பிடாததால் பசி மயக்கம் ஒரு பக்கம் காதை அடைத்தது. செய்வதறியாது திகைத்தவர், மெய்கண்ட வேலாயுத ஸ்வாமி யிடமே முறையிட்டு அழுதார். மீண்டும் துயில் கொண்டார். அவரின் கனவில் கந்தவேள் தோன்றினார். ''அழகுமுத்து! நீ மிகவும் பசியுடன் இருக்கிறாய். இதோ... உனக்கு உணவு கொண்டு வந்துள்ளேன். இதைச் சாப்பிட்ட பின் ஏதாவது பாட்டுப் பாடேன்'' என்றார் கந்தவேள்.
அதேநேரம், ''அழகுமுத்து... அழகுமுத்து...'' என்று அவரை எழுப்பினார் கோயில் குருக்கள். சட்டென்று கண் விழித்த அழகுமுத்து, தனக்கு தினமும் பிரசாதம் தரும் குருக்கள் அருகில் நிற்பதைக் கண்டார். அந்த குருக்கள் வேறு யாருமல்ல; சாட்சாத் முருகப்பெருமானேதான்! இது தெரியாமல், அவரிடம் நடந்ததைச் சொல்லி, சாப்பிட பிரசாதம் கேட்டார் அழகுமுத்து. குருக்களும் அதைத் தர, ஆர்வமாய் வாங்கி வேகமாய்ச் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக்கொண்டார்.

பிரசாதத்தை சாப்பிட்ட மாத்திரத்தில், அழகுமுத்துவின் உடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதுநாள்வரை அவரது தேகத்தில் இருந்த நோய் நீங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதோடு, அவரது உடல் பிரகாசித்தது.
நடந்த அற்புதங்களால் அழகுமுத்து பேரின்பப் பெருவெள்ளத்தில் திக்கு முக்காடிய நிலையில் இருக்க... ''அழகுமுத்து! ஏதாவது பாடலைப் பாடுவாயாக!'' என்றார் குருக்களாக வந்த கந்தவேள்.
''ஐயா! நான் சிறு வயதிலிருந்து கல்விக் கூடம் சென்றதில்லை; படிப்பறிவில்லா மூடன் நான். இலக்கண இலக்கியம் எதுவும் தெரியாத என்னால் எப்படிப் பாடமுடியும்?'' என்று பதில் சொன்னார் அழகுமுத்து.
அவரிடம் பாடல் பாடு என்று கேட்டவர் தண்டமிழின் மிக நேயனான முருகப்பெருமான் அல்லவா? முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் அந்த வடிவேலன் பன்னிரு கரங்களுடன் வேடமங்கை, வேழமங்கை சமேதராக மயில் வாகனத்தில் காட்சியளித்தார். ''அழகுமுத்து! என்னைக் குறித்துப் பாடு' என்றார் மறுபடியும்!
தன்னைத் தேடி வந்து பிரசாதம் தந்தது கருணைக் கடவுள் கந்தனே என்பதை அறிந்த அழகுமுத்துவுக்குள் கவிபாடும் ஆற்றல் பெருக்கெடுத்தது. கந்தவேள் குறித்துப் பாமாலை சூட ஆரம்பித்தார்.
'கனவுக்குளே நீவந்து எனைக்
கலை ஓதுஎனக் கற்பித்தும்
நினைவுக்குளே கண்டேன் அலால்
நினைவுக்கு அது நிசமல்லவே
சுனையுற்ற நீர்நிழல் அல்லவே
தோன்றாத் துணையாய் நின்றிடு
வினயத்தை என் சொல்வேன்
ஐயா! வேலாயுதா வேலாயுதா!'
என்று தொடங்கி, நூறு பாடல்களைப் பாடி கவிமழையாய்ப் பொழிந்தார் அழகுமுத்து.
மறுநாள் காலையில் கோயில் கதவு திறக்கப்பட்டது. காளமேகம் போன்று சந்தக்கவி பாடிக்கொண்டிருந்த அழகுமுத்துவைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். அவரது பக்தித் திறத்தைக் கண்டு மெய்சிலிர்த்தனர். வியந்து போற்றினர். அன்று முதல் அவரை 'அழகுமுத்துப் புலவர்’ என்றே அழைக்கத் தொடங்கினர்.
இப்படி, முருகப்பெருமானின் அருளால் புகழடைந்த அழகுமுத்துப் புலவர், 'மெய்கண்ட வேலாயுத சதகம்’ என்னும் நூறு அருமையான பாடல்களைப் பாடியதுடன், குமாரக்கடவுள் மீது 'திறப்புகழ்’ என்னும் நூறு சந்தப்பாடல்களையும் அற்புதமாகப் பாடி, அதை அழகன் முருகனுக்கு அணிவித்தார்.
''இலக்கணக் கவிராசர்கள் துதிக்கு முத்தமிழ் மேல் மனம் இரக்கம் வைத்திடு நாகையில் முருகோனே...'' என்று, சந்தம் கொஞ்சும் முறையில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'முருகோனே..’ என்று முடியும் வகையில் இவரது பாடல்கள் நூறு வித சந்தத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெய்கண்ட வேலாயுத சதகமும், திறப்புகழ்ப் பாடல்களும் பாடப்பாட இனிக்கும்; பாடுங்கால், பரிவுடன் கேட்க மிக இனிக்கும். வேலன் அருள்சுரக்கும் பெருமையுடையது. (இவ்விரு நூல்களையும் அச்சிட்டு அளிக்க விரும்பும் அன்பர்கள் கட்டுரை ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.) அழகுமுத்துப் புலவர் நாகை காயாரோகண ஸ்வாமி மீது 'காயாரோகணக் குறவஞ்சி’ என்னும் நூலையும் இயற்றியுள்ளதாகத் தெரியவருகிறது.
நாகை மெய்கண்ட வேலாயுதப் பெருமான் திருவருள் பெற்றநாள் முதல் இவர் தியானமும் தவமும் மேற்கொண்டார். சிறந்த ஒழுக்கசீலராகத் திகழ்ந்த இவர், பாரதத்தின் பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த சீர்காழிப் பதியில் இறைவனை தரிசித்தார். அக்கோயிலுக்கு அருகில் உள்ள சேனைத்தலைவர் மரபினர் திருமடாலயத்தில் இருந்தபடியே வேலாயுதப் பெருமான் திருவடியில் கலந்தார்.
அவர் குகப்பெருமான் திருவருளில் கலந்தது சித்திரை மாதம் சதயம் நட்சத்திர தினமாகும். அதே நாளில், அதே நேரத்தில் நாகை மெய்கண்ட வேலவர் சந்நிதியில் சாயரட்சை (மாலைநேர) தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. அப்போது பக்தர்கள் பலரும் பார்த்த வண்ணமிருக்க அழகுமுத்துப் புலவர் கந்தவேள் சந்நிதிக்குள் நுழைந்தார். ஆனால், திரும்பி வெளிவரவில்லை. இந்த அதிசயத்தைப் பார்த்த அனைவரும் பரவசமடைந்தனர். அதேநேரம், சீர்காழியில் அவர் அப்போது பரிபூரணம் அடைந்தது, பிறகுதான் அனைவருக்கும் தெரியவந்தது.
அழகுமுத்துப் புலவர் வாழ்வில் முருகப்பெருமான் நிகழ்த்திய இந்த அற்புதத்தை என்னென்பது?!
அழகுமுத்துப் புலவரின் திருவுருவம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா தாளமுடையார் கோயில் அருகில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர் பாடியுள்ள திறப்புகழ் 100-வது பாடலில்,
''வாரிதி முழங்கு நாகை ஆலய மிகுந்துவாழி
மாதுகுற மங்கைவாழி கயமாது
வாழியதி தொண்டர்வாழி நாகைவரு ரெங்கன்வாழி
வாழுதி மெய்கண்ட வேல் முருகோனே..!''
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 'நாகைவரு ரெங்கன்’ எனக் குறிப்பிடப்பெறும் அன்பர் புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கத்தில் துபாஷாகப் பணியாற்றிய ஆனந்த ரெங்கம்பிள்ளை என்று அறியமுடிகிறது. மெய்கண்ட வேலாயுதக் கடவுள் மீது மிகுந்த பக்தியுடையவர் பிள்ளையவர்கள். அவர் ஒரு (சனிக்கிழமை) நாள் எண்ணெய் தேய்த்து நீராடி, அன்றிரவு உறங்கும்போது, மெய்கண்ட வேலர் அவரது கனவில் தோன்றி ''நீ மட்டும் மணம் வீசும் எண்ணெய் ஸ்நானம் செய்து சுகம் பெறலாமா?'' என்று கேட்க, மறுநாள் முதல் முருகப்பெருமானுக்கு விசேஷ தைலாபிஷேகம் செய்ய பிள்ளையவர்கள் ஏற்பாடு செய்தாராம். இவர் 1750-ல் இத்திருக்கோயிலில் திருப்பணி செய்ததாக அறிய முடிகிறது.
அழகுமுத்துப் புலவரை அருட் கவியாக்கிய அழகன் முருகனைத் தரிசிக்க நாமும் ஒருமுறை நாகையம்பதிக்குச் சென்று வரலாம் அல்லவா?
குகவாழி! செந்தூர் ஆவினன்
குடிவாழி! புட் கொடிவாழி! சண்
முகவாழி! சூர்ப் பகைவாழி! உன்
முன்வாழீ நீபம் சேரு மார்
பக வாழி! இச் சதகந்தனைப்
படித்தோர்களும் கற்றோர்களும்
மிகவாழி! வேல் மயில் வாழியே!
வேலாயுதா! வேலாயுதா!
- மெய்கண்ட வேலாயுத சதகம்
- அடியார் வருவார்...