Published:Updated:

கும்பாபிஷேகத்துக்கு வாருங்கள்!

கும்பாபிஷேகத்துக்கு வாருங்கள்!

கும்பாபிஷேகத்துக்கு வாருங்கள்!

கும்பாபிஷேகத்துக்கு வாருங்கள்!

Published:Updated:
கும்பாபிஷேகத்துக்கு வாருங்கள்!
##~##

'வேம்ப வனமாகத் திகழ்ந்த அந்த ரம்மியமான இடத்தில் சிவனாரை நினைத்து, 'இந்த தேசம் செழிப்பதற்கு என் சிவனே, நீதான் காரணம்’ என்று மெய்யுருகிச் சொன்னான் சோழ மன்னன். வேப்ப மரத்தில் இருந்து விழுந்திருந்த வேப்பம்பழங்கள் யாவும் சின்னச் சின்ன சிவலிங்கங்களாகத் தோன்றின. சந்தோஷத்தில் திளைத்துப் போன மன்னன், அந்த வேம்ப வனத்தில் அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்பினான்’ என்று, கடந்த 6.3.12 இதழில் 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தது நினைவு இருக்கிறதா? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது வேப்பத்தூர். பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகயிலாச நாதர் கோயில். 'வேப்பத்தூர் ஆலயத்தில் வேத கோஷம் எப்போது?’ எனும் தலைப்பில் எழுதியிருந்த இந்தக் கோயில் பற்றிய தகவல்களைப் படித்துவிட்டு, கோயிலின் தற்போதைய நிலை அறிந்து, வாசக அன்பர்கள் பதறிப் போனார்கள்.

கும்பாபிஷேகத்துக்கு வாருங்கள்!

பன்னெடுங்காலமாக கும்பாபிஷேகமோ திருப்பணிகளோ ஏதுமின்றி, தன் மொத்தக் களையையும் இழந்து காணப்படுகிறது கோயில் என்றும், கோயிலும் அருகில் குளமும் என அழகுடன் திகழ்ந்தாலும் ஆலயத்தின் மதில், சந்நிதி, பிராகாரம் என அனைத்துமே விரிசலுற்று, சிதிலமுற்று, புல்- பூண்டுகள் முளைத்துக் காட்சி தருகின்றன என்றும் அந்தக் கட்டுரையில் வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததைப் படித்துவிட்டு, மளமளவென தங்களால் இயன்ற நிதியைத் தரத் துவங்கினார்கள், வாசகர்கள்.  

'அகத்தியருக்கும் லோபாமுத்திரைக்கும் இங்குதான் திருமணம் நடந்தேறியது. அந்தத் தம்பதிக்கு, தம்பதி சமேதராக நின்று சிவ-பார்வதி காட்சி தந்தருளினர் என்கிறது ஸ்தல புராணம். ஆகவே, இல்லறம் சிறக்கச் செய்யும் தலம் இது என்பதையும், இது இப்போது கல்யாணக் களையை இழந்து நிற்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

'வேப்பத்தூருக்கு அருகில் உள்ள திருவிசநல்லூர், கோவிந்தபுரம், மருதாநல்லூர் ஆகிய தலங்கள் உள்ளன; திருவிசநல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரத்தில் ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், மருதாநல்லூரில் ஸ்ரீசத்குரு சுவாமிகள் ஆகியோர் வாழ்ந்தனர்; அவர்களின் அதிஷ்டானங்கள் அந்தந்த ஊர்களில் இருக்கின்றன; இந்த மூன்று மகான்களும் இந்த வேப்பத்தூருக்கு வந்து, ஸ்ரீகயிலாசநாதரையும் ஸ்ரீகாமாட்சி அம்பாளையும் தரிசித்துள்ளனர்; அத்தனை பெருமை மிகுந்த ஆலயம் இது’ என்று ஸ்ரீவேங்கடாசலபதி டிரஸ்ட் அன்பர்கள் பெருமிதத்துடன் தெரிவித்ததையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

ஸ்ரீகாமாட்சி அம்பாளின் சந்நிதியில் நின்று தரிசித்துவிட்டு, ''ஒருகாலத்தில் எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருந்த ஆலயம் இது. இந்தக் கோயில் ஒருநாள், மிகப் பெரிய புண்ணியக்ஷேத்திரமாகத் திகழப்போகிறது. சிறியதொரு நந்தியைப் பிரதிஷ்டை செய்து, பிரதோஷ பூஜை பண்ணுங்கோ!’ என 50-களில் இங்கே விஜயம் செய்தபோது, காஞ்சி மகா பெரியவா அருளியிருக்கிறார்'' என்பதையும் அதில் தெரிவித்திருந்தோம்.

இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து, ''இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயத்தில், சக்திவிகடன் வாசகர்களின் பேருதவியால், வரும் 27.1.13 அன்று காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சக்திவிகடன் வாசகர்களுக்கு நன்றி! வாசக அன்பர்கள் அனைவரும் வந்திருந்து, ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகயிலாசநாதரின் பேரருளைப் பெறுங்கள்'' என மனநிறைவுடன் அழைக்கின்றனர் வேப்பத்தூர் கிராம மக்களும் ஸ்ரீவேங்கடாசலபதி டிரஸ்ட் அன்பர்களும்.

வேப்பத்தூர் ஆலயத்தில், வருகிற 27-ஆம் தேதி முதல் வேத கோஷம் ஒலிக்கப்போகிறது என்பதை நினைக்கும்போதே, மட்டற்ற நிறைவில் மகிழ்ந்து போகிறது மனம்.

- வி.ராம்ஜி

படங்கள்: ஜெ.ராம்குமார்