Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

Published:Updated:
கலகல கடைசிப் பக்கம்
##~##

'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ எனும் கோஷம், பழநி செல்லும் பாதையின் வழிநெடுகிலும், அந்த நள்ளிரவிலும் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''ஐயா! நாமளும் இவங்களோட கொஞ்ச தூரம் நடப்போமே...’ என்று பரமசாமி சொல்ல, காரைவிட்டு இறங்கி பாதயாத்திரை பக்தர்களுடன் நடக்கத் துவங்கினோம். திருஆவினன்குடி எனப்படும் பழநியில், 'துள்ளி வருகுது வேல்’ எனும் தலைப்பில் மறுநாள் பேசவேண்டும். அதற்குத்தான் எங்களின் பயணம்.

'ஆச்சரியத்தப் பார்த்தீங்களாய்யா! ஆறு வயசுப் பையனும் நடக்கிறான்; அறுபத்தஞ்சு வயசு பாட்டியும் நடக்குது' என்று வியப்போடு சொன்னார் பரமசாமி.

'நீங்க சொல்றது உண்மைதான். குழந்தைகளுக்கு பாலமுருகனாய், இளைஞர்களுக்கு வீர முருகனாய், முதியோர்களுக்கு ஞானமுருகனாய், வேலன், வேடன், விருத்தனாகத் தோற்றமளிப்பவன் அல்லவா முருகப்பெருமான்!'' என்றேன் நான்.

'இந்த ஊரோட ஆதி காலப் பெயரே பழநிதானா?' என்று பரமசாமி கேட்க, 'இல்லை, இல்லை. சங்க காலத்தில் 'பொதினி’ன்னு இந்த ஊருக்குப் பேர். கடையெழு வள்ளல்களில் ஒருவரான, மயிலுக்குப் போர்வை தந்த வையாவிக் கோப்பெரும் பேகன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தான்'' என்று எனக்குத் தெரிந்த மேலும் சில தகவல்களைச் சொன்னேன்.

அப்போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடியை ஏந்தி, முருகனின் பெயரைச் சொல்லி ஆடிப் பாடியபடி எங்களைக் கடந்து சென்றார்கள். 'கருணை முருகனைப் போற்றித் தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர்எவரும், இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார்’ எனும் அற்புதமான காவடிச் சிந்து அந்தப் பாட்டு!

'இசையும் தமிழும், ஆன்மிகமும் ஆட்டக் கலைகளும் எளிய மக்களிடத்தில் இறைபக்தியாக உயிரோடு கலந்திருக்கிறது. இந்தப் பாடலையும் ஆடலையும் கேட்டு முருகப்பெருமான் சொக்கி இறங்கி வரமாட்டாரா, என்ன?' என்று நான் பரமசாமியைக் கேட்க, 'நிச்சயம் வருவார். அது மட்டுமில்லை... இந்தப் பக்தகோடிகளுக்கு களைப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அதோ பார்த்தீர்களா, அந்த வாகனங்களில் நெய் வழியும் சர்க்கரைப் பொங்கலையும் அனுப்பியிருக்கிறார்' என்று எச்சில் விழுங்கியபடியே சொன்னார் பரமசாமி.  

ஆமாம். செல்வம் நிறைந்த பலர் கார், வேன், லாரிகளில் வந்து சுவை மிகுந்த உணவுகளையும், வலிபோக்கும் மருந்துகளையும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கிச் செல்வது வழக்கம்தான்.

'ஆமாம்... தைப்பூச நாளுக்கு இத்தனைப் பெருமை எப்படி வந்தது?'' என்று சர்க்கரைப் பொங்கலைச் சுவைத்தபடியே கேட்டார் பரமு.

'திருஞானசம்பந்தர் 'திருமயிலைப் பதிக’த்தில் பூம்பாவை குறித்துப் பாடும்போது, 'மைப்பூசும் ஒண்கண்’ எனத் தொடங்கும் பாடலில், 'தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடுகிறார்.

வள்ளலார் ஒரு தைப்பூச நாளில்தான் ஜோதியில் கலந்தார். மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் திருநட்சத்திரம் (தைப்) பூசம். இந்த நாளில்தான் அவர் உருவாக்கிய வண்டியூர் தெப்பக்குளத்தில் ஆலவாய் அண்ணலும் அங்கயற் கண்ணியாகிய மீனாட்சியும் முழுநிலவு நாளில் தெப்பத்தில் உலா வருவார்கள்' என்று நான் சொல்ல, ''இந்த சர்க்கரைப் பொங்கல் பிரமாதம். உங்க தகவல்களும் இந்த சர்க்கரைப் பொங்கல் போலவே சுவையா இருக்கு. இருங்க, நான் போய் இன்னும் கொஞ்சம் வாங்கிட்டு வரேன்'' என்று ஓடினார் பரமசாமி.