
'பூலோக சொர்க்கத்தை நேரில் பார்த்தவர்கள் உண்டா?'' என்று எனது வழக்கறிஞ நண்பர்
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'குறிஞ்சியும் நெய்தலும் கூடியிருக்கும் இடமது' என்றேன். 'ஐயா! கொஞ்சம் தமிழ்ல பேசுறீங்களா?'' என்று குறும்புப் புன்னகையுடன் ஒரு ஐ.டி. இளைஞர் கேட்டார்.
'மலையும் கடலும் கைகோக்கிற இடம். தீவின் விமான நிலையம் கடற்கரையில், மலையடி வாரத்தில்

அமைந்திருக்கும் அழகே தனியழகு. கடல்நீர் நீலநிறமாய், பச்சையாய், வெள்ளை அலைகளை உடையதாய் நம்மை வரவேற்கிறது. ஓர் ஆச்சரியம்... இந்தத் தீவு கண்டுபிடிக்கப்பட்டு 250 ஆண்டுகள்தான் ஆகின்றனவாம். பிரெஞ்சுகாரர்கள் பாண்டிச்சேரியை ஆட்சி செய்தபோது, தங்கள் கப்பல்களுக்கான மரங்களை இந்தத் தீவுலேருந்துதான் கொண்டு வந்தாங்க! இந்த வேலையைச் செய்தவர்கள் நம் தமிழர்கள்தானாம்' என்றேன் நான்.
'அந்த நாட்டின் பூர்வ குடிகள் யார்?'' என்று கேட்டார் சரித்திரப் பேராசிரியர். 'அப்படி யாரும் இல்லை. ஆனால் கடற்கொள்ளையர்களின் தீவாகத்தான் இந்தத் தீவு இருந்திருக்கிறது'.
'யூ மீன் பைரைட்ஸ்?' என்று அந்த ஐ.டி. இளைஞர் ஆச்சரியப்பட, 'ஆமாமா! அதத்தான் ஐயா சொல்றாரு' என்று சிரித்தபடி சொன்ன தமிழாசிரியர், 'அங்கே என்ன மீன் சிறப்பா கிடைக்கும் ஐயா?' என்று கேட்டார்.
'யூ மீன் கடல்மீன்?' என்று அந்த இளைஞரும் விடாமல் கேட்க, எல்லோரும் சிரித்தார்கள். அவர்களிடம் 'டியூனா’ எனும் அபூர்வ கடல்மீன் குறித்து விவரித்தேன். மீன் ஏற்றுமதிதான் இங்கே முக்கியத் தொழில் என்றும் சொன்னேன்.
உங்களுக்குத் தெரியுமா? தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்து மலையாள மொழி உருவானது. அதேபோல, பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்து பிறந்த 'கிரியோல்’ என்ற மொழி இங்கே பேசப்படுகிறது. இங்கே, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் இருக்கின்றன. சிஷெல்ஸ் தமிழ் மன்றம் எனும் அமைப்பு, சிறப்பாக இயங்கி வருகிறது. அங்கேதான் பட்டிமன்றம் நடத்தினோம்.
'அந்தத் தீவில் அதிசயப் பழம் ஒன்றும் இல்லையா?'' என்று நண்பர் கேட்டார். உடனே நான், 'இருக்கிறதே, 'பிரெட் ஃபுரூட்’ என்ற சுவையான பழம். அதைக் கொடுத்துதான் விருந்தினர்களை உபசரிக்கிறார்கள். அந்தக் கனியைச் சாப்பிட்டால், சாப்பிட்டவர் மீண்டும் அந்தத் தீவுக்கு வருவார் என்ற நம்பிக்கை அந்த மக்களிடம் இருக்கிறது.''
'அந்தப் பழங்களை வாங்கிட்டு வந்து எங்களுக்குக் கொடுத்திருந்தா நாங்களும் அங்கே போயிருப்போமே' என்று ஒருவர் ஆர்வமாய்க் கேட்க, 'அங்கே போய் அந்தப் பழத்தைச் சாப்பிட்டால்தான் அந்த மந்திரம் பலிக்கும். சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டாமா?'' என்று நான் கேட்க... 'அட... பேராசிரியர் ஐயா, ஒளவையார் மாதிரியே கேக்கறாரே...'' என்று தமிழாசிரியர் சொல்ல... அந்த இடமே சொர்க்கமாயிற்று!