சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

##~##

ஞ்சபூதங்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் அவை குறித்த ஆன்மிக தகவல்களை அறிந்து வழிபடவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இது தொடர்பான புத்தகங்கள், சி.டி-க்கள் எங்கே கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உங்களில் யாருக்கேனும் அதுபற்றித் தெரியும் என்றால், தகவல் தர வேண்டுகிறேன்.

 - ச.ஹரிஹரன், ஸ்ரீவாஞ்சியம்

'ஓதக்கடலில் உதித்தீர் ஹரி ஹரி
உலகத்துக் கொருவராய் நின்றீர் ஹரி ஹரி
பச்சைநிற ஆலிலைமேல் படுத்தீர் ஹரி ஹரி
இச்சித்த ரூபம் எடுத்தீர் ஹரி ஹரி
பாற்கடலில் பள்ளிகொண்டீர் ஹரி ஹரி
பங்கஜலட்சுமியின் நாதா ஹரி ஹரி’

- என்று துவங்கும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால், முழு பாகவதத்தையும் படித்த பலன் கிட்டும் என்று பெரியவர்கள் கூறியதாக ஞாபகம். எனக்கு இந்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள புத்தகம் தேவைப்படுகிறது. அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?

- லலிதா வெங்கடரமணன், சென்னை-4

'செய்யும் தொழிலை சீர்தூக்கிப் பார்க்கின்
நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை’

- இவை எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இந்த வரிகள் கொண்ட முழுப் பாடலையும் அறிய ஆசைப்படுகிறேன். அதோடு, இந்தப் பாடலை இயற்றியது யார், எப்போது எழுதப்பட்டது என்கிற விவரத்தையும் வாசகர்கள் தந்தால் சந்தோஷப்படுவேன்.

- வி.சுப்ரமணியம், திருப்பூர்

உதவலாம்... வாருங்கள்!

நாங்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஜம்பு மகரிஷி கோத்திரம். எங்களது குலதெய்வத்தை அறிந்து, வழிபட விரும்புகிறோம். உங்களுக்கு எங்களின் குலதெய்வம் எது என்பது தெரியும் என்றால், அந்தத் தெய்வம் கோயில் கொண்டுள்ள இடம் எது என்பதோடு, அந்தத் தெய்வ மூர்த்தத்தின் புகைப்படம் இருந்தால், அதையும் எனக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

- பி.சக்திவேல், சென்னை-69

ஸ்ரீஐயப்ப ஸ்வாமி மீது மிகுந்த பக்தி கொண்டவன் நான். அந்த ஸ்வாமியின் விரிவான வரலாறு அடங்கிய வரலாற்றுப் புத்தகத்தைப் படிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் புத்தகம் எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கும்?

- எஸ்.கோபால், மைசூர்

முருகப்பெருமானை நடுநாயகமாகக் கொண்டு பஞ்சாயதன பூஜை செய்ய விரும்புகிறேன். இதற்கு சுப்ரமணிய சாளக்ராமம் தேவைப்படுகிறது. அது எங்கே கிடைக்கும்?

- பா.சுப்ரமணியராவ், பெங்களூர்

25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பக்திப் பாடல்கள் கற்றுக்கொண்டேன். எனது பாட்டு ஆசிரியை, ரகுவீரகத்யத்தை ராகத்துடன் சொல்லிக்கொடுத்தார். இப்போது அந்த ராகம் மறந்துவிட்டது. ரகுவீர கத்யத்தை முழுவதுமாக ராகத்துடன் பாடத் தெரிந்தவர்கள், அது முழுவதையும் ராகக் குறிப்புகளுடன் எழுதி அனுப்பினால் மகிழ்வேன்.

- விமலா ராமமூர்த்தி, கோவை

ங்களது மூதாதையர் பெரியகுளத்தில் வசித்து வந்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதன்பிறகு, பேரளம் பக்கத்தில் உள்ள வஸ்தராஜபுரம் என்கிற கிராமத்தில் வசித்து வந்தார்கள். அந்த கிராமத்தில் இருக்கும் தர்ம சாஸ்தாவை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். ஆனால், பெரியவர்கள் எங்களது குலதெய்வம் அம்மன் என்று கூறுகிறார்கள். பிரசன்னம் பார்த்ததில், மதுரை அருகே உள்ள புவனேஸ்வரி அம்மனே எங்கள் குலதெய்வம் என்று பதில் வந்தது. மதுரை அல்லது பெரியகுளம் பகுதியில் புவனேஸ்வரி அம்மன் கோயில் ஏதேனும் உள்ளதா? இருக்கிறது என்றால், அந்தக் கோயிலின் முழு முகவரியையும் தெரிவியுங்களேன்.

- ஆர்.விஜயலட்சுமி, சென்னை-44

உதவிக்கரம் நீட்டியவர்கள்

உதவலாம்... வாருங்கள்!

'தமிழில் ஏராளமான பிள்ளைத்தமிழ் நூல்கள் இருப்பதாக அறிவேன். அவை எனக்குத் தேவைப்படுகின்றன. வாசகர்கள் உதவ முடியுமா?' என்று, 25.12.12 இதழில் காரமடை வாசகர் அவினாசி முருகேசன் கேட்டிருந்தார்.

'தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் ஆசான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழை, எனது நண்பர் ஒருவரிடம் சிதைந்த நிலையில், மட்கிப் போன காகிதத்தில் காண நேர்ந்தது. அந்த அற்புதமான தமிழ்ப் பாடல்களை புலவர்கள் மூலம் மீட்டெழுதி, பிரதி எடுத்து வைத்துள்ளேன்...' என்று கடிதம் எழுதியுள்ள கும்பகோணம் வாசகர் வி.சந்தானகிருஷ்ணன், அந்தப் பாடல்களை நகல் எடுத்து அனுப்பியுள்ளார். சம்பந்தப்பட்ட வாசகருக்கு அவை அனுப்பிவைக்கப்படுகின்றன.

'திருக்கடவூர் சுப்ரமணிய பட்டரின் வரலாறு மற்றும் அபிராமி அம்மன் கோயிலில் நிகழ்ந்த அற்புதங்கள் பற்றிய புத்தகம் தேவை'' என்று, 8.1.13 இதழில் செங்கோட்டை வாசகர் எம்.சுப்ரமணியன் கேட்டிருந்தார்.

'இறைவன் சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களுள் ஒன்றாகத் திகழ்வது திருக்கடையூர். சிவபெருமான், தன் பக்தன் மார்க்கண்டேயருக்காக காலனை (எமனை) காலால் உதைத்த தலமாக இது போற்றப்படுகிறது. இத்தலத்தின் பழைய பெயர் திருக்கடவூர். ஆன்மிக சிறப்புகள் பல கொண்ட இந்த ஊரில் அவதரித்து, அந்த ஊருக்குக் கூடுதல் புகழ் சேர்த்தவர்தான் சுப்ரமணிய பட்டர் என்கிற அபிராமிபட்டர்' என்று தெரிவித்துள்ள திருச்சி வாசகி சரோஜா சுதர்சன் ராம், அபிராமிபட்டருக்காக அன்னை அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய அற்புதத் திருவிளையாடலையும் பரவசம் பொங்க எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகல், வாசகர் எம்.சுப்ரமணியனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

'அருட்கவி சாதுராம் சுவாமிகளின் புகைப்படம் மற்றும் அவர் இயற்றிய அருட்பாடல்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. அவற்றை யாரேனும் அனுப்பிவைக்க முடியுமா?' என்று, 19.2.13 இதழில் வயலூர் வாசகர் இராம.பார்த்திபன் கேட்டிருந்தார்.

'வள்ளிமலை சுவாமிகளின் சீடர்தான் சாதுராம் சுவாமிகள். இவரது சமாதி சென்னை நங்கநல்லூரில் 'ஸ்ரீபொங்கி மடாலயம்’ என்ற பெயரில் அமைந்துள்ளது. 'ஸ்ரீ பொங்கி மடாலயம், 10/22, பொங்கி மடாலயம் தெரு, நங்கநல்லூர், சென்னை-61’ என்கிற முகவரியில் இயங்கி வரும் இந்த மடாலயத்தைத் தொடர்புகொண்டால், சாதுராம் சுவாமிகளின் புகைப்படம் மற்றும் அவர் இயற்றிய அருட்பாடல்களைப் பெற்றுக்கொள்ளலாம்'' என்று சென்னை வாசகர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.