சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்
##~##

'கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லா இருக்காதாமே..?'  - வழக்கம்போலவே பரமசாமி தடாலென்று கேட்டார், பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிக்குக் காரில் சென்றுகொண்டிருந்தபோது. ''ரெண்டுமே நல்லாருக்கும். திருப்பட்டூருக்கு விடுப்பா, வண்டியை! அங்கே போனா நம்ம தலையெழுத்தும் சரியாயிரும்'' என்றேன்.

 ''சரி... உங்ககிட்ட ஒரு கேள்வி. உலகத்துல ஆண்பிள்ளை யாருன்னு சொல்லுங்க?'' என்று கேட்டேன். ''என்ன கேள்வி சார் இது? நாம எல்லாருமே ஆண்பிள்ளைகள்தானே!'' என்று கார் டிரைவர் வெடிச்சிரிப்புடன் பதில் சொன்னார்.

''ஆனா, கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதுக்கு வேற ஒரு பதில் சொல்றார். இந்த உலகத்துல ஒரே ஒரு ஆண் பிள்ளை, முருகப்பெருமான்தானாம். ஏன் தெரியுமா? நாமெல்லாம் தாய்மார்களான பெண்கள்கிட்டேருந்து தோன்றினோம். ஆனால், சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் கந்தவேள். எனவே, அவர் மட்டுமே ஆண்பிள்ளை!'' என்றேன்.

கலகல கடைசிப் பக்கம்

உடனே பரமசாமி, ''அப்படின்னா பிரம்மதேவனும் ஆண்பிள்ளைதானே! திருமாலின் நாபிக்கமலத்திலேருந்து தோன்றியவர்தானே!'' என்று சொல்ல... ''அட! நீரும் அவ்வப்போது இப்படிப் புத்திசாலித்தனமா யோசிக்கிறீரய்யா!'' என்று வியந்த நான், ''சரி... பிரம்மா, 12 தலங்களோட சிவலிங்கத்தை வைச்சுப் பூஜை பண்ணின திருப்பட்டூர் வந்துருச்சு. தரிசிப்போமா?'' என்று டி.வி. ஸ்டைலில் சொல்லிக் கொண்டே இறங்கினேன்.  

''இங்கே வந்தா தலையெழுத்து மாறிடுமா?'' என்று கேட்டுக்கொண்டே இறங்கினார் பரமசாமி. ''கண்டிப்பா மாறும். சக்தி விகடன்ல இந்தத் தலத்தின் மகிமைகள் தொடரா வந்தப்போ படிக்கலையா நீர்? இப்போ தனிப் புஸ்தகமாவே வந்திருக்கு. வாங்கிப் படியும்!'' என்றவன், ''இங்கே அய்யனார் கோயிலும் பிரமாண்டமா இருக்கு. ராஜேந்திர சோழனோட பேரன் அதிவீர ராஜேந்திர மன்னன்தான் அந்த அய்யனார் கோயிலைக் கட்டியிருக்கான். இத்தனை பிரமாண்டமா அய்யனார் கோயிலைப் பாக்கறது அபூர்வம்!'' என்றேன்.

''சரி... தலையெழுத்துன்னு ஏதோ சொன்னீங்களே...'' என்று பரமசாமி, நெற்றியைத் தடவிக்கொண்டே கேட்டார்.

'சிவபெருமானுக்கும் தன்னைப்போல ஐந்து தலைதானே என்று பிரம்மதேவன் ஆணவமாய் நினைத்ததால்தான், அந்தத் தலைகளில் ஒன்றை சிவபெருமான் கிள்ளி எறிந்ததாகவும், பின்னர் சிவபெருமானின் அருளைப் பெறவே பிரம்மன் இங்கே வந்து தவமிருந்ததாகவும், அதனால் பிரம்மாவின் தலையெழுத்தே மாறியது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதனால, இங்கே வந்து சிவ தரிசனம் பண்றவங்களோட தலையெழுத்தை நல்லவிதமா திருத்தி, மாற்றி எழுதணும்னு அந்த ஈசனே பிரம்மாவுக்கு உத்தரவு போட்டிருக்கார். அதனால இங்கே வர்றவங்களுக்கு அடுத்தடுத்து நல்லதே நடக்கும்!'' என்று நான் சொல்லி முடிக்க... கோயிலைவிட்டு வரும்போது, பரமசாமி சோகமாக இருந்தார்.

விசாரித்ததற்கு, ''நம்மளோட தலையெழுத்தை சரியாக்கிடுவார் பிரம்மதேவன். அதுல எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனா, கடந்த பல வருஷமாவே கோழிக் கிறுக்கல் மாதிரி இருக்கிற என் கையெழுத்தை எப்பச் சரியாக்குவார்னுதான் தெரியலை'' என்று வருந்தினார்.

''அதுக்கு இவ்ளோ தூரம் வரவேண்டாமே! ஒரு பத்து ரூபா கொடுத்து காப்பி நோட்டு வாங்கி எழுதிப் பழகினா போதும்!'' என்று நான் சொல்ல, 'அதுவும் சரிதான்’ என்றவர், திடுதிடுவென்று ஓடினார்.

காப்பி நோட்டு வாங்குவதற்காக அல்ல; விநியோகமாகிக்கொண்டிருந்த பிரசாதத்தை முதல் ஆளாக வாங்குவதற்காக!

கலகல கடைசிப் பக்கம்