42 ஆண்டுகள், களவுபோன 3 சிலைகள்... லண்டனில் மீட்டு அனந்தமங்கலத்தில் பிரதிஷ்டை!

42 ஆண்டுகளுக்குமுன் களவுபோன 3 சிலைகள் லண்டனில் மீட்பு - மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது
களவு பொய் 42 ஆண்டுகளுக்குப் பின் லண்டனில் மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள் மீண்டும் அதே கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் இராஜகோபாலசாமி கோயில் உள்ளது. இதிலுள்ள தசபுஜ ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இக்கோயிலிலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்னர் (1978)வெண்கலத்தாலான ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் சாமி சிலைகள் திருடப்பட்டன. அப்போது கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பொறையாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். ஆனால் திருடப்பட்ட சிலைகளை மீட்க முடியவில்லை. அந்தச் சிலைகள் லண்டனுக்கு கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
சிங்கப்பூரில் இயங்கி வரும் 'இந்தியா பிரைடு' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் விஜயகுமார் என்பவரின் பெருமுயற்சியால் ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய 3 சிலைகள் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனிலிருந்து மீட்கப்பட்டன. லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட இச்சிலைகள் பல்வேறு நடைமுறைகளுக்கு பின்னர் டெல்லி கொண்டு வரப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சிலைகளை கடந்த நவ. 20 -ம் தேதி சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 21 -ம் தேதி இந்து சமய அறநிலைத்துறை மயிலாடுதறை இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் மீட்கப்பட்ட சிலைகள் அனந்தமங்கலம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டன. ஊர் மக்கள் மிகவும் ஆனந்தமடைந்தனர். ஊர் எல்லையில் கிராம மக்கள் சாமி சிலைக்கு உற்சாக வரவேற்பளித்தனர். சுமார் 1 கி.மீ தூரத்திற்கு சிலைகள் வாகனத்தில் வைத்து மேளதாளத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. சில தினங்கள் கழித்து ஆகமவிதிகள்படி ஹோமங்கள் சிறப்பு யாகபூஜைகள் நடத்தப்பட்டு 3 சாமி சிலைகளும் மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.