தொடர்கள்
Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்
##~##

'மதுர மதுரன்னு பெருமை பேசுறாங்களே, அப்படி என்னதான் மதுரையில இருக்கு?'' என்று வகுப்பறையில் ஒரு மாணவர் கேட்டார். அவருக்குக் கோவைதான் சொந்த ஊர். மதுரையில் நடந்த 'மாமதுரை போற்றுவோம்’ எனும் விழா பற்றி விவரித்துக்கொண்டு இருந்தபோதுதான் அவர் இப்படிக் கேட்டார்.

 ''காவிரி, தாமிரபரணி மாதிரி இங்கே வைகை ஆறு இருக்கு'' என்று முந்திக்கொண்டு பதில் சொன்னார் இன்னொரு மாணவர். ''ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே தமிழுக்கு முச்சங்கம் வைச்சது மதுரைதான், தெரியும்ல?'' என்றார் பெருமிதக் குரலில், ஒரு மாணவி.

'பாண்டியர் குதிரை குளம்படியும்தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும்மதி
தோண்டிய புலவர்தம் சொல்லடியும்இளம்
தோகையர்தம் மெல்லடியும்
மயங்கி ஒலிக்கிற மாமதுரைஇது

மாலையில் மல்லிகைப் பூமதுரை’ என்று வேறு ஒரு மாணவர் கவிஞர் வைரமுத்துவின் கவிதையை ஆவேசத்துடன் அவர் பாணியிலேயே சொல்ல... முதலில் கேள்வி கேட்ட மாணவர் நடுங்கிப் போய், 'ஐயா! தெரியாம கேட்டுட்டேனுங்க' என்றார்.

உடனே நான், 'நல்ல கேள்வி கேட்ட உங்களுக்கு நன்றி. பாய்ந்து வந்து பதிலிறுத்த பாண்டிய நாட்டுச் சிங்கங்களுக்கும் நன்றி!' என்று சொல்லிவிட்டு, ''எல்லா ஊருக்குமே தனித் தனிப் பெருமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், மதுரையை எடுத்துக்கொண்டால், ஆற்றங்கரை நாகரிகத்தில் பெருமைபெற்ற கலைநகரங்களின் தலைநகரம் மதுரைதான். 'தென்னக தாஜ்மஹால்’னு புகழப்படும் 'திருமலைநாயக்கர் மஹால்’ செம்மாந்து நிற்கிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனும் சங்க இலக்கிய, நீதி இலக்கிய நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டதும் இங்கேதான்'' என்றேன்.

கலகல கடைசிப் பக்கம்

'கேட்டீங்களா பிரதர்... ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி பல ஊர்கள்ல பேசியே இருக்கமாட்டாய்ங்க. ஆனா எழுத்துக்கு, சொல்லுக்கு, பொருளுக்கு, யாப்புக்கு, அணிக்குன்னு பாட்டுப் பாடின புலவர்கள் வாழ்ந்த ஊரு எங்க ஊரு' என்று விடாமல் சொன்னார் மதுரைக்கார மாணவர்.

'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என வாதாடிய நக்கீரர் வாழ்ந்த ஊர். அதுமட்டுமா? சுதந்திரப் போராட்ட காலத்துல நேதாஜி படையில் அதிகம் இருந்தது தெக்கத்திக்காரகதான். அதனாலதான் நேதாஜி மதுரைக்கு வந்து கொடியேத்தியிருக்காக, தெரியும்ல? அவருக்கு இன்னிக் கும் இங்க சிலை இருக்கு; அவர் பேருல நேதாஜி ரோடுன்னே இருக்கு' என்றொரு மாணவி, மதுர அப்பத்தா போல பேசி விவரித்தார்.

குஜராத்தில் பிறந்த மகாத்மா, மதுரைக்கு வந்து உழவர்களின் நிலையைப் பார்த்த பிறகுதான் வேட்டி- துண்டுக்கு மாறினார்.

மகாகவி பாரதியார் இங்கேயுள்ள ராஜா சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார் என்று இன்னும் சில மதுரை மகிமைகளை விவரித்தேன்.

'அம்புட்டு ஏங்க... தமிழ் சினிமாவுல 1931-ல முதல் பேசும்படம் வந்துச்சே 'காளிதாஸ்’னு... அதுக்கு முதல் பாட்டு எழுதுனதே எங்க ஊர் மதுரகவி பாஸ்கரதாஸ்தானே?'' என்றொரு மாணவர் சொல்லிவிட்டு, 'எப்பூடி?’ என்றார் வைகைப்

புயல் மாதிரி. 'உலகைப் படைத்த கடவுள், எல்லா ஊர் மண்ணுலயும் வந்திருப்பாரு; நடந்திருப்பாரு. ஆனா, சிவபெருமானே தன் தலையில் சுமந்தது எங்க மதுர மண்ணைத்தானே! அவர் பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியும்தானே..?'' என்றார் இன்னொரு மாணவர்.

உடனே, ''சார்... நம்ம மதுரைல புட்டு எங்கே சார் சூப்பரா இருக்கும்? புட்டுன்னு சொன்னவுடனே சாப்பிடணும்னு ஆசை வந்துருச்சு'' என்று ஒரு மாணவர் நாக்கில் நீர் வடியக் கேட்டு, நண்பர் பரமசாமி அருகில் இல்லாத குறையைத் தீர்த்து வைத்தார்.