புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

##~##

ங்களது குலதெய்வம் கரூர் ஆத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ முத்துசாமி, ஸ்ரீ சோளியம்மன் என்கிறார்கள். இந்தக் கோயிலின் தல வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். யாரிடமேனும் இந்தக் கோயிலின் தலவரலாறு புத்தகம் இருந்தால், அதை எனக்கு அனுப்பி வைத்து உதவுங்களேன்.

 - சு.முருகேசன், அரிக்காரம்பாளையம்

ஞானானந்த சரஸ்வதி இயற்றி, ஜெய விஜயா பாடிய 'ஸ்ரீ சபரிகிரீச சுப்ரபாதம்’ சி.டி. எனக்குத் தேவைப்படுகிறது. 'விகல விஷய பந்த சாது லோக ப்ரகர நிஷேவிய சமஸ்த பவ்யதாயின்...’ என்று துவங்கும் இந்த சி.டி. எங்கே கிடைக்கும்?

- ஜி.மோகன்ராம், சென்னை-117

ருளச்சேரி என்கிற சனி பரிகார திருத்தலம் பற்றி அண்மையில் கேள்விப்பட்டேன். சனிப் பிரதோஷம் தொடங்கி தொடர்ந்து ஏழு பிரதோஷங்கள் இங்கு சென்று, இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீகலிங்கநாதீஸ்வரரை வழிபட்டால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, பாதச்சனி, பில்லி-சூனியம், ஏவல் போன்ற தீவினைகள் யாவும் நீங்குவதாக அறிந்தேன். இருளச்சேரி எங்கே இருக்கிறது என்று நான் விசாரித்த வகையில், சென்னையில் இருந்து 56 கி.மீ. தொலைவில் இருக்கிறது என்கிற விவரம் மட்டுமே கிடைத்தது. எந்த மாவட்டத்தில், எந்த ஊருக்கு அருகில் இந்தக் கோயில் அமைந்துள்ளது, அங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்பன போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. உங்களுக்கு அந்தக் கோயில் பற்றி தெரியும் எனில், எனக்குத் தகவல் தந்து உதவுவீர்களா?

- உ.மாதவன், சென்னை-99

உதவலாம்... வாருங்கள்!

27 நட்சத்திரங்களுக்கும் பல ரிஷிகள் பொறுப்பேற்று உள்ளார்கள்; அந்த ரிஷிகளின் பெயரிலேயே கோத்திரமும் உருவானது என்று கூறுகிறார்கள். அந்த வகையில், ஜமதக்னி ரிஷி பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அந்த ரிஷி வழிபட்ட கோயில்கள் அல்லது பிரதிஷ்டை செய்த கோயில்கள் ஏதேனும் இருந்தால், அதுபற்றிய விவரம் தாருங்களேன்.

- சிவ.கனகசபை, தஞ்சாவூர்

நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஸ்ரீ வத்ஸ கோத்திரம். எங்களது குலதெய்வம் எது என்பதை அறிந்து வழிபாடு செய்ய ஆசைப்படுகிறோம். உங்களுக்கு அந்தத் தெய்வம் பற்றித் தெரியும் எனில், அந்த அம்மன் கோயில் கொண்டுள்ள இடத்தை விவரமாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- எம்.சரஸ்வதி, சென்னை-28

வேதாரண்யம் ராமகிருஷ்ண சர்மா எழுதிய லலிதா சஹஸ்ர நாமம் எனக்குத் தேவைப்படுகிறது. அந்தப் புத்தகத்தில் 1 முதல் 132 வரையும், 245 முதல் 315 வரையும் உள்ள பக்கங்கள் மட்டுமே என்னிடம் உள்ளன. இடைப்பட்ட பக்கங்கள் எனக்கு வேண்டும். இந்தப் புத்தகம் யாரிட மேனும் இருந்தால், எனக்குத் தேவைப்படும் 133 முதல் 244 வரையுள்ள பக்கங்களை நகல் எடுத்து அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அல்லது, இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தந்தாலும் மகிழ்வேன்.

- எஸ்.ராஜலெட்சுமி, சென்னை-78

ருடத்தில் வரும் முக்கியமான திதிகளுக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. உதாரணத்துக்கு... தசமி என்றால் விஜயதசமி, பாபஹர தசமி, ஸ்மார்த்த தசமி ஆகியவற் றைக் குறிப்பிடலாம். இதேபோல், மற்ற திதிகளைப் பற்றிய விவரமும், அந்த நாட்களில் எந்த தெய்வத்தை வணங்குவது, பூஜைகளை எப்படிச் செய்வது என்பன போன்ற விவரங்களும் எனக்குத் தேவைப்படுகின்றன. இந்த விவரங்கள் எந்தப் புத்தகத்தில் அல்லது பஞ்சாங்கத்தில் இருக்கிறது? விவரம் தெரிந்தவர்கள் தகவல் தாருங்களேன்.

- எஸ்.ஈஸ்வரி நந்தகுமார், மும்பை-81

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

'முருகப்பெருமானை நடுநாயகமாகக் கொண்டு பஞ்சாயதன பூஜை செய்ய விரும்புகிறேன். அதைச் செய்வது எப்படி?’ என்று, 5.3.13 இதழில் பெங்களூரு வாசகர் பா.சுப்ரமணியராவ் கேட்டிருந்தார்.

'நர்மதை பாணலிங்கம் (சிவன்), ஸ்ரீ காளஹஸ்தி ஸ்வர்ணமுகி (அம்மன்), பாட்னா சோனாநதி ஸோணபத்ரம் (விநாயகர்), தஞ்சை வல்லம் ஸ்படிகம் (சூரியன்), நேபாளம் கண்டகி நதி சாளக்ராமம் (விஷ்ணு) - இவற்றை வைத்து பூஜை செய்வதைத்தான் பஞ்சாயதன பூஜை என்பார்கள்...' என்று, மதுரை வாசகர் ஆர்.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

'ஓதக்கடலில் உதித்தீர் ஹரி ஹரி... என்று துவங்கும் ஸ்லோகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. அதை, வாசகர்கள் யாரேனும் அனுப்பி வைக்க முடியுமா?’ என்று, 5.3.13 இதழில் சென்னை வாசகி லலிதா வெங்கடரமணன் கேட்டிருந்தார்.

'ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் இயற்றிய 'தினசரி ஸ்தோத்திரங்கள்’ என்ற புத்தகத்தில் இந்த ஹரி ஹரி ஸ்லோகங்கள், பக்கம் 32 முதல் 44 வரையில் இடம்பெற்றுள்ளன. சென்னை மயிலாப்பூரில், ஸ்ரீ கபாலீஸ்வரர் சந்நிதித் தெருவில் அமைந்துள்ள கிரி டிரேடிங்கில் இந்தப் புத்தகத்தை வாங்கலாம்'' என்று கூறியுள்ள சென்னை வாசகி லக்ஷ்மி அருணாசலம், 'எங்களுக்குத் திருமணமாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. சதாபிஷேகம் நடந்து 8 வருடங்களாகிறது. இன்றுவரை இந்த ஸ்லோக பாராயணங்களால் நாங்கள் இருவரும் சௌக்கியமாக இருக்கிறோம்' என்கிற விவரத்தையும் தெரிவித்துள்ளார். சென்னை வாசகி ஜெயந்தியும் மேற்படி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

வாசகி லலிதா வெங்கடரமணன் கேட்ட மேற்படி ஸ்லோகத்தை சென்னை வாசகிகள் எம்.பிரேமா மார்க்கபந்து, கமலா வேணுகோபாலன், எஸ்.ராஜலட்சுமி, சென்னை வாசகர் ஜி.சூரியநாராயணன், மும்பை வாசகி எஸ்.ஈஸ்வரி நந்தகுமார் ஆகியோர் நகல் எடுத்து அனுப்பிவைத்துள்ளனர். அதேபோல், சென்னை வாசகி சௌந்தரா சுப்ரமணியன், இந்த ஹரி ஹரி ஸ்லோகங்களை கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார். சம்பந்தப்பட்ட வாசகி லலிதா வெங்கடரமணனுக்கு மேற்கண்ட ஸ்லோகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

'ஞானமலை முருகப்பெருமானுக்கு ஒருகால பூஜை செய்ய விருப்பமுள்ள அர்ச்சகர் அல்லது அடியார் தேவை’ என்று, 19.2.13 இதழில் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் கேட்டிருந்தார்.

'நான் மூத்த குடிமகன். 64 வயதாகிறது. தீவிர முருக பக்தனான நான் ஞானமலை கோயிலில் ஒருகால பூஜை செய்ய ஆசைப்படுகிறேன். இந்த இறைப்பணியை மனம் உவந்து செய்யக் காத்திருக்கிறேன்...' என்று தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார் பெங்களூரு வாசகர் டி.என்.பாலசுப்ரமணியன். இவரது கடிதம், வலையப்பேட்டை ரா.கிருஷ்ணனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.