புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்
##~##

'அப்ப கிராமத்திலேயே தங்குறதா முடிவு பண்ணிட்டீங்களா பரமசாமி?' என்று நான் கேட்டபோது, நாங்கள் இருவரும் தெற்கே போகும் ரயிலை எதிர்பார்த்து ரயில் நிலையத்தில் காத்திருந்தோம்.

 'ஆமாய்யா! நகரத்துக்கு நான் 40 வருசத்துக்கு முந்தி வந்தபோது இருந்த கடமைகள் பெரும்பாலானதை முடிச்சிட்டேன். இனிமே எங்க ஊர்ல பழைய வீட்டைப் பார்த்துக்கிட்டு, பால்ய கால நண்பர்களோடு பேசிக்கிட்டு இருக்கலாம்னு ஒரு எண்ணம். கூடவே, எங்க வீடு இருக்கிற தெருக்கோடியில் பழைய கிருஷ்ணன் கோயில் ஒண்ணு இருக்கு. அதை எடுத்துக் கட்டலாம்னு இருக்கேன். மத்தபடி, விவசாய வேலையைத் தொடரவேண்டியதுதான்!' என்று பரமசாமி சொன்னபோது, நான் வியந்துபோனேன். பரம அப்பாவியாகத் தெரிந்த பரமசாமிக்குள் இத்தனை பக்குவமா! விரக்தியில் வாழும் நகரத்து வயோதிகர்களுக் கும் நம்ம பரமசாமிக்கும்தான் எத்தனை வேறுபாடு?!

'அதுமட்டுமில்லீங்க... நான் படிச்ச பள்ளிக்கூடம் இடிஞ்சு கிடக்கு. அதையும் கொஞ்சம் சரிசெஞ்சு தர்ற வேலையை இழுத்துப் போட்டுக்கலாம், பாருங்க!'' என்று சொல்லிவிட்டு, கையுடன் கொண்டு வந்திருந்த நெய் போளியை வழங்கியபடியே, ''ஐயா... ஒரு சந்தேகம்!

மேல் லோகத்துல சொர்க்கம்னு ஒண்ணு இருக்குதா?'' என்று கேட்டார் பரமு.

கலகல கடைசிப் பக்கம்

''புராணத்துலயும் இதிகாசத்துலயும் திரைப்படங்கள் லயும் சொர்க்கம்னு இனிய உலகம் இருக்கிறதா சொல்லியிருக்காங்க. ஆனா, ஒளவையார்... நாடு- காடு, மேடு- பள்ளம்னு ஒரு இடம் எப்படி இருந்தாலும், எங்கே நல்லவங்க இருக்காங்களோ, அந்த இடம் சொர்க்கத்துக்குச் சமம்னு சொல்லியிருக்காங்க!'' என்றேன். கூடவே,

'நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லர் ஆடவர்
அவ்வழி நல்லவை வாழிய நிலனே’
ங்கிற அந்தப் பாடலையும் சொன்னேன். ''உங்க பாணியில நானும் ஒண்ணு சொல்லிக்கிடுறேன். மெதுவாப் போற ரயில் எதுடான்னா, மதுரை- ராமேஸ்வரம் பாசஞ்சர் பகல் ரயில்தான்னு சொன்னானாம் ஒருத்தன். உடனே, கேட்டவன் 'போய்த்தான் பாப்போமே’னு அந்த ரயில்ல ஏறினான். நல்லாத்தான் போயிக்கிட்டிருந்துச்சு. பரமக்குடி தாண்டினதும், ரயில் நின்னுருச்சு. என்னடான்னா பார்த்தா, தண்டவாளத்துல எருமை மாடு ஒண்ணு படுத்திருந்துச்சு. அதை விரட்டினதும், வண்டி கிளம்புச்சு. கொஞ்ச தூரத்துல வண்டி திரும்பவும் நின்னுருச்சு. அட பாருங்க, அங்கேயும் ஒரு எருமை மாடு உக்கார்ந்திருந்துச்சு'' என்று பரமசாமி சொல்லி நிறுத்த, 'ஏன், அந்தப் பக்கம் எருமை மாடு அதிகமோ?'' என்று கேட்டேன்.

''அட, நீங்க வேற... அங்கே விரட்டிவிட்ட அதே எருமை மாடுதான் ரயிலை முந்திக்கிட்டு வந்து, மறுபடியும் இங்கே தண்டவாளத்துல ரெஸ்ட் எடுத்துச்சு!'' என்று பரமசாமி சொல்லிவிட்டு நிறுத்த... என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. தொடர்ந்து அவரே, 'ஐயா! ஒருமுறை, நாலடியார் பாட்டு ஒண்ணு சொன்னீங்களே, ஞாபகம் இருக்கா? நல்லாப் படிச்ச, ஒருமித்த சிந்தனை உள்ளவங்க ஒண்ணாக் கூடியிருந்து இனிமையா பேசிக் கிறது, சொர்க்கத்துக்குச் சமம்னு சொல்ற பாட்டு அது.

'தகலரும் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலா; எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம்
அகல்வானத்து உம்பா; உறைவாலீ; பதி' (நாலடியார் 137)

என்ற பாடலைக் கடகடவெனச் சொல்லி முடிக்கவும், ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.

'மீண்டும் சந்திப்போம், பரமசாமி!'' என்று அவருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு நகர்ந்தேன். நல்ல மனிதர்களும் நல்ல நண்பர்களும் இருக்கும் இடம்தானே சொர்க்கம்!