Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

##~##

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஸ்ரீஆண்டாளை எல்லோருக்கும் தெரியும். அந்த ஆண்டாள் ஆடிப்பூரத்தில் அவதரித்தாள் என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததுதான். அதே நேரம், அவள் எந்த ஆண்டு பிறந்தாள்? அவள் ராமானுஜருக்கு முந்தையவளா அல்லது பின்னால் அவதரித்தவளா? இந்த இருவருக்கும் இடையிலான கால இடைவெளி எவ்வளவு? இந்த விவரங்கள் உங்களுக்குத் தெரியும் எனில், நான் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தத் தகவல்களைத் தந்து உதவுங்களேன்..! 

 - வி.பி.குப்புஸ்வாமி, திருச்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ப்த சகோதரிகள் என்று சொல்லப்படும் அக்கா- தங்கையர் ஏழு பேர் யார், யார்? அவர்களின் திருத்தலங்கள் எங்கே அமைந்துள்ளன? உங்களுக்குத் தெரிந்தால் தெளிவான தகவல் தாருங்களேன்.

- மோ.கணேஷ், பழங்காமூர்

ங்கள் ஊர்ப் பகுதியில் மழையின்றி வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. உலக உயிர்கள் எல்லாம் செழிப்புற... ஏரி, குளம், குட்டைகள் நீர் நிரம்பி வளம் பெற... அந்த இறைவன்தான் கருணை மழை பொழியவேண்டும். அதற்குப் பிரத்யேக வழிபாடு ஏதேனும் இருக்கிறதா? மேலும், அந்த வழிபாட்டின்போது சொல்லக்கூடிய ஸ்லோகங்கள், ஸ்தோத்திரப் பாடல்கள், பதிகங்கள் எவையேனும் உங்களிடம் இருந்தால், அவற்றின் நகல் பிரதிகளை எனக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

-ஆர்.கிருஷ்ணன், மாக்கனூர்

நான் மாரியம்மனின் தீவிர பக்தர். எனக்கு தொட்டியன்குளம் மாரியம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, மானாமதுரை தெப்பக்குளம் மாரியம்மன், தாயமங்கலம் முத்துமாரியம்மன், மணப்பாறை முத்துமாரியம்மன், வீரபாண்டி கௌமாரியம்மன், செந்தூர் சந்தன மாரியம்மன், சிவகங்கை வெட்டுடையார் காளியம்மன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் ஆகிய திருத்தலங்களின் தல வரலாறு அடங்கிய புத்தகம் தேவைப்படுகிறது. மேற்கண்ட கோயில்களின் தல வரலாறுகள் எந்தப் புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளன? அந்தப் புத்தகத்தை எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது? எங்கே சென்றால் புத்தகத்தை வாங்கலாம்?

- சு.முருகேசன், அரிகாரம்பாளையம்

உதவலாம்... வாருங்கள்!

ங்களின் குலதெய்வம் பட்டுக்காரி அம்மன் என்று சொல்கிறார்கள். இந்த அம்மன் ஏழு அண்ணன் மார்களுக்குச் செல்லமான தங்கையாக பிறந்து வளர்ந்து, அவர்களில் ஓர் அண்ணனின் கோபத்தால் தலை வெட்டப்பட்டு இறந்ததாக அறிகிறேன். அதே வேளையில், இந்த அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால், கோயில் எங்கே இருக்கிறது என்கிற விவரம் தெரியவில்லை. உங்களுக்கு அந்த விவரம் தெரியும் எனில், அந்தக் கோயிலின் முழுமையான முகவரியை எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். அவ்வாறு நீங்கள் தகவல் தரும் பட்சத்தில், எங்கள் தலைமுறையே உங்களை வாழ்த்தும்.

-சு.வேலாயுதம், சான்றோர்குப்பம்

ங்கள் குலதெய்வம் ஆயிர ராமத்தைய்யனார். விருதுநகர் குருநாதன் கோயில் சந்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை எங்களது மூதாதையர் திருச்செந்தூர் வட்டாரப் பகுதியில் உள்ள மூலக்கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கட்டியுள்ளதாக அறிகிறோம். ஆனால், நாங்கள் அந்த மூலக்கோயிலுக்குப் போன தில்லை. அதே நேரம், அந்தக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவேண்டும் என்கிற விருப்பம் ஏற்பட்டுத் தேடியபோது, எங்களால் அந்தக் கோயிலைக் கண்டறிய முடியவில்லை. 'தாமிரபரணி’ படத்தில், நடிகை மனோரமா 'பிள்ளையாரப்பா... பேச்சியம்மா... நாராயணி... ஆயிரராமத்தைய்யா...’ என்று சொல்வதுபோல் ஒரு காட்சி வரும். அதனால், திருச்செந்தூர்ப் பகுதியிலேயே எங்கள் குலதெய்வத்தின் மூலக்கோயில் இருக்கிறது என்று நம்புகிறோம். உங்களுக்கு அந்தக் கோயில் எங்கே அமைந்துள்ளது என்கிற விவரம் தெரியும் எனில், அதுபற்றி எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

- ச.சுப்பிரமணியன், சென்னை-21

உதவலாம்... வாருங்கள்!

'எனது மகள் குடும்பத்தாரின் குலதெய்வம் களக்கோடி அய்யனார். இந்த ஸ்வாமியின் கோயில் எங்கே இருக்கிறது?’ என்று, 8.1.13 இதழில் சாத்தூர் வாசகர் எஸ்.சித்திவிநாயகம் கேட்டிருந்தார்.

'திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகில் முக்கூடல்- கடையம் சாலையில், பாப்பான்குளத்தை அடுத்துள்ள மடவார்வளாகத்தில் களக்கோடி அய்யனார் (சாஸ்தா) கோயில் அமைந்துள்ளது. மடவார்வளாகம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சாலையோரத்தில் உள்ள சிவன் கோயிலை அடுத்துள்ள சிறிய வண்டித் தடப்பாதையில் அரை கி.மீ. தொலைவு பயணித்தால் இந்தக் கோயிலை அடையலாம். இங்கே, ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர் பூரணை மற்றும் புஷ்கலை சகிதமாகக் காட்சி தருகிறார். தினசரி பூஜை உண்டு. தைப்பூசம் அன்று ஆலயத்தின் கும்பாபிஷேக நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்'' என்று, நாகர்கோவில் வாசகர் ஆர்.பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உதவலாம்... வாருங்கள்!

'சனி பரிகாரத் திருத்தலமான இருளசேரி எங்கே அமைந்துள்ளது? அதன் விவரம் தேவை’ என்று, 2.4.13 இதழில் சென்னை வாசகர் உ.மாதவன் கேட்டிருந்தார்.

'சனி நிவர்த்தி கோயிலான இருளசேரி, திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அங்குள்ள ஸ்ரீ காளிங்கேஸ் வரர் கோயில்தான் மேற்படி பரிகாரத் திருத்தலமாகத் திகழ்கிறது. சனிப் பிரதோஷத்தில் தொடங்கி, தொடர்ந்து 7 பிரதோஷங்கள் இங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீகாளிங்கேஸ் வரரை வழிபடுவோருக்கு ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டச் சனி, பாதச் சனி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகள் நீங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். இத்தலத்து நந்திதேவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரது வலது கண் சூரியன் வடிவத்திலும், இடது கண் சந்திரன் வடிவத்திலும் அமைந்துள்ளது சிறப்பு. இறைவியின் திருநாமம்- தாயினும்நல்லாள். இருளசேரி செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது...' என்று, விகடன் இணையதளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளார் வாசகர் குரு.

'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா- அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா!’ என்று துவங்கும் பாடல் எந்த இசை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது? அந்தப் பாடல் பற்றிய மேலும் விவரங்கள் எனக்கு வேண்டும்’ என்று, 19.3.13 இதழில் நவல்பூர் வாசகர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி கேட்டிருந்தார்.

மேற்படி வாசகர் கேட்ட விவரங்களை வாசகர் பதஞ்சலி, விகடன் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த விவரங்கள் வாசகர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்திக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.