தாயே... சக்தி கொடு!வி.ராம்ஜி
##~## |
நம்பிக்கையே வாழ்க்கை! அதனால்தான் நம்பினோர் கெடுவதில்லை என்று சொல்லி வைத்தார்கள் பெரியோர். தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் சேர்ந்து பிரகாசிக்குமானால், நமது வாழ்க்கை வளம் பெறும்; வெற்றியே கிட்டும்!
வீடு முழுவதும் பல அறைகள் இருக்கலாம். ஆனால், நமது பூஜை அறைக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. அங்கே அமர்ந்திருக்கிறபோது ஏற்படுகிற எண்ண அலைகள் உசத்தியானவை; உயிர்ப்பானவை! அந்தச் சின்னஞ்சிறிய பூஜை அறைக்கே அவ்வளவு பெரிய சக்தி உண்டு என்றால், தெய்வங்கள் குடியிருக்கும் கோயிலில் எத்தகு மகத்தான சக்திகள் சூழ்ந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்!
'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்பார்கள். வாழ்க்கை எனும் பயணத்தில், திக்குதிசை தெரியாமல் தவிக்கும் நமக்கு, அந்தத் தெய்வம் தான் துணை! கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால், தெய்வம் நம்மை நோக்கிப் பத்து அடி எடுத்து வைத்து முன்னேறி வரும் என்பது சத்திய வாக்கு!
தமிழகத்தில் அற்புதமான கோயில்கள் மிகப் பெரிய சாந்நித்தியத்துடன் திகழ்கின்றன. அந்தக் கோயில்களுக்குச் சென்று, நம்பிக்கை யுடன் அந்தக் கடவுளைச் சரணடைந்து, வாழ்வில் நிம்மதியும் அமைதியும் பெற்றவர்கள் ஏராளம். ''கடவுள் மனுஷ ரூபத்துல வந்து உதவி செய்யும்னு சொல்லுவாங்க. அப்படித் தான் எங்க வாழ்க்கைலயும் நடந்துச்சு'' என்று எத்தனையோ பேர் சிலிர்ப்புடனும் வியப்புடனும் சொல்லிக் கேட்டிருப்போம். ஏன்... நாமேகூட பல தருணங்களில் அப்படிச் சொல்லிப் பூரித்திருப்போம்.

''எனக்கு இந்தப் பிரச்னை இருந்தது. கோயிலுக்குச் சென்று இந்த வழிபாட்டைச் செய்தேன். நினைத்த வரம் கிடைத்து, பிரச்னைகள் நீங்கி இன்றைக்கு நிம்மதியாக இருக்கிறேன்'' என்று சொல்லி, அந்தக் கடவுளே கதி என வாழ்ந்து வருபவர்கள் எத்தனையோ பேர்.
'இதோ, எந்தன் தெய்வம்’ என்கிற இந்தத் தொடர், கோயில்களைப் பற்றியும் வழிபாடு களைப் பற்றியும் சொல்லுவதோடு, வரம் பெற்றவர்களையும் சொல்லப்போகிறது.
முதலில், சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்குச் செல்வோமா?
பெண்ணுக்கு முன்னுரிமை கொடுப்பதுதானே நமது பண்பாடு! சக்திவிகடனில் சக்தியை, தேவியை, அம்பாளைப் பற்றி முதலில் எழுதுவதுதானே சரி? உண்மையில், நமக்குச் சக்தியை அருள்பவள் தேவிதான். 'இன்னிக்கு நான் ஓடியாடி தெம்பும் திடனுமா வேலை செய்றதுக்குக் காரணம், சின்ன வயசுல அம்மா பார்த்துப் பார்த்து ஊட்டிய சாப்பாடுதான்!’ என்று 40 வயதை நெருங்கிவிட்ட பலரும் நெகிழ்ந்து சொல்வார்கள் அல்லவா! அப்படியிருக்க, அம்பிகையே தாயின் கருணையோடு நமக்குச் சக்தியை வழங்கினால், நாம் இந்த ஜென்மம் முழுவதும் நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் வாழலாம்தானே!

அந்த வகையில், ஸ்ரீகாளிகாம்பாள் மிகுந்த வரப்பிரசாதி. ஸ்ரீகாளி என்றால், சிவந்த பெரிய விழிகளும், கோரைப் பற்களுமாக ஆவேசமாகவும் கடும் உக்கிரமாகவும் பார்த்துக் கொண்டு, காலில் அசுரனை சூலாயுதத்தால் வதம் செய்தபடி, கழுத்தில் மண்டையோட்டு மாலை அணிந்து காட்சி தருவாள் என்று நினைத்துவிடாதீர்கள். இவள், உக்கிரக் காளி அல்ல; அன்பே உருவானவள். சாந்த சொரூபினி. அமைதியே உருவானவள். தாய்க்கும் தாயானவள்!
சென்னை- பாரிமுனையில், கசகசவென நெரிசல் மிகுந்த தம்புச்செட்டித் தெருவில் குடிகொண்டிருக்கிறாள் ஸ்ரீகாளிகாம்பாள். காளி என்றால் காலத்தைக் குறிக்கும். இவள் காலத்துக்குச் சொந்தக்காரி. காலம் முழுவதும் நம்மைக் காத்தருளும் காவல்தெய்வம்.
ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எப்போது சென்றா லும் கூட்டம் 'ஜே... ஜே’வென இருக்கும். திட்டமிடல் ஏதும் இன்றி, ''ரெண்டு நாளா மனசே சரியில்லை. காளிகாம்பாள் சந்நிதிக்கு வந்து, நின்னுட்டுப் போனா தேவலை போல இருந்தது. அதான் வந்தேன்'' என்று திடீரெனக் கிளம்பி வருகிறவர்களே அதிகம்.

சென்னை ஆழ்வார்பேட்டை இசபெல்லா மருத்துவமனையில் இருந்து ஓர் அதிகாலை வேளையில் அந்தக் கார் புறப்பட்டு, கடற் கரைச் சாலைக்கு வந்து, ஜார்ஜ் கோட்டையைக் கடந்து, கடைசியாக அது வந்து நின்ற இடம்... ஸ்ரீகாளிகாம்பாள் கோயில்.
அவர் வருவது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் சிறிது நேரத்துக்கு முன்பாக! எனவே, அவரை வரவேற்கவும் அவருக்கு எந்த இடையூறு நிகழாதபடியும் பார்த்துக்கொள்ள பரபரவென ஆளுக்கொரு பணியில் இறங்கினார்கள்.
கிட்னியில் சிக்கல். கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிக்கல், இன்னும் இன்னும் தனது வேலைகளைக் காட்டத் துவங்க, மருத்துவ மனையில் அட்மிட் ஆனார் அவர்.
'ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதிக்குப் போயிட்டு அப்புறம் எங்க வேணா போகலாம். முதல்ல அம்மாகிட்டப் போகணும்’ என்று தன் விருப்பத்தைச் சொல்ல, அட்மிட் ஆகியிருந்த அந்த நிலையிலும் ஆஸ்பத்திரியில் இருந்து கோயிலுக்கு வந்தார்.
கார் விட்டு இறங்கியதும், உடல் வலுவிழந்த நிலையில் கூட, கோயிலுக்குள் தாய்ப் பசுவைத் தேடி குதித்தோடும் கன்றுக்குட்டியாய், ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதிக்கு ஓட்டம் போலான நடையுடன், அவருக்கே உண்டான வேகத்துடன் சென்றார்.
அவர்... காளிகாம்பாளின் தீவிர பக்தரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
- சிலிர்ப்போம்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா