சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2
##~##

''முக்காலத்தையும் உணர்ந்து, அதற்குத் தக்கபடி நம் வாழ்க்கையை அமைத்து அருள்பவள் ஸ்ரீகாளிகாம்பாள். இவளின் சந்நிதிக்கு வந்து நின்று, ஒரு நிமிடம் கண்மூடிப் பிரார்த்தித்து, நமது மனக்குறையைச் சொன்னால் போதும்... சட்டென்று நம் துக்கங்களைக் களைந்துவிடுவாள். எவ்வளவு மனச் சோர்வாக இருந்தாலும், இவளைத் தரிசனம் செய்துவிட்டால், நம் மனத்துள் புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் விதைத்துவிடுவாள், தேவி!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிற லட்சக்கணக்கான பக்தர்களில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர்.

மனத்தில் டென்ஷன், பரபரவென்று ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்படியான பணிகள், சூழ்ச்சிகளும் சுயநலமும் நிறைந்துவிட்ட அரசியலை நினைத்து வருகிற கோபம்... என்று எதன்பொருட்டாவது நிம்மதியின்மையும் ஒருவித சோர்வும் வந்துவிட்டால், சத்தமே இல்லாமல், 'இதோ வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு, டிரைவரிடம் ''காளிகாம்பாள் கோயில் போகணும்பா'' என்று உடனடியாகக் காளிகாம்பாள் கோயிலுக்குக் கிளம்பி விடுவாராம், ரஜினிகாந்த். அப்படிக் காரில் பயணிக்கும்போதே, அருகில் இருப்பவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், செல்போன் அழைப்புகளையும் ஏற்காமல், ஸ்ரீகாளிதேவியின் ஸ்லோகத்தை மனத்துக்குள் லேசாக முணுமுணுத்தபடியே வருவாராம்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, உணவில் ஏதோ பிரச்னை என்று ஆஸ்பத்திரிக்குச் செல்ல, கிட்னியில் கோளாறு எனப் பரிசோதனையில் தெரியவந்தது. ஆழ்வார் பேட்டை மருத்துவமனையில் இருந்து சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிப்பதே சிறந்தது என்று சொல்லப்பட, ''முதல்ல அம்மாவைத் தரிசனம் பண்ணிட்டு வந்துடுறேன். அப்புறம் எங்கே வேணாலும் போகலாம்'' என்று சொல்லிவிட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து அதிகாலையில் ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று பதினைந்து நிமிடங்கள் அவளின் சந்நிதியில், எதிரில் அமர்ந்து கொண்டு தியானித்தார் ரஜினிகாந்த்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

முன்னதாக, அவர் கார் விட்டு இறங்கியதுமே அவரை வரவேற்று, ''உங்களுக்கு ஒண்ணும் ஆகாது சார். கவலைப்படாதீங்க!'' என்று விருப்பமாகவும் ஆசீர்வாதமாகவும் தெரிவித்தார்கள், சிவாச்சார்யர்கள்.

''நான் ஏன் கவலைப்படணும்? காளிகாம்பாள் எனக்கு எப்பவும் துணையா இருக்கா. எனக்கு ஒண்ணும் ஆகாது. அவளைத் தரிசனம் பண்ணணும்னு தோணுச்சு. அதான் சட்டுன்னு கிளம்பி வந்துட்டேன். இவனை (தன்னைக் கைகாட்டி) என்ன செய்யணும், இவனுக்கு என்ன தரணும்னு அவளுக்குத் தெரியும். அம்பாள் பார்த்துக்குவா!’ என்று நெஞ்சில் கைவைத்தபடி சொல்லிவிட்டு, பணிவுடன் சிரித்துக்கொண்டே விறுவிறுவெனக் கோயிலுக்குள் நுழைந்து, ஸ்ரீகாளிகாம்பாளை வணங்கினார் ரஜினிகாந்த்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

''வீட்லயோ வியாபாரத்துலயோ சின்னதா சறுக்கல் வந்தாலும் சரி, புதுசா ஏதாவது பண்றதா இருந்தாலும் சரி... அம்பாள்கிட்ட வந்து வேண்டிக் கிட்டு காரியத்துல இறங்கறவங்க அதிகம். குறிப்பா, தம்புசெட்டித்தெரு மற்றும் கோயிலைச் சுற்றிலும் உள்ள வியாபாரிகள் பலருக்கும் ஸ்ரீகாளிதான் இஷ்டதெய்வம். அதேபோல, ரஜினி சாருக்கும் இவள்தான் இஷ்டதெய்வம். அதனாலதான் பாபா படத்துல, ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலை அப்படியே செட் போட்டு, கதையின் திருப்புமுனைக் காட்சியா அமைச்சிருப் பார்'' என்கிறார் காளிதாஸ் சிவாச்சார்யர். தாத்தா, அப்பாவுக்குப் பிறகு கோயிலில் தற்போது கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறார் இவர்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

'பாபா’ படத்தில், படம் முழுவதும் கழுத்தில் ஒரு சதுர வடிவ டாலர் அணிந்திருப்பார் ரஜினி. அது, ஸ்ரீகாளி யின் ஸ்ரீசக்கரம். அதில், அவளின் மூலமந்திரங்கள் பொறிக்கப்பட்டிருந் தன. அந்த டாலரைத் தயாரித்து, கோயிலில் அம்பாள் சந்நிதியில் வைத்துப் பிரார்த்தித்து, ரஜினியிடம் கொடுக்கப்பட்டதாம்.

''ரஜினி சாருக்கு காளிகாம்பாள் மேல எந்த அளவுக்குப் பக்தி உண்டோ, அதேபோல எங்க அப்பா மேல அவருக்கு அந்த அளவுக்கு மரியாதை உண்டு. இந்தக் கோயில் இன்னிக்கிச் செழிச்சு வளர்ந்து நிக்கிறதுக்கு அப்பாவும் ஒருவகையில காரணம். இன்னிக்கு அப்பா இல்ல. ஆனா, பிரபலங்கள்லேருந்து பழம் விக்கிறவங்க வரைக்கும் யார் வந்தாலும் எங்களைப் பார்த்தா, அப்பாவைப் பத்தி ரெண்டு வார்த்தை சொல்லிட்டுத்தான் போவாங்க. அந்த அளவுக்கு அன்பு அன்பு அன்புன்னே வாழ்ந்தவர் அப்பா'' என்கிறார் காளிதாஸ் சிவாச்சார்யர். அவரின் அப்பா...   டி.எஸ்.சாம்பமூர்த்தி சிவாச்சார்யர். சாம்பு மாமா, சாம்பமூர்த்தி அண்ணா என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். இன்னும் பலர் சிவாச்சார்யர் என்று சொல்கிறார்கள்.

''அப்பாகிட்டேர்ந்து பாஸிட்டிவ் வார்த்தைகள் மட்டும்தான் வரும். 'வாங்கோ வாங்கோ’ன்னு கூட்டத்தைப் பார்த்து அவர் சொல்லும்போது, மொத்த பக்தர்களும் சந்தோஷமாயிடுவாங்க. 'எல்லார்க்கும் குங்குமப் பிரசாதம் கொடுங்கோ. கொடுக்கறபோது சிரிச்ச முகத்தோட கொடுங்கோ. அது வாங்கறவங்களுக்குத் திருப்தியையும் நம்பிக்கையையும் கொடுக்கும். கொடுக்கறவங்களுக்கும் ஒரு ஆத்ம சந்தோஷத்தைத் தரும்’னு சொல்லுவார் அப்பா.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

'என்ன பிச்சுமணி... பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்னு வந்திருக்கேளா? அவகிட்ட முறையிடுங்கோ. இருபது வருஷமா தொடர்ந்து வந்துட்டிருக்கிற பிச்சுமணியை அம்மாவுக்கு நன்னாத் தெரியும். எல்லாம் அவ பார்த்துப்பா!’ என்று சொல்வார் அப்பா. 'அம்மா, காளிகாம்பா..! மரகதம்மா தன் பொண்ணுக்குக் கல்யாண வரம் தகையலேன்னு வந்திருக்கா. அந்தக் குழந்தைக்கு நல்ல வரனாக் கொடும்மா! உன்னைப் பார்க்க வரும்போதெல்லாம் கைகொள்ளாத அளவுக்கு அரளியும் தாமரையுமா வர்றவங்களை நீ சந்தோஷப்படுத்து தாயே!’ன்னு அம்பாள்கிட்ட முறையிடுவார். அந்தக் கருணைத் தெய்வமும் வேண்டியதையெல்லாம் கொடுத்து, அருள்பாலிப்பா.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

இன்னிக்கு எனக்கு, அண்ணாவுக்கெல்லாம் நல்ல பேரும் மரியாதையும் கிடைச்சிருக்குன்னா, அதுக்கு அப்பாதான் காரணம். ஒரு கோயில்ல பூஜை பண்ற சிவாச்சார்யர், பூஜைலயும் வர்ற பக்தர்கள்கிட்டயும் வழிபாட்டுலயும் எப்படி நடந்துக் கணும்னு எங்களுக்கு வாழ்ந்து காண்பிச்ச குருவும் அவர்தான்!'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சாம்பமூர்த்தி சிவாச்சார்யரின் இளைய மகன் சண்முக சிவாச்சார்யர்.

இன்றைக்குத் தம்புச்செட்டித் தெருவில் இருந்தபடி அரசாட்சி செய்துகொண்டிருக்கிற ஸ்ரீகாளி காம்பாள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஜார்ஜ் கோட்டைப் பகுதியில்தான் இருந்தாள். அப்போது, அவளுக்கு ஸ்ரீசென்னியம்மன் என்று திருநாமம். கடலையட்டிய பகுதியில், கடலைப் பார்த்தபடி இருந்தவளே நமக்குக் கண்கண்ட தெய்வம் என்று மீனவர்கள், 'சென்னியம்மா... சென்னியம்மா’ என்று கொண்டாடினார்கள். தினமும் இவளை வணங்கி, 'எங்களுக்கு நல்ல திசையைக் காட்டு தாயே’ என வேண்டிக்கொண்ட பின்புதான், படகில் ஏறி மீன் பிடிக்கச் செல்வார்கள். கோட்டைப் பகுதியில் இருந்ததால், இவளுக்குக் 'கோட்டம்மன்’ என்கிற பெயரும் இருந்ததாம்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 2

நடுக்கடல் வரைக்கும் சென்று, படகு கொள்ளாத அளவுக்கு மீன்களும், மனம் கொள்ளாத அளவுக்குச் சந்தோஷமுமாகக் கரை திரும்புவார்கள் மீனவர்கள். அப்படிக் கொண்டுவந்த மீன்களை அம்மன் சந்நிதியில் வைத்துவிட்டு, 'நீ கொடுத்த பிச்சை தாயே இது! உனக்குக் கோடி நன்றிம்மா’ என்று சொல்லி நெகிழ்ந்து போவார்கள்.

கடலோரத்தில் மீனவர்களால் மட்டும் வணங்கி, வழிபடப்பட்டவளின் சாந்நித்தியம் மெள்ள மெள்ள சென்னைப் பட்டணம் முழுவதும் பரவியது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற ஜனங்களும் கோட்டைக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றார்கள்.

''என்ன இது... சந்தை மாதிரி கசகசன்னு கூட்டம் அதிகமாயிட்டே இருக்கு'' என்று ஒரு கட்டத்தில் முகம் சுளித்த ஆங்கிலேயர்கள், 'இப்படி அடிக்கடி வருவது கூடாது’ என்று கெடுபிடி செய்தார்கள். மிரட்டினார்கள். விரட்டினார்கள்.

''அம்பாளைக் கொடுங்க, நாங்க பாத்துக்கறோம். வேற இடத்துல வைச்சுக்கறோம்!'' என்று கடற்கரைக்கு எதிரில் வசித்த வியாபாரிகள் சிலர் சொன்னார்கள்.

'நல்லதுதான். ஆனா, சாமிக் குத்தம் ஆயிடுமோ!’ என்று வெள்ளையர்கள் மிரண்டு போனார்கள். என்ன செய்யலாம் என குழம்பித் தவித்தார்கள். அவசரமாகக் கூடி விவாதித்தார்கள்.

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா