சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

முருகனின் தொண்டர்கள்!

முருகனின் தொண்டர்கள்!

முருகனின் தொண்டர்கள்!
##~##

ந்தமார் முருக தாசனாய் வண்ணச்
சரபனாய் வயங்கிய தூயோன்
சொந்தமார் சீடன் ஆகிநற் சிரவைத் 
தொண்டருக் காம்மடம் சமைத்தோன்
அந்தமாய் மறைசொல் அறுவகைச் சமயம்
அகப்படு கௌமார சபையைத்
தந்தமா ராமானந்தரின் பாத
தாமரை அநுதினம் தொழுவாம்

- புலவர் ப.வெ.நாகராசன்

'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு’ என்று தொடங்கும் அற்புத பக்தி இலக்கியம், திருமுருகாற்றுப்படை. செந்தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள கந்தக் கடவுளின் முதல் பக்தி இலக்கியம் இது. நக்கீரர், ஆறுமுகப் பெருமானை ஆற்றுப்படுத்தும் இந்த அற்புதப் பாமாலை, முருக வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது.

முருகன் வழிபாடு என்பது, தமிழ் தோன்றிய நாள் முதல் சிறந்து விளங்குகிறது. கந்தப்பெருமானை முழு முதற்கடவுளாகக் கொண்ட சமயநெறி- கௌமாரம்.

சைவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், வைணவம், சௌரம் என்பன நம் இந்து மதத்தின் ஆறு வகை சமய வழிபாட்டு நெறிகள். ஒளியைத் தருவது சூரியன் (சௌரம்), ஒடுக்கம் அளிப்பது சிவபெருமான் (சைவம்); உதவும் தன்மை சக்தி (சாக்தம்); காக்கும் திறன் திருமால் (வைணவம்); இடர்களை அகற்றுவது கணபதி (காணாபத்யம்); ஞானஒளி அளித்து இருள் அகற்றுவது குமரன் (கௌமாரம்) என, பரம்பொருளின் ஆறு குணங்களை இந்த சமயநெறி விளக்குகிறது.

கௌமாரம் என்னும் சமயத்துக்கு உரிய கடவுள் குமரன். அதாவது, சிவகுமாரனான முருகப் பெருமான். 'கு’ என்றால் அஞ்ஞானம்; 'மாரன்’ என்றால் அழிப்பவன். அதாவது, அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை அளிப்பவன்- குமரன்.

முருகனின் தொண்டர்கள்!

இப்படிப்பட்ட குமரனை வழிபடும் பக்தர்கள் கௌமாரர் என அழைக்கப்படுவர். ''சமயக் கூட்டம் ஆறும் எங்கள் கவுமாரத்துள் அடக்கம் தானே!'' என்பார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவரே கௌமார நெறியைப் புதுப்பித்ததோடு, விழுப்புரத்தை அடுத் துள்ள திருவாமாத்தூரில் கௌமார மடம் ஒன்றையும் நிறுவியவர். இவரது சீடரே ராமானந்த சுவாமிகள். கோவை அருகில் சிரவணம்பட்டி என்னும் சிரவணபுரத்தில் கௌமார மடாலயம் (சிரவை ஆதீனம்) ஒன்றைத் தோற்றுவித்த இவரை 'சிரவையாதீன முதல்வர்’ என்பர்.

கொங்கு நாட்டில் பிரசித்திபெற்ற பேரூர் என்ற தலத்தின் அருகில் உள்ள குன்று, ரத்னாசலம் என்னும் ரத்தினகிரி. இதனருகில் உள்ளது சிரவணம்பட்டி என வழங்கும் சிரவணபுரம். இந்த ஊரில் வாழ்ந்த வேலப்ப கவுண்டர்- ஆண்டாள் தம்பதி நீண்ட காலமாக மகப்பேறு வாய்க்காமல் வருந்தினர். ரத்னாசல முருகப்பெருமானை வேண்டி இவர்கள் விரதம் இருந்தபோது, அந்த கந்தக் கடவுள் இவர்களது கனவில் தோன்றி, ''அன்பனே, கவலை வேண்டாம்! தமிழ் வளர்த்த அகத்திய முனிவருடைய அம்சமாக உங்களுக்கு ஆண் மகவு உண்டாகும்!'' என்று அருள்பாலித்தார்.

அதன்படி, புரட்டாசி மாதம் முருகனுக்குரிய விசாக நட்சத்திரத்தில் (1858-ல்) அவதரித்தார் ராமானந்தர். இளம் வயதிலேயே சமயநெறியில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.சிரவணம்பட்டியில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்தி வழிபாடு அவரை மிகவும் கவர்ந்தது. கல்விக்கூடத்தில் படிப்பை முடித்தபின் தந்தையார் விருப்பப்படி விவசாயத்தையும் கவனித்துக் கொண்டு இறைவழிபாடு, பூஜை, ஜபம், தியானம் ஆகிய ஆத்ம சிந்தனைகளில் ஈடுபட்டார்.

பெற்றோர் இவருக்கு உரிய வயதில் மணம் முடிக்க முயற்சித்தனர். ஆனால், ராமானந்தருக்கோ அதில் விருப்பம் இல்லை. எனினும், தந்தையாரின் வற்புறுத்தலின்படி தமது 20-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இல்லற வாழ்வில் இவரது மனம் ஈடுபாடு கொள்ளவில்லை.

ஒருநாள், ராமானந்தரின் கனவில் தோன்றிய சிரவணம்பட்டி சிவலிங்கப்பெருமான், ''உனக்கு என்ன குறை இருந்தாலும், ஒரு தடவை திருச் செந்தூர் சென்று வந்தால், அந்தக் குறை உடனே நீங்கிவிடும்'' என்று அருளினார்.

இந்த அற்புதம் நிகழ்ந்த மறுநாளே, 'செந்தினகர் தன்னில் வாசனே!’ என்று தொடங்கும் கீர்த்த னையை இயற்றினார் ராமானந்தர். தொடர்ந்து, வீட்டில் உள்ளவர்களிடம் கூறாமல் புறப்பட்டு, திருச்செந்தூர் சென்றார். சரியான வழி தெரியாமல் நடந்து சென்று கொண்டிருக்கையில், ஒருவர் எதிர்ப்பட்டார். ''என் பெயர் சுப்பையர். நானும் திருச்செந்தூர்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நல்லவேளையாக, துணைக்கு நீங்கள் வருகிறீர்கள். இன்று, இங்கே பக்கத்தில் உள்ள என் தங்கையின் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, நாளை திருச்செந்தூர் புறப்பட்டுச் செல்வோம்'' என்றார்.

வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த ராமானந்தருக்கு சுப்பையரின் பேச்சும் கவனிப்பும் ஆறுதலைத் தந்தது. அவர் கூறியபடி, இருவரும் அவரது தங்கையின் இல்லத்துக்குச் சென்றார்கள். அங்கே, நீராடி வழிபாடு முடித்து, தூங்கச் சென்றனர். நடு இரவில் ராமானந்தர் கண் விழித்துப் பார்த்தபோது, உடனிருந்த சுப்பையரைக் காணவில்லை. பின்னர், உடன் வந்தவர் செந்திலாண்டவர்தான் என்பதை உணர்ந்து இன்புற்றார்.

அதன்பிறகு, உற்சாகத்தோடு திருச்செந்தூர் புறப்பட்டுச் சென்ற ராமானந்தர், அங்கே சில நாட்கள் தங்கி வழிபாடு செய்தார். 'உலக மாயையில் இருந்து விடுபட்டு இறையருள் கிட்ட எனக்கு அருள வேண்டும்’ என்று செந்தூர் முருகனிடம் வேண்டினார்.

ஒருநாள், அந்த முருகப்பெருமானே புலவர் தோற்றத்தில் வந்து ராமானந்தரைச் சந்தித்தார். அவரிடம், ''அடியேனை அறிந்தவர்கள் யாரும் இல்லாத இந்த ஊரில் என்னைத் தேடி வந்து என்னுடன் பேசும் தாங்கள் யாரோ?'' என்று கேட்டார் ராமானந்தர்.

அதற்குக் கந்தக்கடவுள், ''நான் இந்த ஊரில்தான் வசிக்கிறேன். என் பெயர் சுப்பையா பிள்ளை. நான் எப்போதும் உம்மை விட்டு நீங்காதவன்!'' என்று கூறி, சிறிது நேரத்தில் மறைந்தார்.

முருகப்பெருமானின் திருவருளை நேரில் கண்டு நெக்குருகிப் போனார் ராமானந்தர்.

அதன்பிறகு ஒருநாள், திருச்செந்தூரில் வாழ்ந்த மௌன சுவாமிகளைத் தரிசித்தார். அந்த நேரத்தில், யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வந்துவிட்ட ராமானந்தரைத் தேடிக்கொண்டு, சிரவணம்பட்டியில் இருந்து சிலர் அங்கே வந்துவிட்டனர். இதனால், அவர் உடனடியாகச் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

முருகனின் தொண்டர்கள்!

சிரவணம்பட்டியில் ராமானந்தர் வசித்து வருகையில், சாமக்குளம் என்ற ஊரில் வாழ்ந்த வேங்கடரமணதாசர் மூலம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அருமை பெருமைகளை அறிந்து, அவரையே தன் ஞானாசிரியராகக் கொள்ளவேண்டும் எனத் தீர்மானித்தார். அப்போது, பழநியில் தண்டபாணி சுவாமிகள் இருப்பதை அறிந்து, அங்கே சென்றார். அவரை வணங்கி தம்மை ஆட்கொண்டு உபதேசிக்க வேண்டினார். தண்டபாணி சுவாமிகள் அவருக்கு ஆறெழுத்து உண்மையை உபதேசித்து, கௌமார சமய நெறிகளை விளக்கினார். அவரிடம் துறவுக் கான காவி உடை முதலான தவக்கோலம் பெற்று, தமது ஊருக்குத் திரும்பினார் ராமானந்த சுவாமிகள்.

தொடர்ந்து, தமது இடத்தில் தவச்சாலை ஒன்றை அமைத்தார். அங்கு ஸித்தி மகோற்கட விநாயகர் கோயிலையும், ஸ்ரீதண்டபாணி ஆலயத்தையும் அமைத்து நித்திய பூஜைகளைத் தொடர்ந்தார். அவரது துறவற வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. அவரிடம் பலரும் உபதேசம் பெற்று, முருக அடியார்கள் ஆனார்கள். தமது ஞான குருவான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருவாமாத்தூரில் சமாதி அடைந்த போது, அங்கே அவருக்கு ஆலயம் எழுப்பி, திருமடம் கட்டி, தினசரி வழிபாடு செய்ய நிவந்தங்கள் ஏற்படுத்தினார். சிரவணம்பட்டியிலும் கௌமார மடாலயம் அமைத்து, கௌமார சபையை நிறுவினார்.

கொங்கு நாட்டில் உயிர் வதை, புலால் உண்ணுதல் போன்றவற்றை நீக்க பலருக்கும் அறிவுறுத்தினார். ஆன்ம நாட்டத்தில் வேட்கை அதிகரிக்க, அடியார் கூட்டம் ஒன்றையும் உருவாக்கினார். கௌமார மடாலயத்தின் அபிவிருத்தி, ஆலய பூஜை, வழிபாடு, பாராயணம் ஆகிய ஆன்மிகப் பணிகளைச் செய்ய இந்த அடியார் கூட்டத்தினர் முன்வந்தனர். அதையடுத்து, அடியார்கள் மகேஸ்வர பூஜை செய்ய தைப்பூச மடமும், உணவுக் கூடமும் அமைத்துத் தந்தார் ராமானந்த சுவாமிகள்.

இவர் இயற்றிய சண்முகமாலை, பதிகம், அந்தாதி, கீர்த்தனை, கண்ணி, குறள் போன்ற பலவகை செய்யுட்கள் கொண்ட நூல் 'ராமானந்தர் திரட்டு’ என்ற பெயரில் 1921-ஆம் ஆண்டு வெளிவந்தது. தமது சீடர்களில் தலைசிறந்த கந்தசாமி சுவாமிகளை 1923-ஆம் ஆண்டில் ஆதீனத் தலைவராக நியமித்தார். குருபக்தி, தெய்வ நாட்டம், ஆலய வழிபாடு, ஜபம், தியானம் ஆகியவற்றால் மானிடப் பிறப்பில் பெறற்கரிய பேறாகிய வீட்டின்பம் பெறலாம் என்பதை வலியுறுத்திய ராமானந்த சுவாமிகள், 1956-ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வெள்ளிக்கிழமை அன்று தமது தவச்சாலையில் உள்ள கனகசபை கூடத்தில் அமர்ந்து இறையருளைச் சிந்தித்தார். மனம் ஒடுங்கிய நிஷ்டை கூடி, முருகன் திருவடிகளில் கலந்தார்.

இவரால் உருவாக்கப்பட்ட சிரவணம்பட்டி கௌமார மடாலயம், இன்றும் சமயப் பணியோடு கல்வி, சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

- அடியார் வருவார்...