சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

##~##
உதவலாம்... வாருங்கள்!

எனக்கு 72 வயது ஆகிறது. இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. 1960-ல் என் தம்பி திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படித்தபோது, அங்கே பாடப்படும் இறைவணக்கப் பாடலை அழகாகப் பாடுவான்.

'உலகத்தின் முதல்வன் நீ
ஒரேழுத்தே அகரம் போல்
பல கலைகள் கற்றதும்

பயனுண்டோ உனை மறந்தால்...’ என்று துவங்கும் அந்தப் பாடல் இப்போது எனக்கு மறந்துபோய்விட்டது. அதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். உங்களில் யாருக்கேனும் இந்தப் பாடல் வரிகள் முழுமையாகத் தெரியும் என்றால், எனக்கு எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

- எம்.ராஜலக்ஷ்மி, சென்னை-86

உதவலாம்... வாருங்கள்!

'சிவலோக நாதனைக் கண்டு சேவித்து...’ என்று துவங்கும் பாடலை பாடகி நித்யஸ்ரீ பாடியிருக்கிறார். விஜய் டி.வி-யில் அதை ஒளிபரப்பியபோது நான் கேட்டு மகிழ்ந்தேன். எனக்குப்

உதவலாம்... வாருங்கள்!

பிடித்த இந்தப் பாடல் சி.டி. வடிவில் கிடைக்கிறது என்றால், எங்கே கிடைக்கும்? அல்லது, இந்த பாடல் உங்களுக்குத் தெரியும் என்றாலும், எழுதி அனுப்புங்கள்.

- ஜி.ராஜலட்சுமி, சென்னை-53

உதவலாம்... வாருங்கள்!

நட்சத்திரக் கோயில்கள் பற்றிய விவரமான தகவல்கள் அடங்கிய புத்தகம் வெளிவந்துள்ளதாக கேள்விப்பட்டேன். இந்தப் புத்தகம் எந்தப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது? எங்கே வாங்கலாம்? விவரம் தாருங்களேன், வாசகர்களே!

- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்

உதவலாம்... வாருங்கள்!

அமெரிக்காவின் சிகாகோவில் வசிக்கும் என் நண்பர் தனது பால்ய காலத்தில் (சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு) ராமாயணம் கற்றாராம். அதில்,

'ஆசீத் தசரதோநாம அத பார்திவ:
பார்யா: திகோபி லப்த்வாஸெள தாசுலேபி ந சந்ததிம்’

என்றொரு வாசகம் வருமாம். தற்போது, தான் படித்தது எந்த ராமாயணத்தில் என்பது மறந்துவிட்டது என்று சொன்ன நண்பர், அந்த ராமாயணத்தை இப்போது பாராயணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறினார். நண்பருக்கு உதவி செய்ய நானும் பல வழிகளில் அந்த ராமாயணம் பற்றித் தேடிப் பார்த்தேன். பலனில்லை. உங்களில் யாருக்கேனும் இதுபற்றிய விவரம் தெரியும் என்றால், உடனே தகவல் தாருங்களேன்.

- ஏ.சுந்தரராஜன், புதுடெல்லி

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

நான் ஸ்ரீவாராஹி அம்மனை வழிபட ஆசைப்படுகிறேன். இந்த அம்மன் வழிபாட்டை வீட்டில் செய்வது எப்படி? இந்த அம்மனுக்கான யந்திரம் மற்றும் விக்கிரகம் எங்கே கிடைக்கும்? எனக்குத் தகவல் தந்து உதவுவீர்களா?

- ரிஷிகேஷ், சென்னை-123

உதவலாம்... வாருங்கள்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயில்கள் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 'ஆந்திர மாநில கோயில்கள்’ என்கிற தலைப்பில் எந்தப் பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன? உங்களிடம் இருந்து விவரமான தகவலை எதிர்பார்க்கிறேன்.

- ஆர்.ஜெயராமன், ஈரோடு

உதவலாம்... வாருங்கள்!

ஸ்ரீசாரதாஸ் சுவாமிகள் என்று பெயர்கொண்டு அருள்புரிந்த ஸ்ரீபிரம்ம ரத்தினம் நீலகண்ட சாரதாஸ் சுவாமிகள் மற்றும் கும்பகோணம் ஸ்ரீஅண்ணா சுவாமிகளின் சரித்திரங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த மகான்களுடன் தொடர்புடைய அன்பர்கள் மற்றும் அவர்களின் வாழ்வில் மேற்படி மகான்கள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய விவரம் எங்களுக்குக் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். மேற்படி மகான்களுடன் தொடர்புடைய அன்பர்கள், அந்தத் தகவல்களை எழுதி அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

- குமார் தண்டபாணி, கமலாபுரம்

உதவலாம்... வாருங்கள்!

'ஜமதக்னி மகரிஷி பற்றியும், அவர் வழிபட்ட திருத்தலங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உதவ முடியுமா?’ என்று, 2.4.13 இதழில் தஞ்சாவூர் வாசகர் சிவ.கனகசபை கேட்டிருந்தார்.

'இருசிகர்- சத்யவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஜமதக்னி. இவரது மனைவியின் பெயர் ரேணுகாதேவி. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில், பரசுராமரின் தந்தை இவர். ஜமதக்னி- ரேணுகாதேவிக்கு நான்கு குமாரர்கள். அதில் ஒருவரே பரசுராமர்.

மனைவி ரேணுகாதேவியைக் கொன்ற சாயாஹத்தி தோஷம் தீர ஜமதக்னி முனிவரும், தாயைக் கொன்ற மாத்ருஹத்தி பாவம் நீங்க பரசுராமரும் லிங்கம் அமைத்து வழிபட்ட திருத்தலம் திருநின்றியூர் (இது, சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் அல்ல). அஷ்டலட்சுமிகள் சிவபெருமானை பூஜித்த எட்டு சிவஸ்தலங்களுள் ஒன்றான இது, மயிலாடுதுறையில் இருந்து வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே அருளும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீமகாலக்ஷ்மீஸ்வரர். ஜமதக்னீஸ்வரர், பரிகேஸ்வரர், வர்த்தி நிர்வாபணேஸ்வரர் என வேறு சில திருநாமங்களும் உண்டு. அம்பாளின் திருநாமம் உலகநாயகி.

இதேபோல், ஜமதக்னி முனிவர் வழிபட்ட மற்றொரு திருத்தலம் திருநல்லூர் பெருமணம் என்ற சிவஸ்தலம். இதன் இன்றைய பெயர் ஆச்சாள்புரம். சிதம்பரம்- சீர்காழி சாலையில் கொள்ளிடம் அருகே அமைந்துள்ளது இது. சிதம்பரம்- மகேந்திரப்பள்ளி பேருந்தில் சென்றால் இந்தத் திருத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் வசிஷ்டர், பராசரர், ப்ருகு, ஜமதக்னி ஆகிய நான்கு ரிஷிகளும் தவம்புரிந்து சாலோகம் என்ற சிவபதம் பெற்றனர் என்பது வரலாறு. சிவலோகத்தில் சிவனுடன் வசிக்கும் பெரும்பேறுதான் இது!' என்று தெரிவித்துள்ள சென்னை வாசகர் நசிகேதன், மேற்படி இரு கோயில்கள் பற்றிய இன்னும் பல தகவல்களையும் எழுதி அனுப்பி இருக்கிறார். இது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'எங்களது குலதெய்வம் எது என்பதை அறிந்து வழிபாடு செய்ய விரும்புகிறோம். அந்தக் கோயில் எங்கே இருக்கிறது?’ என்று, 2.4.13 இதழில் சென்னை வாசகி எம்.சரஸ்வதி கேட்டிருந்தார்.

'வாசகி சரஸ்வதியின் குலதெய்வக் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில், மணிமுத்தாறு செல்லும் வழியில் தெற்கு பாப்பான்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கேயுள்ள ஸ்ரீபொற்சடைச்சி, ஸ்ரீசடையுடையார் கோயில்தான் அது' என்று, சென்னை வாசகர் நா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.