குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!
##~##
உதவலாம்... வாருங்கள்!

எங்களது பூர்வீகம் கிளாம்பாக்கம் என்னும் கிராமம். உத்தியோகம் நிமித்தமாக எங்களின் முப்பாட்டனார் பர்மாவுக்குச் சென்றுவிட்டதால், எங்களுக்கும் கிளாம்பாக்கத்துக்கும் இடையேயான தொடர்பு வெகு காலமாக விடுபட்டுப் போய்விட்டது. எங்கள் பூர்வீகமான கிளாம்பாக்கம் கிராமம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் பக்கம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது, அமெரிக்காவில் உள்ள எங்கள் பேரன் பாஸ்போர்ட்டில் கிளாம்பாக்கம் கிராமம் என்று உள்ளதால், 'அந்த ஊர் எங்கே இருக்கிறது? நாம் அங்கே போக வேண்டும்’ என்று சொல்கிறான். கிளாம்பாக்கம் எங்கே இருக்கிறது என்கிற தகவலுடன், எங்கள் குலதெய்வமான பெரியாண்டவரின் கோயில் அங்கே உள்ளதா, அல்லது எங்கே இருக்கிறது என்கிற தகவலையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். தகவல் தெரிந்தோர் தெரிவியுங்களேன்!

 - என்.கிரிஜா, சென்னை-40

உதவலாம்... வாருங்கள்!

எங்கள் குலதெய்வம் ஸ்ரீஆனந்தாயி அம்மன். இந்த அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட விரும்புகிறேன். ஆனால், கோயில் எங்கே இருக்கிறது என்கிற விவரம் தெரியவில்லை. நான் விசாரித்தவரையில், சேலம் அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், கோயிலின் சரியான அமைவிடம் தெரியவில்லை. உங்களுக்கு ஸ்ரீஆனந்தாயி அம்மன் கோயில் வரலாறு மற்றும் அந்தக் கோயிலின் அமைவிடம் ஆகிய விவரங்கள் தெரியும் எனில், எனக்கு எழுதி அனுப்புங்களேன்!

உதவலாம்... வாருங்கள்!

- எஸ்.இளங்கோவன், அம்மாபேட்டை

உதவலாம்... வாருங்கள்!

'மனமகிழ் காலை தோன்றி மனமலர் மலர்த்து வானை...’ என்று துவங்கும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'ஆதித்ய ஹிருதயம்’ பாராயணம் செய்ய ஆசைப்படுகிறேன். உங்களிடம் தமிழ் ஆதித்ய ஹிருதயம் இருந்து, அதன் நகல் பிரதியை எனக்கு அனுப்பி வைத்தாலோ அல்லது எழுதி அனுப்பினாலோ மிகவும் மகிழ்வேன்.

- எல்.உமாராணி, நாமக்கல்

உதவலாம்... வாருங்கள்!

சக்தி விகடனில் பி.என்.பரசுராமன் எழுதி வரும் 'ஞானப் பொக்கிஷம்’ பகுதியில் வெளியான 'சாருசர்யா’ என்கிற நூல் பற்றிப் படித்திருப்பீர்கள். இந்த நூலை ஆர்.முத்துகிருஷ்ண சாஸ்திரி என்பவர் தமிழில் உரை எழுதி வெளியிட்டுள்ளார் என்றும் எழுதியிருந்தார். சாருசர்யா நூலின் தமிழாக்கம் யாரிடமேனும் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதேபோல், இந்த நூல் எங்கேனும் விற்பனைக்குக் கிடைக்கிறது என்றால், அது பற்றித் தகவல் சொன்னாலும் சந்தோஷப்படுவேன்.

- எஸ்.ராகவன், சென்னை-28

உதவலாம்... வாருங்கள்!

கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் ஆகியவற்றின் தமிழாக்கங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. சென்னையில் இவை எங்கே கிடைக்கும்? அல்லது, வாசகர்கள் யாரிடமேனும் இருந்து, நகல் எடுத்து அனுப்பிவைத்தாலும் மகிழ்வேன்.

- ஆனந்த் வி.ராமன், சென்னை-20

உதவலாம்... வாருங்கள்!

வேதவியாசர் வடமொழியில் எழுதிய மூலநூலான மகாபாரதத்தின் நேரடி தமிழாக்கம் ராமானுஜ ஐயர் என்பவரால், சுமார் 14 ஆயிரம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்த நூலை வாங்கிப் படிக்க ஆவல். இந்த நூல் எங்கே கிடைக்கும்?

- வை.சுந்தரமூர்த்தி, கொளத்தூர்

உதவலாம்... வாருங்கள்!

'உலக உயிர்கள் எல்லாம் செழிப்புற... ஏரி, குளம், குட்டைகள் நீர் நிரம்பி வளம்பெற பிரத்யேக வழிபாடு ஏதேனும் இருக்கிறதா? அந்த வழிபாட்டின்போது செல்ல வேண்டிய ஸ்தோத்திரம் எது?' என்று, 16.4.13 இதழில் மாக்கனூர் வாசகர் ஆர்.கிருஷ்ணன் கேட்டிருந்தார்.

உதவலாம்... வாருங்கள்!

'திருஞானசம்பந்தர் அருளிய இரு பதிகங்கள் மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்தவை. இந்தப் பதிகங்களை பலர் ஒன்றுசேர்ந்து கோயில்களிலோ, பசுமையான மரத்தின் அடியிலோ அல்லது புனிதமான இடங்களிலோ வாய்விட்டுப் பாட வேண்டும். அப்படிச் செய்யும்போது எழும் ஒலி அலைகள் மேகத்தை முட்டி, மழையைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். மன உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நிச்சயம் இது நடக்கும்...' என்று தெரிவித்துள்ள கும்பகோணம் வாசகர் வை.சந்தானகிருஷ்ணன், திருஞானசம்பந்தர் அருளிய அந்த இரு பதிகங்களின் நகலையும் அனுப்பியிருக்கிறார். இது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் வரும்,

'ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந்  தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..!'
என்கிற பாடலைப் பாடினாலும் மழை பெய்யும் என்று, திருச்சி வாசகி ஜே.தனலெக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

'ஆண்டாள் எந்த ஆண்டு அவதரித்தாள்? அவள், ராமானுஜருக்கு முந்தையவளா, அல்லது அவருக்குப் பிறகு அவதரித்தவளா? விவரம் தாருங்களேன்..!' என்று, 16.4.13 இதழில் திருச்சி வாசகர் வி.பி.குப்புஸ்வாமி கேட்டிருந்தார்.

'விஷ்ணுசித்தருக்கு துளசிச் செடியின் அடியில் ஆண்டாள் கிடைத்தபோது, கலியுகம் ஆரம்பித்து 97 ஆண்டுகள் கழிந்திருந்தது. நள வருடம், ஆடி மாதம், சுக்லபக்ஷம் ஆறாம் நாள், பூரம் நட்சத்திரத்தில், செவ்வாய்க்கிழமை அன்று சதுர்த்தி திதியில் ஸ்ரீகோதை என்னும் திருநாமத்துடன் அவதரித்தாள். ஆண்டாள், தான் அருளிய 'நாச்சியார் திருமொழி’யில் '100 தடாவில் வெண்ணெயும், 100 தடா நிறைந்த அக்காரவடிசிலும் சொன்னேன் மாலிருஞ்சோலை நம்பிக்கு’ என்று குறிப்பிடுகிறாள். அவள், பகவானுக்குத் தருவதாகச் சொன்ன இவை வெறும் பாடலாக நின்றுவிட்டது. ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பரப்புவதையே லட்சியமாகக் கொண்ட ராமானுஜர், ஆண்டாள் சொன்னதைச் செயல்படுத்துவது தன் கடமை அல்லவா என்று நினைத்தார். உடனடியாக, மதுரை திருமாலிருஞ்சோலை அழகருக்கு 100 அண்டாவில் அக்காரவடிசிலும் (பாலில் செய்த சர்க்கரைப் பொங்கல்), 100 அண்டாவில் வெண்ணெயும் சமர்ப்பித்துவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடிபணிந்து நின்றார். ராமானுஜரின் இந்தச் செயலுக்காக ஸ்ரீஆண்டாள் கோயில் கர்ப்பகிரகத்தில் இருந்து அர்த்தமண்டபம் வரை நகர்ந்து வந்து, 'வாரும் நம் அண்ணனே..!’ என்றாள். இதிலிருந்து ராமானுஜருக்குத் தங்கையே ஆண்டாள் என்பது தெளிவாகிறது' என்று, பெங்களூரு வாசகி வசந்தா கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

உதவலாம்... வாருங்கள்!

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.