மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 3

தாயே... சக்தி கொடு!வி.ராம்ஜி

##~##

''உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், அங்கே என்ன பிரச்னைகள் வந்து என்னைத் தவியாய்த் தவிக்க வைச்சாலும், ஒரு நிமிஷம்... ஒரேயரு நிமிஷம் கண்ணை மூடி, ஸ்ரீகாளிகாம்பாளை ஆத்மார்த்தமா வேண்டிக்கிட்டாப் போதும்; 'அம்மா காளிகாம்பா..! எனக்குத் துணையா என் பக்கத்துல வந்து நின்னு என்னைப் பத்திரமாப் பாத்துக்கோ’ன்னு ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டாப் போதும்... உடனே ஓடோடி வந்து நின்னுடுவா. நமக்கு ஒரு பிரச்னையும் இல்லாம பார்த்துக்குவா. நம்ம எல்லாருக்கும் தாய் அவ. அதனால, குழந்தையின் விசும்பல் கேட்டதும் ஓடி வர்ற அம்மா மாதிரி நம்ம குரலுக்கு ஓடி வருவா'' என்று உறுதியுடன் சொல்கிறார் சண்முக சிவாச்சார்யர். வார்த்தைக்கு வார்த்தை ஸ்ரீகாளிகாம்பாளை 'தாயே... தாயே...’ என்று மந்திரம் போல் உச்சரித்துக்கொண்டே இருப்பவர் இவர்.

சென்னை, கோட்டைப் பகுதியில் ஸ்ரீசென்னம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்த வளை வெளியிடத்துக்குக் கொண்டு சென்று, எங்கு விருப்பமோ அங்கு வைத்து வழிபட அனுமதித்தார்கள் ஆங்கிலேயர்கள். அப்படி எடுத்துச் செல்லும்போது, முறைப்படி என்னென்ன சடங்குகள் செய்யவேண்டுமோ அதையெல்லாம் இங்கேயே கோட்டைப் பகுதியில் செய்துகொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

பாரிமுனைப் பகுதியில் இருந்த வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஸ்ரீசென்னம்மனுக்குக் கோயில் கட்டப் பொருளுதவி தந்தார்கள். குறிப்பாக, விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஈடுபாட்டுடனும் ஆத்மார்த்தமான பக்தியுடனும் பெருமளவு நிதி தந்து கோயிலைப் பராமரிக்கவும் முடிவு செய்தார்கள். கோயில் கட்டுகிற வேலை யையும், நிர்வகிக்கிற பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைத்தது அன்றைய ஆங்கிலேய அரசு. அதன்பின், தம்புச் செட்டித் தெருவில் ஸ்ரீசென்னம்மனுக்குக் கோயில் எழுப்பி, அன்று துவங்கி இன்று வரையில், அதை மிகச் சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்றனர் விஸ்வகர்மா சமூகத்தினர்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 3

ஸ்ரீகாளிதேவியை குலதெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் கொண்டு வழிபட்ட வர் சத்ரபதி வீர சிவாஜி. எனவே, இந்த தேவிக்கு ஸ்ரீகாளிகாம்பாள் எனத் திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினார்கள்.

எதிரிகளின் தொல்லைகளை ஒழிப்பவள் ஸ்ரீகாளிகாம்பாள். நம்முடைய முதல் எதிரியான மனக்கிலேசத்தை, அதாவது பயத்தையும் குழப்பத்தையும் நீக்கக்கூடிய தேவி இவள். சத்ருக்களால் ஏற்படும் துக்கத்தில் இருந்தும், துயரத்தில் இருந்தும், துர்தேவதைகளால் நமக்கு விளைகிற தீமைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நம்மைக் காத்து, ஒரு குறைவுமின்றி வாழச் செய்யும் அன்னை.

வாழ்வில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்காதவர்கள் எவருமில்லை. பரமபதம் போல் மளமளவென வெற்றிப் படிகளில் ஏறுவதும், பாம்புக் கொத்துப்பட்டுச் சடசட வெனக் கீழிறங்கி வருவதுமான இந்த வாழ்க்கையில் நல்லது கெட்டதுகளையும், வெற்றி தோல்விகளையும் மாறி மாறி வரும் சூழலில் அதை அப்படியே ஏற்று அனுபவிப்பதுதானே மனித வாழ்க்கை!

முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்க்கையில் அடையாத துயரங்களும் இல்லை; தோல்விகளும் இல்லை. ஆனால், அவற்றில் இருந்தெல்லாம் மீண்டு வந்திருக்கிறார்; தன் மீதான மொத்த எதிர்ப்புகளையும் கடந்து வெற்றி அடைந்திருக்கிறார் என்றால், அதற்கு அவர் வழிபடுகிற ஸ்ரீகாளிகாம்பாளும் அவளின் பேரருளும் முக்கியக் காரணம்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 3

திடீரென்று போயஸ் கார்டனில் இருந்து போன் வரும். இன்ன தேதியில், இன்ன நாளில், இன்ன திதி ஹோரையில் ஸ்ரீகாளிகாம்பாளுக்கு ஹோமம் செய்து அபிஷேகம் செய்யவேண்டும் என்று தகவல் சொல்லப்படும். அதன்படி அந்த நாளில் ஸ்ரீகாளிகாம்பாளுக்கு ஹோமங்கள் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, குங்குமம், எலுமிச்சை மாலை, காளிகாம்பாள் கயிறு, ஸ்ரீகமடேஸ்வரர் விபூதி எனப் பிரசாதங்கள் அனைத்தும் போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்படும்.

''என் அப்பாவை எல்லா அரசியல் தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அப்பாவைப் பார்த்து, உடனே கையசைத்து, தனக்கே உண்டான குழந்தைச் சிரிப்புடன் அருகில் அழைத்துப் பேசுவார் எம்.ஜி.ஆர். 'நல்லா இருக்கீங்களா? உங்களுக்கென்ன... எப்பவும் ஸ்ரீகாளிகாம்பாள் பக்கத்துலயே இருக்கீங்க; நல்லாத்தான் இருப்பீங்க. நம்ம தமிழகத்து மக்கள் எல்லாரும் நல்லாருக்கணும்னு அம்பாள்கிட்ட வேண்டிக்குங்க. நாடு சுபிட்சமாகட்டும்’னு பிரார்த்தனை பண்ணச் சொல்லுவாராம்.

அதே போல, நமது இப்போதைய முதல்வரும் முக்கியமான தினங்கள், விசேஷமான பண்டிகைகள்னா அப்பாவை வரச் சொல்லி அழைப்பு அனுப்புவாங்க. அவரும் பிரசாதத்தோட போய் சி.எம்-மைப் பார்க்கறதை வழக்கமா வைச்சிருந்தார். ஆட்சியில இருக்கறப்பவும் சரி, அதுக்கு முன்னேயும் சரி... பூஜை புனஸ்கார வழிபாட்டு விஷயங்கள்ல, எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்காங்க முதல்வர் அம்மா. அதிலேயும், ஸ்ரீகாளிகாம்பாள் மேல அவங்களுக்கு அப்படியரு பக்தி!'' என்கிறார் காளிதாஸ் சிவாச்சார்யர்.

ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதிக்கு ஒருமுறை வந்து தரிசித்துவிட்டால் போதும்; நம்மை அடிக்கொருதரம் அவளை நினைக்கும்படியாக வசீகரித்துவிடுவாள் அன்னை. அத்தனை அழகு; அவ்வளவு கருணை!

'சின்ன வயசுல கோயிலுக்கு எதிர்ல, இதோ இங்கேதான் எங்க வீடு இருந்துச்சு. வழிபாடு, பாட்டு, படிப்பு, விளையாட்டு, ஆட்டம் பாட்டம்னு எல்லாமே கோயில்ல தான் எங்களுக்கு. இன்னிக்குத் தினமுமே தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டமா இருக்கு. ஆனா அப்பெல்லாம் செவ்வாய், வெள்ளிக்

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 3

கிழமைகள்ல மட்டும்தான் கூட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுக்கப்புறம் எனக்குக் கல்யாணமாகி, வேற ஏரியாவுக்குக் குடித்தனம் போய், குழந்தை பிறந்து... தடதடன்னு வாழ்க்கை ஓடியே போச்சு! ரொம்ப வருஷம் கழிச்சு, இப்பத்தான் மறுபடி இந்தக் கோயிலுக்கு வரேன். 'அம்பாள் சந்நிதிக்கு எதிர்ல உக்காந்து அவளைத் தரிசனம் பண்றோமே... இதே இடத்துலதானே சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் மாமா நின்னுண்டு ஸ்பஷ்டமா, சத்தமா, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் சொன்னார்’னு பழசையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறேன். ஸ்லோகத்தின் மேலயும், ஸ்தோத்திரங்கள் மேலயும் எனக்குப் பெரிய ஈர்ப்பு வந்ததுக்கு அந்த மாமாவும் காளிகாம்பாளும்தான் காரணம்!'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் தீவிர பக்தையான மாதங்கி.

''சிவாச்சார்யர் சகஸ்ரநாமம் சொன்னார்னா, அது கோயில் வளாகத்துக்கு அப்பாலும் கேட்கும். கண்ணை மூடிண்டு கேட்டோம்னா, நம்மை அறியாமலே உருகிப் போய், அழவே ஆரம்பிச்சிடுவோம். அத்தனை ஆத்மார்த்தமா இருக்கும் அவர் சொல்ற பாங்கு! 'நாம என்ன சாதாரணம்; அவரோட குரலுக்கு அந்தக் காளிகாம்பாளே சந்நிதியை விட்டு வந்து, பக்கத்துல நின்னுடுவா’னு எங்க அப்பா உட்பட எல்லாரும் சொல்லுவாங்க.

''சகஸ்ரநாமம் சொல்லிட்டிருக்கும்போதே, சட்டுனு ஒரு பரவசத்துக்கு வந்துடுவார் சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் மாமா. 'என்ன தாயே, சந்தோஷமாயிட்டியா? உனக்கான இந்த பூஜை உனக்குள்ளே போய் ஒட்டிண்டுடுத்தா? இங்கே உன் சந்நிதிக்கு வந்து நிக்கிறவா, நிக்காதவானு எல்லாரையும் காப்பாத்திக் கரை சேர்த்துவிடு, தாயே! போ... போய் உன் இடத்துல உக்காந்துக்கோ. உன் பீடத்துல உக்காந்துண்டு, உன் தேசத்தை அரசாட்சி பண்ணு’னு சொல்லுவார். அப்போ கரகரன்னு அவர் கண்லேருந்து ஜலம் வழியும். முகம் முழுக்கப் பரவசம் ததும்பும். அப்படி அவர் நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமா சகஸ்ரநாமம் சொல்லும்போது, அந்த க்ஷணமே நம்மோட எல்லாத் துக்கங்களும் பறந்தோடிப் போயிடும். அவ தாய்க்கெல்லாம் தாய்; குழந்தைக்கெல்லாம் குழந்தை!'' என்று உற்சாகத்துடனும் பரவசத்துடனும் சொல்கிறார் மாதங்கி.

உள்ளே... பீடத்தில் அமர்ந்தபடி புன்ன கைத்துக்கொண்டிருக்கிறாள், கருணையே உருவான ஸ்ரீகாளிகாம்பாள்!

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா