மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 4

தாயே... சக்தி கொடு வி.ராம்ஜி

##~##

க்கமும் துக்கமும் இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஏக்கம்; துக்கம்! 'நல்லாத்தான் போயிக்கிட்டிருந்தது வாழ்க்கை. யார் கண் பட்டுச்சோ என்னவோ... சின்னச் சின்னதா சறுக்கல் வந்துருச்சு!’ என்று ஆற்றாமையுடன் புலம்பாதவர்களே இல்லை என்று சொல்லலாம். 'மலை உச்சியிலயும் இல்லாம, அதல பாதாளத்துலயும் இல்லாம நடுவாந்திரமா இருந்து வாழ்க்கையை நகர்த்திட்டாலே போதும்’ என்பதுதான் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு.

மனிதர்களாகிய நமக்குத்தான் நடுத்தட்டு, கீழ்த்தட்டு, மேல்தட்டு எல்லாம்! கருணையே உருவான ஸ்ரீகாளிகாம்பாளுக்கு இந்தப் பாகுபாடுகளெல்லாம் இல்லை. தன் சந்நிதிக்கு முன்னே நிற்பவர்கள் அனைவருமே அவளுக்குப் பிள்ளைகள்!

மாதங்கி எனும் வாசகி, சிறு வயது முதலே ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்கு அருகில் வளர்ந்தவர்; வாழ்ந்தவர். பின்னர் திருமணம், குழந்தை என்று வேறு பகுதியில் குடியேறி, நீண்ட காலத்துக்குப் பிறகு ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதிக்கு வந்திருந்தார்.  

மிகுந்த கடவுள் பக்தை. 'நேற்று டாக்டரைப் பார்க்கப் போயிருந்தேன்’ என்பார். உடம்புக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரை அவர் சொல்ல வில்லை. திருவான்மியூர் மருந்தீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு வந்ததையே அப்படிக் குறிப்பிடுவார்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 4

'இன்னிக்குக் கறுப்பனுக்கு எம்மேல ஏகத்துக்குக் கோபம் போல! உர்ருன்னு முறைச்சுப் பார்த்துக்கிட்டே இருந்தான். 'உன் முறுக்கு மீசை யெல்லாம் பார்த்துட்டு பயப்படற ஆள் நான் இல்லை!’ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டு வந்தேன்’ என்பார். கறுப்பன் வேறு யாருமல்ல; திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி.

''கடவுளை கடவுளா, அந்நியமா பாக்கற புத்தி இதுவரை வந்ததே இல்லை எனக்கு. ஏதோ என் அப்பாவா, அம்மாவா, நெருங்கின தோழமையாத்தான் கடவுளைப் பார்க்கறேன். 'நான் உனக்கு இது இதெல்லாம் பண்றேன். நீ எனக்கு இது இதெல்லாம் கொடு’ன்னு வியாபாரம் பேசறதோ, வேண்டிக்கறதோ இதுவரைக்கும் செஞ்சதே இல்லை. ஆனா, முறையிடுவேன். 'என்ன பண்ணிட்டிருக்கே நீ? ஏன் எனக்கு இப்படிச் செஞ்சே?’ன்னு முறையிடுவேன். 'நான் எதிர்பார்க்கவே இல்லைப்பா! இது என் வாழ்க்கையில ரொம்பவே சந்தோஷமான விஷயம். ரொம்ப தேங்க்ஸ்!’னு சொல்றதுக்காகக் கோயிலுக்குப் போவேன்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 4

இதோ... இப்பவும் என் இனிய தோழி ஸ்ரீகாளிகாம்பாள்கிட்ட முறையிடுறதுக் காகத்தான் வந்திருக்கேன். அது அவளுக்கு நல்லாவே தெரியும். நான் என்ன சொல்லித் திட்டப் போறேன்னும் தெரியும். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமதான் முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கா அவ!'' என்று ஸ்ரீகாளிகாம்பாளை ஸ்நேகிதியாக, நட்புடன் பார்க்கும் மாதங்கியின் பக்தி அளப்பரியது.

அவரின் கணவர் கடந்த மூன்று மாதங்களாக அப்போலோ மருத்துவமனையில் கோமா நிலையில் பிரக்ஞை இன்றிப் படுத்திருக்கிறார். ''உயிருக்குப் பயப்படும்படியாக எதுவும் இல்லை.

கோமா நிலையில் இருந்து மீண்டு விடுவார்'' என்று மருத்துவர்கள் இப்போது தைரியம் சொல்லியிருக்கிறார்கள்.

''இந்த மூணு நாலு மாசமா ஆஸ்பத்திரி, வீடு, கோயில்னு சுத்திச் சுத்தி வந்துட்டிருக்கேன். கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்க்கு மேல செலவாயிருச்சு. இதுவரை சம்பாதிச்ச காசெல்லாம் போய், நடுரோட்டுல நிக்கற நிலைமைதான். ஆனாலும், எனக்கு நம்பிக்கை இருக்கு. என் கணவரை தெய்வம் கைவிடாது. அவர் நிச்சயம் எழுந்துப்பார். ரெண்டே வருஷத்துல இழந்ததையெல்லாம் சம்பாதிச் சிடுவார். ஹானஸ்ட்டும் கடவுள் துணையும் அவருக்கு இருக்கு. அதான் அவரோட பலமே!'' என்று சொல்லும்போதே, குரல் உடைந்து அழத் துவங்கிவிட்டார் மாதங்கி.

''சின்னக் குழந்தையா இருக்கும்போதிருந்தே என்னைப் பார்த்துட்டிருக்கா ஸ்ரீகாளிகாம்பா. நான் யாரு, எப்படிப்பட்டவ, என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துண்டிருக்கறவனு என்னைப் பத்தி அவளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். 'அம்மாடி..! என் புருஷன் சுயநினைவே இல்லாம ஆஸ்பத்திரில படுத்துண்டிருக்கார். இருந்த காசெல்லாம் கரைஞ்சிடுச்சு. வயசுக்கு வந்த பொண்ணு பிளஸ் டூ எக்ஸாம் எழுதிட்டு, அடுத்த கட்ட வாழ்க்கைக் கும் வளர்ச்சிக்குமா தயாராகி நிக்கிறா. எங்களை என்ன செய்ய லாம்னு நினைச்சுட்டிருக்கே! எனக்கு எது கிடைச்சாலும், அது நீ கொடுத்ததுதான். இந்த சோதனை யும் வலியும் இன்னும் எத்தனை நாளைக்கு தர்றதா இருக்கே?

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 4

நான் உன் குழந்தை இல்லையா? பிறந்த குழந்தையா என்னைக் கையில ஏந்தி, என் அம்மா உன் சந்நிதிக்கு எடுத்துட்டு வந்த காலத்துலேருந்து பார்த்துக்கிட்டிருக்கேதானே! அம்மாடி... உன்னைப் பார்க்காம, உனக்கு ஒரு நன்றி சொல்லாம இத்தினி வருஷம் இருந்தது தப்புதான். இதோ... உனக்குப் பிடிச்ச அரளியை சரமா எடுத்துண்டு வந்திருக்கேன். உன் முகம் போலவே பிரகாசமா இருக்கிற தாமரையை வாங்கிண்டு வந்திருக் கேன். இது கொடுத்தாதான் எனக்கு நல்லது பண்ணுவேனு நினைச்சு நான் இதை வாங்கிண்டு வரலை.

என் வாழ்க்கையையும் இதுபோல மலரச் செய்யம்மான்னு சொல்லத்தான் வாங்கிட்டு வந்தேன். என் கணவரை கோமாவில் இருந்து வெளியே கொண்டு வா! இந்த உலகத்தை மறுபடியும் அவர் பார்க்கணும்!’னு கதறி கோரிக்கை வைச்சிட்டேன்'' என்று கண்கள் பனிக்கச் சொல்கிறார் மாதங்கி.

மாதங்கியைப் போலான பக்தர்கள் இங்கே ஏராளம். அதிலும் ஸ்ரீகாளிகாம்பாளை இஷ்ட தெய்வ மாக வரித்துக்கொண்டு, அவளிடம் பேசிப் பேசியே, தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள் நிறையப் பேர். ''ஸ்ரீகாளிகாம் பாளோட தீவிர பக்தைகள்ல நானும் ஒருத்தி. ஸ்ரீகாளிகாம்பாள் கோயில்ங் கறது கிட்டத்தட்ட எனக்குப் பிறந்த வீடு மாதிரி. ஏன்னா, எங்க அப்பா கையைப் பிடிச்சிண்டே இங்கே ஒவ்வொரு சந்நிதியா நடந்து போய் உள்வாங்கியிருக்கேன். ஸ்ரீகமடேஸ்வரரும் ஸ்ரீகாளிகாம்பாளும் எனக்கு அப்பா- அம்மா மாதிரி!'' என்கிறார் விசாலாட்சி. சாம்பமூர்த்தி சிவாச்சார்யரின் மகள்.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 4

''ஒரு விளக்கைக் கொண்டு பல நூறு விளக்கு களை ஏத்தலாம்னு சொல்லுவாங்க. எங்க வீடே எரிஞ்சு பஸ்பமாகிப் போன சூழல்ல, எங்களையும் எங்க வீட்டு உடைமைகளையும் காப்பாத்தினது ஸ்ரீகாளிகாம்பாள் படத்துக்கு முன்னால நாங்க ஏத்தி வைச்ச விளக்குதான்! அன்னிக்கி என்னதான் நடந்துச்சு, எப்படி இந்த விபத்து ஏற்பட்டுச்சுன்னே தெரியலை.

சாயந்திர வேளைல குளிச்சிட்டு, ஸ்வாமி படத்துக்குப் பூ போட்டு, விளக்கேத்தலாம்னு இருந்த நேரம்... எங்கேருந்தோ எப்படியோ கிளம்பிய ஆக்ரோஷமான நெருப்பு தடதடன்னு பல இடங்களுக்கும் பரவி, திகுதிகுன்னு எரியுது. எனக்கு ஒண்ணுமே புரியலை. என்ன செய்றதுன்னும் தெரியலை. கையில தீப்பெட்டியும் கையுமா விளக்கேத்த பூஜைரூம்ல நின்னுட்டிருக்கேன். அப்படியே ஒரு நிமிஷம் ஸ்ரீகாளிகாம்பாள் படத்தை உத்துப் பாத்தேன். 'நீயே துணை. நீதான் பாத்துக்கணும்’னு  சொல்லிட்டு, பாரத்தை அவ மேல போட்டுட்டு, விளக்கேத்தினேன். அடுத்த ரெண்டாவது நிமிஷம்... நெருப்பு மொத்தமும் அணைஞ்சு போச்சு. குடம் குடமா தண்ணி ஊத்தினாக்கூட அணையாத நெருப்பு, சட்டுன்னு எப்படி அணைஞ்சுதுன்னு எனக்கு ஆச்சரியம்! கை காலெல்லாம் நடுநடுங்க, உடம்பு முழுக்க வியர்வை பெருக்கெடுத்து ஓட... பூஜைரூம்ல ஏத்தின விளக்கையே பார்த்தேன். அந்தச் சின்ன திரியிலேருந்து வந்த ஜோதியில ஆயிரம் கோடிப் பிரகாசமான ஸ்ரீகாளிகாம்பாளோட திருமுகம்தான் தெரிஞ்சுது எனக்கு!'' என்று சிலிர்ப்புடன் விவரித்தார் விசாலாட்சி.

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா