Published:Updated:

குரோம்பேட்டை முகாமில் குதூகலம்

Vikatan Correspondent
##~##

சென்னை, குரோம்பேட்டையில், சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து வழங்கும் மனவளக் கலை யோகா பயிற்சி முகாம், ஏ.கே.பி. திருமண மண்டபத்தில், கடந்த 5.5.13 அன்று நடைபெற்றது. சக்தி விகடன் நடத்தும் இரண்டாவது பயிற்சி முகாம் இது.

இந்த முகாமில், சக்தி விகடன் வாசகர்கள் பலர் குடும்ப சகிதமாக வந்து கலந்துகொண்டது சிறப்பு!

''என் பெயர் அன்னபூரணி. மயிலாடுதுறையில் இருக்கேன். கடந்த பத்து வருஷமா எங்க வீட்டுல சக்தி விகடன் இரண்டறக் கலந்துவிட்டதுன்னுதான் சொல்லணும். 'வாழ்க வளமுடன்’ தொடர் வந்தப்பவே படிச்சு, அந்தப் பயிற்சியை செய்து பார்த்திருக்கேன். இப்ப இந்த முகாம்ல நான், என் கணவர், மகள், மருமகள், பேத்தின்னு எல்லாருமே கலந்துக்கிட்டோம். மனசுக்கும் உடம்புக்கும் புதுத் தெம்பைக் கொடுக்கற இந்தப் பயிற்சியை இனி தொடர்ந்து செய்யணும்னு முடிவு பண்ணியிருக்கேன்'' என்று சொன்னபோது, இதர வாசகர்களிடம் இருந்து ஏகோபித்த கரவொலி.

குரோம்பேட்டை முகாமில் குதூகலம்

''டெய்லரா இருக்கேன். அதிக நேரம் மிஷின்ல வேலைங்கறதால, முதுகும் காலும் வலி பின்னியெடுக்கும். எனக்கும் எங்க குடும்பத்துக்குமான மிகப் பெரிய வழிகாட்டுதல், சக்தி விகடன்தான்! பத்தாவது பரீட்சை எழுதியிருக்கற என் பொண்ணு, அதிகாலைல எழுந்து படிச்சதுக்கும், அரைப் பரீட்சைல அதிக மார்க் எடுத்ததுக்கும், 'அம்மா, எப்படியும் நானூறு மார்க் வாங்கிடுவேன், கவலையே படாதே!’ன்னு எனக்குத் தைரியம் சொன்னதுக்கும் மனவளக்கலைப் பயிற்சிதான் காரணம்!'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார், புழல் பகுதியிலிருந்து வந்திருந்த வாசகி.

முகாம் நிறைவில், மனவளக்கலையின் முழுப் பயிற்சியையும் இலவசமாக அளிப்பதாக அறிவித்து, ஆர்வமும் நேரமும் உள்ள வாசகர்களின் பெயர்களைத் துண்டுச் சீட்டில் எழுதி, குலுக்கிப் போட்டோம். மயிலாடுதுறை அன்னபூரணி, மந்தைவெளி காமாட்சி, மடிப்பாக்கம் ஸ்ரீநிவாஸ், குரோம்பேட்டை செந்தமிழ்ச்செல்வி, நங்கநல்லூர் ராகவன், ஆதம்பாக்கம் நாகராஜன், புளியந்தோப்பு கமலக்கண்ணன், சி.ஐ.டி. நகர் பிரதீப் ஆகிய எட்டு வாசகர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

''நல்லதொரு பயிற்சியை எங்களுக்கு இலவசமாகவே வழங்கும் சக்தி விகடனுக்கும் உலக சமுதாய சேவா சங்கத்துக்கும் நன்றி... நன்றி!'' என தழுதழுத்த குரலில் பூரண மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர் அந்த எட்டு வாசகர்களும். மற்றவர்கள் அதை ஆமோதிப்பது போல் கரவொலி எழுப்பினர்.

- வி.ராம்ஜி

படங்கள்: ரா.மூகாம்பிகை