Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

Published:Updated:
##~##

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம்... வாருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட மகரிஷி பற்றியும், அவர் இறை மூர்த்தம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலங்கள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். விவரம் தெரிந்த வாசகர்கள் உதவ முடியுமா?

- ஏ.கே.நஞ்சுண்டேஸ்வரன், திருச்செங்கோடு

உதவலாம்... வாருங்கள்!

எங்கள் ஊரில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கோயில் வளாகத்தில் தெய்வீக மூலிகைகள், பூச்செடிகள் மற்றும் ருத்திராட்சம், நாகலிங்கம், திருவோடு, வில்வம் உள்ளிட்ட தெய்வீக மரங்களை வளர்க்க ஆசைப்படுகிறோம். இந்த மரங்கள் மற்றும் செடிகள் எங்கே விற்பனைக்குக் கிடைக்கும்? அதேபோல், மேற்படி மரங்கள், செடிகளை அன்பர்கள் வாங்கிவந்து கோயிலில் நடவு செய்தாலும் மகிழ்வோம். இந்த தெய்வீகத் திருப்பணியில் நீங்களும் பங்குகொள்வீர்களா, வாசகர்களே?

- எம்.பிச்சைபிள்ளை, ஆனந்தகுடி

உதவலாம்... வாருங்கள்!

மதுரை மீனாட்சி அம்மனின் சரிதத்தை முழுமையாகப் படிக்க ஆசைப்படுகிறேன். அதை எந்தப் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்? புத்தகத்தை எங்கே வாங்கலாம்?

- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்

உதவலாம்... வாருங்கள்!
உதவலாம்... வாருங்கள்!

நான் திருவள்ளூரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க ஆசைப்படுகிறேன். சேலத்தில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வருவது எனக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். வரிசைப்படி எந்தெந்தக் கோயிலை முதலிலிருந்து தரிசனம் செய்யலாம்? அனுபவமுள்ள வாசகர்கள் தகவல் தந்து உதவுங்களேன்..!

- பி.பழனியப்பன், மேட்டூர் அணை

உதவலாம்... வாருங்கள்!

அனுமன் வாலின் மகிமையை எடுத்துரைக்கும் 'லாங்குலாஸ்திர ஸ்தோத்திரம்’ படிக்க ஆசைப்படுகிறேன். அது எங்கே கிடைக்கும்?

- காமாட்சி சத்தியநாராயணன், சென்னை-61

உதவலாம்... வாருங்கள்!

'உத்தியோகம் நிமித்தமாக தொடர்பு விட்டுப்போன எங்கள் பூர்வீக கிராமமான கிளாம்பாக்கம் எங்கே அமைந்துள்ளது? மேலும், எங்களின் குலதெய்வமான ஸ்ரீபெரியாண்டவரின் கோயில் எங்கே இருக்கிறது?' என்று, 14.5.13 இதழில் சென்னை வாசகி என்.கிரிஜா கேட்டிருந்தார்.

'சென்னையில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலை வில், திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் கிளாம்பாக்கம் அமைந்துள்ளது...' என்று கூறியுள்ள பெங்களூரு வாசகி வசந்தா கோவிந்தன், 'செங்கல்பட்டு அருகில், திருக்கழுக் குன்றத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள திருநிலை என்னும் ஊரில் பெரியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. திருநிலை செல்ல, திருக்கழுக் குன்றத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீவாராஹி அம்மனை வழிபட ஆசைப் படுகிறேன். இந்த வழிபாட்டை வீட்டில் செய்வது எப்படி?' என்று, 30.4.13 இதழில் சென்னை வாசகர் ரிஷிகேஷ் கேட்டிருந்தார்.

'ஸ்ரீவாராஹி அம்மன் ஆதிபராசக்தியின் படைத் தலைவி ஆவாள். மேலும், பூமிக்கு சொந்தக்காரி. ஸ்ரீவாராஹி அம்மனைத் தொடர்ந்து வழிபட்டு வருவோர் பில்லி, சூனிய பிரச்னைகள் மற்றும் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். வீட்டிலேயே இவளின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். ஆனால், வாராஹி அம்மனை வழிபட்டு ஸித்தியை அடைய வேண்டும் என்றால், ஒரு குரு அவசியம் தேவை. குருவின் உதவியாலேயே இந்த அம்மனின் திருவுருவம் மற்றும் யந்திரத்தை வைத்து வழிபட வேண்டும். மற்றபடி, சாதாரண முறையில் வாராஹி அம்மன் படத்தை வைத்து வழிபடலாம். ஸ்ரீவாராஹி அம்மனை உபாசனை செய்ய வேண்டும் என்றால், முன்ஜென்ம விதி இருக்க வேண்டும்'' என்று, குத்தாலம் வாசகர் எம்.மதனகோபால் தெரிவித்துள்ளார்.

'மகாவிஷ்ணுவின் ஸ்ரீவராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவளே ஸ்ரீவாராஹி. வராக (பன்றி) முகமும், நான்கு கரங்களும் உடையவள் இவள். இவளை வழிபட்டால், எதிரிகளை வெற்றி கொள்ளலாம். ஸ்ரீவாராஹி அம்மனை தினமும் அஷ்டோத்திரம் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மேலும், அஷ்டோத்திரத்தில் உள்ள அந்த அம்மனின் நாமாக்களைச் சொல்லியும் வழிபடலாம். தினமும் சர்க்கரை கலந்த காய்ச்சிய பாலை நைவேத்தியம் செய்யலாம். நவராத்திரி,

பஞ்சமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தேங்காய்ப் பூரணம், சர்க்கரைப் பொங்கல், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்யலாம். கஷ்டம், பிரச்னைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்னைகள் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.

ஸ்ரீவாராஹி அம்மனின் விக்கிரகத்தை வைத்து வழிபட நினைப்பவர்கள், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் ஸ்வாமி விக்கிரகங்கள் செய்யும் ஸ்தபதிகளிடம் தங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்' என்று கூறியுள்ள ஆந்திர மாநிலம் செகந்திராபாத் வாசகி  கிரிஜா பாலகிருஷ்ணன், ஸ்ரீவாராஹி அம்மனின் அஷ்டோத்திரத்தை அனுப்பியுள்ளார். இது சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'சப்த சகோதரிகள் என்று சொல்லப்படும் ஏழு பேர் யார், யார்? அவர்களது திருத்தலங்கள் எங்கே அமைந்துள்ளன?' என்று, 16.4.13 இதழில் பழங்காமூர் வாசகர் மோ.கணேஷ் கேட்டிருந்தார்.

'பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்த கன்னியர். மேலும், யோகேஸ்வரி என்ற தெய்வத்தையும் சேர்த்து அஷ்டமாதர் என்றும் சொல்வதுண்டு.

சப்த மாதர்களான ஏழு கன்னியரின் உருவங்களை ஒரே கல்லில் வடித்திருப்பார்கள். பழைமை வாய்ந்த சிவாலயங்களில் இது ஒரு பரிவார சந்நிதி. பெரும்பாலும் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் வடக்கு நோக்கியவாறு சப்த மாதர்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். முற்காலத்தில் இவர்களைப் புடைப்புச் சிற்பங்களாக வடித்துப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். நாளடைவில் தனித்தனி திருமேனி களாக வடிக்கத் தொடங்கினார்கள். இவர்களுக்குக் காவலாக வீரபத்திரர் மற்றும் விநாயகரின் திருமேனி களைப் பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கத்தில் உள்ள செல்லி அம்மன் கோயில், சென்னை வேளச்சேரியில் உள்ள செல்லியம்மன் கோயில், புதுச்சேரிக்கு அருகே உள்ள வக்ரகாளியம்மன் கோயில் ஆகியவற்றில் சப்த கன்னியர் எழுந்தருளியுள்ளனர்...' என்று தெரிவித் துள்ள ஓடக்கல்பாளையம் வாசகர் சி.கதிர்வேல், ஏழு பெண் தேவதைகள் என்ற தலைப்பிலான கட்டுரையின் நகலையும் அனுப்பியுள்ளார். அது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism