தாயே... சக்தி கொடு!வி.ராம்ஜி
##~## |
'கர்வத்தில் தலை கால் தெரியாமல் ஆடுகிறான்’ என்று சொல்வோம். இந்த உலகத்தில் நம்மை வீழ்த்துவதற்கு எதிரிகளோ துரோகிகளோ தேவையில்லை; நம்மைப் பிடிக்காதவர்களோ நம்மை வெறுப்பவர்களோதான் நம்மை அழிக்கவேண்டும் என்று அவசியமில்லை. நாம் கர்வமாக தலைக்கனத்துடன் இருந்தால், நம்மை அழிக்க வேறு எவரும் தேவையில்லை என்பதே உண்மை. நம் கர்வமே நமக்கு மிகப் பெரிய எதிரி.
''தான் எனும் கர்வம் இல்லாதது எதுன்னு பார்த்தா, அது ஆமைதான். ஆமையானது தன் தலையைக்கூட ஓட்டுக்குள்ளே வைத்துக்கொள்கிற குணம் கொண்டது. தன்னை ஒடுக்கிக்கிறதுக்கு, உள்நோக்கிப் பாக்கறதுக்கு ஒரு புத்தி வேணும். இந்தப் புத்தி மனுஷங்களுக்கு ரொம்பவே அவசியம். 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ன்னு ஆன பிறகு, அலட்டலுக்கும் வீறாப்புக்கும் இங்கே வேலையே இல்லை. கர்வப்பட்டு, அகந்தையோட இருக்கிறதில் அர்த்தமும் இல்லை. அது ஒரு கட்டத்தில் பொளேர்னு நம்மையே அடிச்சிடும்.
வாசல் கொஞ்சம் சின்னதா இருந்தா, வர்றவங்களை 'கொஞ்சம் குனிஞ்சு, பார்த்து வாங்க’ன்னு சொல்றோம் இல்லையா! இந்தப் பணிவு என்னிக்குமே நமக்கு இருந்துட்டா, கடவுளை ரொம்பச் சுலபமா அடையலாம். அதுக்கு ஆமை புத்தி வேணும் நமக்கு. அதோட செயலை நாமளும் பின்பற்றணும்.
'கமடம்’னா ஆமை. இங்கே, காளிகாம்பாள் கோயிலின் ஸ்வாமி பேர் ஸ்ரீகமடேஸ்வரர். இவர் சந்நிதிக்கு வந்து, மனசாரப் பிரார்த்தனை பண்ணிட்டாப் போதும்... நம்மளோட கர்வம், அலட்டல் மாதிரியான கெட்டதுகளையெல்லாம் போக்கி, அருள்பாலிப்பார் ஸ்ரீகமடேஸ்வரர்!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் சண்முக சிவாச்சார்யர்.

நமக்குள் இருக்கிற காமம், குரோதம், கர்வம் என்கிற கசடுகளையல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஸ்ரீகமடேஸ்வரர் முன்னே நின்று, ஒரு நிமிடமேனும் மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் வாழ்க்கை யையே மலரச் செய்துவிடுவார் சிவனார்.
''உண்மைதான். சின்னக் குழந்தையா இருந்த போதிலிருந்தே கடவுள் மேல பக்தி ஜாஸ்தி எனக்கு! ஒரு பண்டிகை விடாம, ஒரு விரத நாள் விடாம எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பூஜை பண்ற பர்ஃபெக்ஷனிஸ்ட் நான். என் ஆரம்ப காலத்துலேருந்து, இதோ இன்னிய வரைக்கும் எனக்கு வழிகாட்டியா இருந்து வாழ வைச்சுட்டிருக்கறது காளிகாம்பாள்தான்!'' என்கிறார் ரமா எனும் வாசகி.
''கண்ணுக்கு நிறைவா கணவர், பிறந்த வீட்டைப் போலவே தாங்கிக் கொண்டாடுற புகுந்தவீடுன்னு இருந்தாலும் குழந்தை வரம் இல்லேங்கறதுதான் எனக்கு மிகப் பெரிய குறையாக இருந்துச்சு. பல வருஷம் கழிச்சு, கரு உண்டாகியிருக்குன்னு தெரிஞ்சதும் வீடே சந்தோஷமாயிருச்சு. என்னை உள்ளங்கையில வைச்சுத் தாங்குச்சு உறவுகள்.

அந்தக் கட்டத்துல டாக்டர்கள் திடீர்னு ஏதேதோ காரணங்கள் சொல்லி, 'இந்தச் சிசு கலைஞ்சு போயிடும்போல இருக்கு’ன்னு சொன்னப்ப, வீடு மொத்த மும் தலையில கைவைச்சு, இடிஞ்சு போய் உக்கார்ந்துருச்சு. என்னால தாங்கிக்கவே முடியலை. தொடர்ந்து மூணு நாள் அழுதுக்கிட்டே இருந்தேன். ஏற்கெனவே என் உடம்பு ரொம்ப வீக்கா இருந்துச்சு. இன்னும் துவண்டு போயிட்டேன்.
நாலாம் நாள் காலைல எழுந்து குளிச்சு, நேரா காளிகாம்பாள் சந்நிதிக்குப் போனேன். 'இங்கே விழற என்னோட ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்கும் நீதான் பதில் சொல்லணும். பணம்- காசு, நகை - ஆபரணம், வீடு- வாசல்னு ஆடம்பரமா இருக்கிற வாழ்க்கையையா உங்கிட்ட கேக்கறேன்?! என் வயித்துல ஒரு குழந்தை... என்னோட ரத்தம்... எனக்கே எனக்குன்னு ஒரு வாரிசு - எங்க வீட்டையே சந்தோஷப்படுத்தறதுக்கு ஒரேயரு குழந்தையைக் கொடுன்னுதானே கேக்கறேன்’னு கதறி அழுதேன். பிறகு எழுந்து மௌனமா வந்து விளக்கேத்தி, கொடிமரத்துக்கிட்ட நமஸ்காரம் பண்ணி, 'பொறுப்பை உன்கிட்ட விட்டுட்டேன். இனி, நீ விட்ட வழிப்படியே நடக்கட்டும்மா’ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.
சொன்னா நம்புவீங்களா..? அடுத்த முறை செக்கப்புக்குப் போயிருந்தப்ப, 'கங்கிராட்ஸ் ரமா! குழந்தை ரொம்ப ஹெல்த்தியா வளர்ந்துட்டிருக்கு. நோ ப்ராப்ளம்!’னு டாக்டருங்க சொல்லிக் கை கொடுத்தப்ப, என் வாழ்க்கைக்கே கை கொடுத்து உசத்திவிட்ட காளிகாம்பாள் தாய்தான் என் நினைவுக்கு வந்தா. அதன்படியே, அவளின் அருளால் ஜம்முனு எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தா! இது, காளிகாம்பாளோட குழந்தை'' என்று தன் குழந்தையின் தலையை வருடியபடி சொல்லும்போது, ரமாவின் கண்களில் இருந்து வழிந்தது நீர்.

''முதல்ல டாக்டர்கள் சொன்னப்ப அப்படியே சுக்குநூறாயிட்டேன். ஆனா, நாமளே உடைஞ்சிட்டா ரமாவைத் தேத்த முடியாதுன்னு அத்தனை வேதனையையும் நெஞ்சுக்குள்ளே வைச்சிருந்து, ரமா இல்லாம நான் மட்டும் காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து அழுதுட்டுப் போவேன். அப்புறம் நல்லபடியா பிரசவம் ஆகி குழந்தை பிறந்ததும், 'நன்றிம்மா தாயே!’ன்னு முதல்ல அவ சந்நிதிக்குத்தான் ஓடினேன். குழந்தைக்கு அமிர்தவர்ஷினின்னு பேரு. ஆனாலும், முதன்முதல்ல குழந்தையோட பேரை நெல்லுல எழுதறப்போ, 'காளிகாம் பாள்’னுதான் எழுதினோம். அந்தப் பேரை வைச்சுட்டுதான் அமிர்தான்னு கூப்பிடுறதுக்கு வேற பேர் வைச்சோம். இந்தக் குழந்தை காளிக£ம்பாள் கொடுத்த கருணை'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் ரமாவின் கணவர் வினோத்.
''இவர்களைப் போல நிறையப் பேர் அம்பாள்கிட்ட சரணடைஞ்சிருக்காங்க; சந்தோஷமா இருக்காங்க. ஸ்ரீகமடேஸ்வர ரையும் ஸ்ரீகாளிகாம்பாளையும் கெட்டியாப் பிடிச்சுண்டுட்டாப் போதும்... மிச்ச சொச்ச வாழ்க்கையை ஒரு குறைவும் இல்லாம கழிக்கிறதுக்குப் பக்கத் துணையா இருப்பாங்க. இது சத்தியம்!'' என்கின்றனர் பக்தர்கள்.
நல்ல சக்தி, தீய சக்தி எனக் கலந்து இருக்கும் உலகியல் வாழ்வில் நல்லதைத் தேடிச் சென்று கெட்டியாகப் பிடித்துக் கொள்வதில்தான் வாழ்வின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. தீயதில் இருந்து விலகி நல்லதின் பக்கம் வருவதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அப்படி வந்தவர்கள் பாக்கியவான்கள்!
- வேண்டுவோம்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா