மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6
##~##

சந்நிதி என்பது மிகப் புனிதமான இடம். அங்கே குடிகொண்டிருக்கும் தெய்வம், மிகுந்த சாந்நித்தியம் நிறைந்தது. விக்கிரகமாக இருந்தாலும், அந்தத் தெய்வத்துக்குக் காது கேட்கும்; கண்கள் சதாசர்வகாலமும் பார்த்துக்கொண்டே இருக்கும். வருபவரையும் வருவோரின் எண்ண ஓட்டத்தையும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, பேசினால் பேசுகிற சக்தி அது. ஆம், பேசும் தெய்வம்! ஆனால், நாம்தான் கடவுளிடம் பேசுவதே இல்லை. அப்படியே நாம் பேசினாலும், கடவுள் பேசுகிற பதிலைக் கூர்ந்து கேட்டு உள்வாங்கிக் கொள்வதே இல்லை. 

''எனக்கு எல்லாமே நீதான்னு சொல்லி அம்மா பேர்ல பாரத்தைப் போட்டுட்டு, நம்ம வேலையை மட்டும் நாம பார்த்துட்டிருந்தா போதும். நம்ம வாழ்க்கைல நடக்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அம்பாள் பார்த்துக்குவா! எத்தனை இக்கட்டான சூழ்நிலைகள் வந்து, நாம கைபிசைஞ்சு நின்னாலும், அத்தனை பிரச்னைகள்லேருந்தும் நம்மை விடுவிச்சு காபந்து பண்ணிருவா தேவி.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6

இந்த உலகத்துல எந்த மூலைல இருந்தாலும், எந்தவிதமான குழப்பத்துல நாம தவிச்சு மருகினாலும், 'கவலைப்படாதே... நான் இருக்கேன்; நான் இருக்கேன்’னு ஸ்ரீகாளிகாம்பாளே சொல்வதுபோல் எங்கிருந்தோ குரல் கேக்கும். அவ பேசும் தெய்வம்தான்! என்னைப் போல லட்சக்கணக்கான பெண்களுக்குப் பெத்த அம்மாவைப் போலத்தான் அவள்! அவ சந்நிதிக்கு எப்போ போனாலும், உதட்டோரத்துல குடியிருக்கிற அந்தச் சந்தோஷமான, மெல்லிய புன்னகையையே பார்த்து ரசிச்சுக்கிட்டிருப்பேன்'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் ரமா.

''இன்னிக்கி எனக்குக் குழந்தை வரம் கொடுத்ததும் அவதான். என்னைக் குழந்தையாய் பாவிச்சு, எப்பவும் அரவணைச்சு அருள்பாலிக்கிறதும் காளிகாம்பாள்தான்! குழந்தை பேச்சுல சுட்டியா, படிப்புல கெட்டியா இருக்கறதைப் பார்க்கும் போதெல்லாம் பெத்த வயிறு அப்படியே குளிர்ந்து போயிரும். 'உன்னை எந்தப் பூவைச் சாத்திக் குளிரச் செஞ்சேனோ தெரியலை... என் பெத்த வயித்தைக் குளிரப் பண்ணிட்டேம்மா தாயே!’ன்னு நெகிழ்ந்து கண்கலங்கியிருக்கேன், எத்தனையோ தடவை! அவ சந்நிதியில அழும்போதெல்லாம், 'ஏய்... என்ன இது அழுதுக்கிட்டு? நிறுத்து அழுகையை’ன்னு யாரோ உத்தரவாச் சொல்றது போலவே இருக்கும். சட்டுனு அழுகையை நிறுத்திடுவேன்'' என்று சொல்லி நெகிழ்கிறார் ரமா.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6

''மனைவி ரமாவுக்கும் காளிகாம்பாள் கோயிலுக்கும் அவளோட சின்ன வயசுலேருந்தே தொடர்பு உண்டு. கல்யாணமாகி வந்தப்புறம், அடிக்கடி ஸ்ரீகாளிகாம்பாள் பேரை மனைவி சொல்லிக் கிட்டே இருப்பாங்க. அவங்களோட முதன் முதலா கோயிலுக்குப் போனப்ப, சந்நிதி சந்நிதியா விளக்கிச் சொல்லிட்டே வந்தாங்க. அதைப் பார்க்கும்போது, பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிற புருஷனுக்குத் தன் வீட்டையும் சொந்த ஊரையும் சுத்திக் காண்பிக்கிற மனோ நிலையை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6

ஆமாம்... அவங்க வீட்டுல ஸ்ரீகாளிகாம் பாள் எல்லாருக்குமே கண்கண்ட தெய்வம். எதுனா ஒண்ணுன்னா, அவ சந்நிதிக்குப் போய் நின்னு, கண்ணீரோட வேண்டிக்குவாங்க. இதையெல்லாம் பார்த்துப் பிரமிச்சுப்போனவன், நானும் மெள்ள மெள்ள காளிகாம்பாளின் தீவிர பக்தனாகிட்டேன். 'எங்க குடும்பத்தின் எல்லா நல்லது- கெட்டதுகளையும் நீதாம்மா பார்த்துக்கணும்’னு அவகிட்ட எங்களை ஒப்படைச்சிட்டேன். அதனால, எது நடந்தாலும் நன்மைக்கே, ஸ்ரீகாளிகாம்பாள் பார்த்துக்கு வாள்னு என் வேலையில கண்ணும் கருத்துமா செயல்பட்டுக்கிட்டிருக்கேன்'' என்கிறார் ரமாவின் கணவர் வினோத்.

அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்குப் போயிருக்கிறீர்களா? சிறிய கோயில்தான். ஆனால், அங்கே இருக்கிற ஒவ்வொரு சந்நிதியும் சாந்நித்தியம் நிறைந்தது. நாகாபரணம் சூட்டிய ஸ்ரீகமடேஸ்வரரின் லிங்கத் திருமேனியில் கொஞ்சம் வில்வத் தையும் அரளிமாலையையும் சார்த்தி விட்டு வேண்டிக்கொண்டால் போதும்... மனசின் தூசுகளையும் துன்பங்களையும் போக்கி, நம்மைப் புது மனிதனாக்கி விடுவார், ஸ்ரீகமடேஸ்வரர்.

அதேபோல், சுதையாக கம்பீரத்துடன் நிற்கும் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி கடும் உக்கிரத்துடன் காட்சி தருகிறாள். அந்த உக்கிரமும் கோபமும் தீயவர்களிடம் தீயசக்தியிடமும்தான்! உறவு, அலுவலகம், வாழும் வீடு என எங்கெங்கே நமக்கு எதிரிகள் இருந்தாலும், இவளிடம் வந்து முறையிட்டால் போதும்... எல்லா எதிரிகளையும் எதிர்ப்பையும் தவிடுபொடியாக்கிவிடுவாள், தேவி.

'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6

''எனக்கு வேண்டுதலோ பிரார்த்தனையோ எதுவும் இல்லீங்க. காலைல எந்திரிச்சா காபி சாப்பிடணுங்கற மாதிரி, காலைல எழுந்து குளிச்சு முடிச்சதும் இந்தக் கோயிலுக்கு வந்துடுவேன். ஒருநாள்... கோயில் பிராகாரத்துல இருக்கிற குப்பை, பேப்பர், தேங்காய்நார்னு எல்லாத்தையும் எடுத்துச் சுத்தமாக்குவேன். எல்லாம் முடிச்சிட்டு அம்பாளோட சந்நிதானத்துக்குப் போய் அவளைக் கும்பிட்டுட்டு, வீட்டுக்குப் போயிடுவேன். இப்படி முப்பது வருஷமா தொடர்ந்து வந்துட்டிருக்கேன். அவளைப் பார்க்கணும்; அவ இருக்கிற இந்த வீட்டை, கோயிலைச் சுத்தப்படுத்தணும், அவ்வளவுதான்!'' என்று ஐம்பது வயதைக் கடந்த பெண்மணிகள் பலர் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

'இதோ... எந்தன் தெய்வம்’ தொடருக்காக, காளிகாம்பாள் கோயிலுக்கு நான்கைந்து முறை சென்ற வேளையில், ஒவ்வொரு முறையும் இதே மனோபாவத்திலான நிறைய பெண்களைப் பார்க்கமுடிந்தது.

''ஆமாங்க... நிறையப் பேர் இதுமாதிரி இருக்காங்க. வீண் பேச்சு, வெட்டி அரட்டைன்னு எதுவும் கிடையாது. அவங்க வருவாங்க. ஒரு ஓரமா உட்கார்ந்து, கொண்டு வந்த பூவைச் சரஞ்சரமாக் கட்டுவாங்க. பலிபீடத்துக்குக்கிட்டயும் சூலாயுதத்துக்கிட்டயும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிகிட்டயும் அகல் விளக்கு ஏத்தி வைச்சு, ஸ்ரீகாளிகாம்பாளை வழிபடுவாங்க. தரிசனம் முடிஞ்சதும், வரிசைல நின்னு பிரசாதம் வாங்கி ஓரமா நின்னு சாப்பிட்டுட்டு, பிரசாதம் தர்ற இடத்தையெல்லாம் சுத்தம் பண்ணிட்டு அவங்கபாட்டுக்குப் போயிக்கிட்டே இருப்பாங்க. '' என்கின்றனர் கோயில் ஊழியர்கள்.

உண்மைதான். இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க, ஆண்களி லும் இப்படியான பலரைப் பார்க்க முடிகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். அப்போது, பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் வரிசைக்கிரமமாக வரச் செய்யவும் தன்னார்வத் தொண்டர்களாக, சேவகர்களாக இருந்து பக்தர்களின் தரிசனத்துக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

'தாயே! நீயே துணை’ என்று இருந்துவிட்டால், 'நீயின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதில் உறுதி கொண்டுவிட்டால், 'இதோ... உனக்காக உன்னைத் தேடி நானே வந்துவிட்டேன்’ என்று ஓடோடி வந்து, தெய்வம் நம்மைக் காக்கும் என்பது சத்திய வாக்கு!

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா