Published:Updated:

ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை!

ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை!

பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை!
##~##

'இதோ... எந்தன் தெய்வம்’ தொடரைப் படித்து வருகிறோம். ஸ்ரீகாளிகாம்பாளின் மகத்துவத்தைப் படிக்கப் படிக்க, சிலிர்த்துப் போகிறது மனம். அடேங்கப்பா... அவளின் அருளாடல்களைப் படிக்கும்போது, நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் யாவும் விலகிப்போய்விட்டதாக ஒரு நிம்மதி; ஒரு நிறைவு! வாழ்வில் ஒருமுறையேனும் அவளை எப்படியும் தரிசித்துவிடவேண்டும் என்னும் ஆவலே வந்துவிட்டது!'' என்று தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து மட்டுமல்ல... வெளிநாடுகளில் இருந்தும்கூட, வாசகர்கள் ஆர்வமும் ஆதங்கமுமாக தங்கள் எண்ணங்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.

 ''ஒரு கோயிலால், குருக்கள் உயரலாம். ஆனால், சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் என்னும் குருக்களால் ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் எல்லார் மனத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எங்கள் லண்டனில் உள்ள பல கோயில்களுக்கு சாம்பமூர்த்தி சிவாச்சார்யர்தான் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். விரைவில் இந்தியா வரவேண்டும், சென்னை வந்து ஸ்ரீகாளிகாம்பாளைத் தரிசிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை!'' என்று சொல்லிப் பூரித்த லண்டன் வாழ் தமிழர்களும் உண்டு.

ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை!

எங்கேயோ இருந்தபடி இங்கே உள்ள ஸ்ரீகாளிகாம்பாளை மனதார நினைத்து உண்மையான பக்தியுடன் வேண்டும் சக்தி விகடன் வாசகர்களுக்குப் பிரத்தியேகமாக ஏதேனும் செய்தால் என்ன என்று தோன்றியது. ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி, சக்திவிகடன் வாசகர்களுக்கென்றே ஒரு விசேஷ வழிபாடு நடத்தி, அதன் குங்குமப் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்ற, எங்கள் எண்ணத்தை ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் குருக்கள் சண்முக சிவாச்சார்யரிடம் தெரிவித்தோம்.

ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை!

''காளிகாம்பாளின் கருணையே கருணை! நல்ல முயற்சி. மிகப் பெரிய புண்ணியம். சக்திவிகடன் வாசகர்களின் நலனுக்காக, குடும்ப சுபிட்சத்துக்கான சிறப்பு பூஜையையும் குங்குமப் பிரசாதத்தையும் எங்களின் தந்தையார் பெயரில் இயங்கிவரும் ஸ்ரீசாம்பமூர்த்தி சிவாச்சார்யர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாகவே செய்துவிடலாம்'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை!

அத்துடன் 'தேசத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும்; காடு- கரையெல்லாம் நிறைந்திருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வோம்’ என்றார் சிவாச்சார்யர்.

அதன்படி, கடந்த 4.6.13 செவ்வாய்க்கிழமை அன்று காலையில், சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக

ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை!

மூட்டை மூட்டையாகத் தேங்காய் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. அங்கே வந்தவர் களையெல்லாம், 'நம் விக்னங்கள் எல்லாம் சிதறிப் போகட்டும்; நாட்டில் நல்ல மழை பெய்யட்டும்!’ என்று சொல்லி, ஆளுக்கொரு சிதறுகாய் உடைத்துப் பிரார்த்திக்கும்படி வேண்டினார் சிவாச்சார்யர்.

ஸ்ரீஸித்தி விநாயகரில் துவங்கி, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளிகாம்பாள், ஸ்ரீகமடேஸ்வரர் என எல்லாச் சந்நிதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கும் அம்பாளின் உத்ஸவ மூர்த்தத்துக்கும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. வாசகர்களுக்கு வழங்கப்படும் குங்குமம் விசேஷமாக பூஜிக்கப்பட்டு, மந்திரங்கள் சொல்லி வழிபாடுகளைச் செய்யச் செய்ய... சிலிர்த்துப் போனோம்.

பூஜை செய்து, குங்குமப் பிரசாத செலவை ஏற்றுக்கொண்டதுடன், ஸ்ரீகாளிகாம்பாள் பக்தர் களைக் கொண்டே உறையில் (கவர்) குங்குமத்தை நிரப்பும் பணியையும் ஏற்று, அப்படியே வழங்கி உதவினார்கள் சண்முக சிவாச்சார்யரும் அவரின் சகோதரர் காளிதாஸ் சிவாச்சார்யரும்.  

இனிய வாசகர்களே... இந்த இதழ் சக்தி விகடனுடன் ஸ்ரீகாளிகாம்பாளின் குங்குமப் பிரசாதம், உங்கள் கைகளில்! 'இதோ... எங்கள் தெய்வத்தின் அருட்பிரசாதம்’ என மனதாரப் பிரார்த்தித்தபடி நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். பெண்கள், தங்களின் தாலிச் சரட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மாங்கல்ய பலம் பெருகும்; வீட்டில் சுபிட்சம் நிலவும். எதிர்ப்புகள் விலகி, இனிதே வாழ... அந்தக் காளி காம்பாளின் கருணையும் அருளும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு