Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கலகல கடைசிப் பக்கம்

பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசிப் பக்கம்
##~##

'மரமண்டை... மரமண்டை! எவ்வளவு திட்டினாலும் சூடு சொரணையே கிடையாதா? நிக்கிறான் பாரு மரம் மாதிரி...!'' 

- பள்ளியில் பாட வேளைகளில், ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கும் தருணங்களிலும், வீட்டில் அப்பா ஒன்றைச் சொல்ல நான் ஒன்றைச் செய்து விளைவுகள் விபரீதமாகும் நேரங்களிலும், என்னைக் குறித்து அவர்கள் அர்ச்சிக்கும் சகஸ்ரநாமங்களில் மேலே சொன்ன மரம், மரமண்டை எனும் திருநாமங்களும் அடங்கும்.

ஒருநாள் ரோஷம் வந்து, எப்படியாவது என் மூளையின் அறிவை விருத்தி செய்தே தீர்வது என்ற முடிவுடன்... காலையில் நியூஸ் பேப்பர், அடுத்து டி.வி., கையில் கிடைத்த புத்தகங்கள்... என மாற்றி மாற்றி மனம் தளராத விக்கிரமன்போல் தீவிரமாக இயங்க, வீட்டில் மண்டகப்படி வழக்கம்போல் தொடர்ந்தது.

கலகல கடைசிப் பக்கம்

அது கிடக்கட்டும்; நாம் விஷயத்துக்கு வருவோம். அன்று நான் படித்த புத்தகங்களில் ஒன்றில் எனக்கு ஒவ்வாமையான மரத்தை ஒப்பிட்டு அறிவுறுத்தும் சில பாடல்கள்!

அதிவீரராம பாண்டியன் இயற்றிய 'வெற்றிவேற்கை’யில் வரும் அந்தப் பாடல் வரிகள் இதுதான்...

தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வான்உற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.

'பனைமரத்தின் விதை ஓங்கி உயர்ந்து வளர்ந்தாலும், ஒருவருக்குக்கூட நிழல் தராது. அதைப்போல ஓகோவென வாழும் சில செல்வந்தர்களால் மற்றவர்க்கு எந்தப் பயனும் இருக்காது’ என்பது இதன் பொருள். மற்றொரு பாடல் ஆல மரத்தைச் சொல்கிறது.

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே

அதாவது, ஆலமரத்தின் விதை சிறிய மீனின் முட்டையை விடச் சிறியதுதான் எனினும், அது மரமாகி நிற்கும்போது, நால்வகைப் படைகளுக்கும் நிழல் தருமாம்.

இதைச் சொல்லிவிட்டு அடுத்தடுத்த வரிகளில், 'பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்; சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்’ எனப் போதிக்கிறார் அதிவீரராம பாண்டியன்.

எனது இந்த படிப்பினையை நண்பனிடம் பகிர்ந்துகொண்டபோது, அவனும் மூவகை மரங்கள் குறித்த ஒரு தகவலைச் சொன்னான்.

''ஒன்று பாதிரி மரம் - பூக்கும் காய்க்காது. இது வாய் கிழியப் பேச மட்டுமே செய்யும் மனிதனைப் போன்றது. அடுத்து மாமரம். பூக்கவும் செய்யும்; காய்க்கவும் செய்யும். இது, பேச்சோடு நிற்காமல் சுறுசுறுப்பாகச் செயல்படவும் செய்யும் மனிதனைப் போன்றது.

அடுத்து பலா மரம்- பூக்காது; காய்க்கும். இது வாய்ப் பேச்சின்றி, செயலில் மட்டுமே தன் திறனைக் காட்டுகின்ற மனிதனைப் போன்றது. அதாவது, சத்தமில்லாமல் காரியங்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பவன்!

நீ இந்த மூணு மரங்களில் என்ன மரமாக இருக்க விரும்புகிறாய்?'' என்று கேட்டான் நண்பன்.

'போச்சுடா! மரத்திலிருந்து விடுபடலாம் என்றால் முடியாது போலிருக்கிறதே!’ என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டவனாக, 'வீண் பெருமை பேசுவதைத் தவிர்த்து, செயலில் தன் திறமையைக் காட்டும் பலா மரமாகத் திகழ’ முடிவெடுத்திருப்பதைச் சொன்னேன்.

சரி... இந்த மூவகை மரங்களில்

நீங்கள் எந்த வகை என்று முடிவு செய்துவிட்டீர்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு