Published:Updated:

இதோ.. எந்தன் தெய்வம்! - 7

தாயே... சக்தி கொடு!வி.ராம்ஜி

இதோ.. எந்தன் தெய்வம்! - 7

தாயே... சக்தி கொடு!வி.ராம்ஜி

Published:Updated:
##~##

'சில நல்ல விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கவேண்டுமே என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்போம். ஆனால், அது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காமல் இழுத்துக்கொண்டே போகும். அதேநேரம், 'அடடா... இது எத்தனை சத்தான காரியம்! நமக்கு ஏன் இதைச் செய்யவேண்டும் என்று தோணவே இல்லை? ஆனால், நடந்தது பூரண நிறைவு!’ என்று சில காரியங்கள் தாமாகவே நடந்து, உள்ளே பூரிப்பைத் தரும். இதோ... அப்படியான பூரிப்பில் நெகிழ்ந்து நிற்கிறேன்'' என்று பரவசத்துடன் தெரிவித்தார் சண்முக சிவாச்சார்யர்.

அவரின் தந்தை சாம்பமூர்த்தி சிவாச்சார்யருக்கு அவரது குடும்பமும் ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலும் இரண்டு கண்கள். கோயிலுக்குள்ளேயும் வீட்டிலுமாக ஸ்ரீகாளிகாம்பாளைப் பற்றியே அனவரதமும் சொல்லிச் சிலாகித்தபடியே இருப்பார். அவர் கையில் ஸ்ரீகாளிகாம்பாளின் பிரசாதமான குங்குமம் அடங்கிய ஒரு டப்பா எப்போதும் இருக்கும். எந்த ஊருக்குச் சென்றாலும், எவரைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஸ்ரீகாளிதேவியின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கவேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்தித்தபடியே, அதிலிருந்து குங்குமப் பிரசாதத்தை எடுத்து வழங்குவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவரின் மைந்தர்கள் தந்தையின் பெயரால் ஸ்ரீசாம்பமூர்த்தி சிவாச்சார்யர் சாரிட்டபிள் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி, பல உதவிகள் செய்து வருகிறார்கள்.

இதோ.. எந்தன் தெய்வம்! - 7

''சக்திவிகடன்ல 'இதோ... எந்தன் தெய்வம்’னு ஸ்ரீகாளிகாம்பாள் பத்தி வர்றதைப் படிக்க அப்பா இல்லியேன்னு சின்னதா ஒரு ஏக்கம் இருந்துச்சு. அந்தச் சமயத்துல, 'லட்சக்கணக்கான வாசகர்களுக்குக் குங்குமப் பிரசாதம் தரலாமா?’ன்னு சக்திவிகடன்லேருந்து கேட்டதும், அதுக்கு உடனே சரின்னு நான் ஒப்புக்கிட்டதும் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல, தெய்வ சங்கல்பம்போல இப்ப உணர்றேன்'' என்கிறார் காளிதாஸ் சிவாச்சார்யர்.

''ஆமாம். செவ்வாய்க்கிழமையானா அப்பா மௌன விரதம் இருப்பார். சக்திவிகடன் வாசகர்களுக்காகவும் உலக க்ஷேமத்துக்காகவும் ஸ்ரீகாளிகாம்பாள் காலடியில விசேஷ பூஜை நடந்ததும் ஒரு செவ்வாய்க்கிழமைலதான். அதேபோல, அப்பா கையில வைச்சுண்டு எல்லாருக்கும் தந்த குங்குமப் பிரசாதம், இப்போதும் அப்பாவின் அறக்கட்டளையின் மூலமாவே சக்திவிகடன் வாசகர்களுக்குச் சென்றடைந்ததும் ஒரு செவ்வாய்க்கிழமைதான்!

இதோ.. எந்தன் தெய்வம்! - 7

எல்லாத்துக்கும் மேல, அப்பாவின் சிராத்த காலம் இது. மிகச் சரியா அந்த மாசத்துல, இப்படியரு சிந்தனையும் செயலுமா வந்து எல்லாருக்கும் பிரசாதம் கிடைக்க ஒரு கருவியா நாங்க இருந்திருக்கோம்னு நினைக்கும்போதே பூரிச்சுப் போறது மனசு! தவிர, இந்த முறை சிராத்த காரியம் செஞ்சு, மந்திரங்களைச் சொல்லச் சொல்ல, மனசுல நமக்கே தெரியாம இருந்த எல்லா பாரங்களும் இறங்கிப் போயிட்ட மாதிரி ஓர் உணர்வு! அத்தனை பித்ருக்களும் சேர்ந்து ஆசீர்வாதம் பண்ணின மாதிரி ஒரு நிறைவு! ஆச்சரியமா இருந்துது எல்லாமே! சதாசர்வ காலமும் ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலே கதின்னு கிடக்கிற எங்களுக்கு அம்பாள் போட்ட பிச்சை இது'' என்று கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கச் சொல்கிறார் சண்முக சிவாச்சார்யர்.

உலக அசைவுகளையெல்லாம் கவனித்தபடி, ஒவ்வொருவரின் மன ஓட்டத்தையும் அறிந்துகொண்டு, அவர்களின் அபிலாஷைகளை இனிதே நிறைவேற்றித் தருகிறாள் ஸ்ரீகாளிகாம்பாள். நல்லனவற்றை பிரமாண்டமாகவும் அல்லாதவைகளைத் துளியும் இல்லாதபடி அழிப்பவளாகவும் இருப்பதுதான் அன்னையின் சிறப்பு!

''கோயிலுக்கு வந்து தரிசிக்க முடியாதவங்களுக்குக்கூட பிரசாதம் கிடைக்கணும்னு குங்குமம் வழங்கிய சக்திவிகடனுக்கு நன்றி! ஆனா குங்குமம் கைக்கு வந்து, நெஞ்சுல வைச்சுப் பிரார்த்தனை பண்ணி, நெத்திக்கு இட்டுக்கிட்டேன். உள்ளே ஏதோ ஒரு பரவசம். யாரோ கைப்பிடிச்சு 'வா... வா...’ன்னு கூப்பிடுற மாதிரி ஓர் உணர்வு! அதான், உடனே சென்னைக்கு ரயிலேறி வந்து, ஸ்ரீகாளிகாம்பாளை கண் குளிரத் தரிசனமும் பண்ணிட்டேன். அடடா... அவள் பேசும் தெய்வம். நமக்கெல்லாம் அம்மா. பெத்தவளைப் பார்த்துட்டு வந்த சந்தோஷமும் நிறைவுமா ஊர் திரும்பினேன்'' என்று தொலைபேசியில் நம்மிடம் தெரிவித்தார் துறையூரைச் சேர்ந்த டாக்டர் சாந்தா ராஜாசங்கர்.

பிரபல இறை இசைப் பாடகர் வீரமணிராஜூ, சபரிமலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் தீவிர பக்தர். அவர் ஸ்ரீகாளிகாம்பாள் பற்றிச் சொல்லும்போதே, அவளைப் பற்றிப் பேசும்போதே நெக்குருகிப் போகிறார்.

''நிறைய கோயில் குளங்கள்னு சுத்தியிருக்கேன். பாட்டு- கச்சேரின்னு போய் ஏகப்பட்ட கோயில்களைத் தரிசனம் பண்ணியிருக்கேன். ஆனா, எப்பவாவது ஒரு ரிலாக்ஸ்... சின்னதான ஓய்வு கிடைக்கும்போது, நான் என்னை மொத்தமா ஒப்படைச்சு நிக்கிற இடம், ஸ்ரீகாளிகாம்பாள் சந்ந்தியிலதான்! வருஷம் முந்நூத்து அறுபத்து அஞ்சு நாளும் ஓடியாடி, வேலை செஞ்ச களைப்பு மொத்தமும் காணாம போய், புதுசாப் பொறந்தது மாதிரி லேசாகிடும் மனசு. பொலபொலன்னு விடிஞ்ச கிழக்கு மாதிரி, பளிச்சுன்னு ஆயிடும் உடம்பு.

இதோ.. எந்தன் தெய்வம்! - 7

திருச்சி போனா சமயபுரம்; தஞ்சாவூர் போனா புன்னைநல்லூர்; திருநெல்வேலிக்குப் போகும்போதெல்லாம் காந்திமதி; சென்னைல, எப்பவும் நம்ம கூடவே இருந்து, நம்மை வழிநடத்தி அருள்பாலிச்சுக்கிட்டிருக்கிற நம்மைக் காக்கும் தெய்வம் ஸ்ரீகாளிதேவி. உள்ளே ஒரு எனர்ஜியைத் தர்ற மகாசக்தி அவள்!

'என்னங்க ரெண்டு நாளா டல்லா இருந்தீங்க. இப்ப திடீர்னு பரபர சுறுசுறுன்னு ஆயிட்டீங்க?’ன்னு வீட்லகூட கேப்பாங்க. சமீபத்துல, ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்குப் போயிட்டு வந்த மூணாம் நாள் அப்படிக் கேட்டாங்க. என் எனர்ஜிக்கும், எனக்குக் கிடைக்கிற புத்துணர்ச்சிக்கும், உள்ளே ஏற்படுற மலர்ச்சிக்கும் என் வாழ்க்கையில அருட்சக்தியா, அன்னையா, என் இனிய தெய்வமா இருக்கறவ ஸ்ரீகாளிகாம்பாள்!'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் வீரமணி ராஜூ.

''எத்தனையோ ஸ்வாமிகளைப் பாடிட்டேன். சக்தியைப் போற்றியும் பாடியிருக்கேன். சமீபத்துல ஒருநாள் ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதிக்குப் போய், 'தாயே... நல்லாருக்கேன். ஒரு குறைவுமில்லை. பாடுறதுக்கு நிறைய வாய்ப்பு வருது. உன் கருணையே கருணை!’ன்னு சொல்லிக் கும்பிட்டேன். 'என்னைப் பாட மாட்டியா?’ன்னு அவ ஒரு புன்னகையோடு கேக்கற மாதிரி இருந்துச்சு. சட்டுன்னு தூக்கிவாரிப் போட்டுடுச்சு எனக்கு!

நாம அவகிட்ட கேட்டு, நம்மளோட லௌகீக விஷயங்களையெல்லாம் அவதான் நடத்திக் கொடுப்பா. அவளே பிள்ளைகிட்ட கேக்கறான்னா... இதைவிட வேற என்ன கொடுப்பினை வேணும், எனக்கு?'' - நா தழுதழுக்கச் சொல்கிறார் வீரமணி ராஜூ.

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா