மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம் - 8

தாயே... சக்தி கொடு! வி.ராம்ஜி

##~##
இதோ... எந்தன் தெய்வம் - 8

'திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ என்பார்கள். வாழ்க்கையில், அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது, என்ன செய்வது, அப்படிச் செய்வது நல்லதுதானா... என்று ஆயிரம் குழப்பங்களும் தயக்கங்களும் சூழ்ந்து நம்மை அலைக்கழிக்கும். அப்போது, கடவுளே கதியென்று தன்னையும் தன் செயலையும் முழுவதுமாக ஒப்படைத்துவிட வேண்டும்; தெய்வத்தை முழுமையாகச் சரணடைந்துவிட வேண்டும். அப்படி, வாழ்வில் நிர்க்கதியாக இருந்த பலரும் தவித்து மருகிச் சரண் அடைந்தது... ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்!

''அம்பாள்கிட்ட நம்ம வாழ்க்கையை மொத்தமா ஒப்படைச்சிடணும். 'அம்மா... எனக்கு வேற யாரும் துணை கிடையாது. நீதான் எனக்குத் துணையா இருக்கணும். என்னைக் கைதூக்கிவிடணும். எங்க குடும்பத்தைச் சீரும் சிறப்புமா வாழ வைக்கணும்’னு டோட்டலா சரண்டர் ஆயிடணும். அதுக்குப் பிறகு எல்லாத்தையும் அவ பார்த்துக்குவா!'' என்று உறுதியுடன் சொல்லும் பக்தர்கள், ஸ்ரீகாளிகாம்பாளின் பிள்ளைகளாகக் கோயிலில் வலம் வருகின்றனர்.

இதோ... எந்தன் தெய்வம் - 8

''அம்மா காளிகாம்பா! எங்க வம்சத்தையே காப்பாத்த நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை? என்ன குருக்கள் ஐயா... நான் சொல்றது சரிதானே? நம்மளையெல்லாம் பெத்தவளாட்டம் பாத்துக்கறதுக்கு காளிகாம்பா இருக்கும்போது, நாம துக்கப்படலாமோ? வேதனைப்படலாமோ?'' என்று உறுதியான பக்தியுடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் சாம்பமூர்த்தி சிவாச்சார்யரிடம் அடிக்கடி சொல்லி நெகிழ்வாராம், நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

உண்மைதான். அம்மா என்று அழைத்தால் தாயாகவும், காளிகாம்பாள் என்று சொன்னால் சேயாகவும் ஓடிவந்து நம் துயர் துடைத்திடுவாள் தேவி.

''சின்ன வயசுலேர்ந்தே இந்தக் கோயிலுக்கு வந்துட்டிருக்கிறதால, இங்கே வந்தா ஸ்கூலுக்கு வர மாதிரி ஓர் உணர்வு இருக்கும். போகும்போது, ஏதோ எல்லாத்தையும் கத்துக்கிட்டதுபோல, எல்லாம் தெரிஞ்சுக்கிட்டதுபோல ஒரு தெளிவு கிடைக்கும். உள்ளே, சந்நிதியில இருக்கிற காளிகாம்பாளைப் பார்த்தபடியே, தூணுக்குப் பக்கத்துல உக்கார்ந்துடுவேன். 'ஓம் ஸ்ரீகாளிகாம்பிகே ரக்ஷ ரக்ஷ... ஓம் ஸ்ரீகாளிகாம்பிகே ரக்ஷ ரக்ஷ... ஓம் ஸ்ரீகாளிகாம்பிகே ரக்ஷ ரக்ஷ...’ன்னு 108 தடவை கண்களை மூடிச் சொல்லிட்டு எழுந்து, பிராகாரத்தை வலம் வருவேன். அவளோட மூலமந்திரத்தைச் சொல்லச் சொல்ல, முகமும் மனசும் மலர ஆரம்பிச்சுது. எவ்ளோ பெரிய துக்கம் வந்தாலும், சட்டுன்னு வீட்ல உக்கார்ந்து அவளோட மந்திரத்தைச் சொல்லிக்கிட்டே இருக்குற அளவுக்கு, அவளை விடாப்பிடியா கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன். அப்புறம் என்ன... ஒரு குறைவும் இல்லாம அவ என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டா. இன்னமும் பார்த்துக்கறா!'' என நா தழுதழுக்கச் சொல்கிறார் வாசகி ரமா.

''மந்திரத்துக்குத் தனி பலம் உண்டு. மந்திர உச்சாடனம் செய்யச் செய்ய, அதனால் கிடைக்கும் பலன்களை வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. 'ஓம் ஸ்ரீகாளிகாம்பிகே ரக்ஷ ரக்ஷ...’ன்னு ஸ்ரீகாளிகாம்பாள் தாயோட மூலமந்திரத்தை எவர் ஒருத்தர் தினமும் காலையிலயும் சாயந்திர வேளைலயும் தவறாம சொல்லிண்டே இருக்காங்களோ, அவங்க குடும்பம் செழிச்சு வளரும். இது உறுதி! குறிப்பா, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள்ல, அம்பாளைப் பிரார்த்தனை பண்ணி, முடிஞ்ச அளவுக்குத் தாமரையும் செவ்வரளியும் வாங்கி அர்ச்சனை பண்ணி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செஞ்சு, எல்லாருக்கும் கொடுக்கறது ரொம்பவே சிறப்பு. அப்படிச் செஞ்சோம்னா, சந்தான பாக்கியத்துலேருந்து சகல பாக்கியங்களும் வீட்ல நிறைஞ்சிருக்கும்!'' என்று சிலாகித்தபடி சொல்கிறார் சண்முக சிவாச்சார்யர்.

அதேபோல்தான் ஸ்ரீவீரபத்திரரும்! பத்திரம் என்றால் பாதுகாப்பு. நம்மை எந்தத் தருணத்திலும், எந்தச் சிக்கலிலும் சிக்கவிடாமலும் மருகித் தவிக்கவிடாமலும் காத்தருள்பவர் ஸ்ரீவீரபத்திரர்.

இதோ... எந்தன் தெய்வம் - 8

''ஸ்ரீவீரபத்திரர் வழிபாடுங்கறது இங்கே ரொம்பக் குறைவுதான். அதேபோல, அவருக்குச் சந்நிதி இருப்பதும் தனியே கோயில் இருப்பதும் ரொம்பவே அபூர்வம். இங்கே, ஸ்ரீகாளிகாம்பாள் கோயில்ல ஸ்ரீவீரபத்திரர் தனிச்சந்நிதியில அழகு ததும்பக் காட்சி தந்துண்டிருக்கார்.

இவர் சந்நிதிக்கு முன்னால நின்னு, 'ஓம் ஜய ஜய வீரபத்ராய நம:’ன்னு சொல்லி, மனசாரப் பிரார்த்தனை பண்ணிண்டாப் போதும். மத்ததையெல்லாம் அவர் பார்த்துப்பார். பயணங்களா கட்டும், அலுவலக - அன்றாடப் பணிகளாகட்டும்... எல்லாத் தருணங்கள்லயும் கண்ணை இமை காப்பது மாதிரி நம்மளைக் காபந்து பண்ணி, அருள்பாலிச்சு, நம் எல்லாச் செயல்களுக்கும் ஜெயத்தைக் கொடுத்திடுவார், அவர்'' என்கிறார் காளிதாஸ் சிவாச்சார்யர்.

இதோ... எந்தன் தெய்வம் - 8

''கோயிலுக்கு அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு சுத்தியிருக்கற ஏரியாவுல, எல்லாமே மொத்தக் கொள்முதல் வியாபாரம்தான்! அந்தக் கடை உரிமையாளர்கள் பலரும் காளிகாம்பாள்கிட்ட வேண்டிக்கிட்ட கையோட, ஸ்ரீவீரபத்திரர் சந்நிதியில கடை சாவியை வைச்சுட்டு, 'இன்னிக்கு வியாபாரம் சிறப்பா நடக்கணும். பொருள் வாங்க வர்றவங்களோட காசு, திருட்டுலயோ கொள்ளையிலயோ பறிபோகாம நல்லபடியா வாடிக்கையாளர் பணத்தைக் காப்பாத்துப்பா! அதேபோல, பணத்தை எடுத்துட்டு பேங்க் அல்லது பொருள் வாங்க நாங்க போகும்போது, நீதாம்பா உன் ஆயுதத்தோட வந்து, எங்களையும் எங்க உடைமைகளையும் காபந்து செய்யணும். 'ஓம் ஜய ஜய வீரபத்ராய நம:’ன்னு அவரோட மூலமந்திரத்தை ஜபிச்சு, வணங்கிட்டுப் போவாங்க'' என்று தெரிவிக்கிறார்கள், கோயில் ஊழியர்கள்.

''இங்கே உள்ள ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, கண்கண்ட தெய்வம். சுதைச் சிற்பமா, பிரமாண்டமா தரிசனம் தர்றா. எதிரிகளே இருக்கக்கூடாது, நமக்கு எதிர்ப்பே வரக்கூடாதுன்னு நாம நினைச்சு, எல்லார்கிட்டயும் அன்பா வாழலாம். ஆனா, நம்மளைப் பிடிக்காதவங்க, நம்ம வளர்ச்சியைக் கண்டு பொருமிப் புழுங்கித் தவிக்கிறவங்க இருப்பாங்கதானே!

இதோ... எந்தன் தெய்வம் - 8

அந்த எதிர்ப்பை யெல்லாம் சமாளிச்சு, நம்மை அடுத்தகட்டத் துக்கு நகர்த்திக்கொண்டு போய், கரை சேர்க்கிற கருணைத் தாய் அவள்!'' என்று கண்களில் நீர் கட்டிக்கொண்ட நிலையில், நெகிழ்ச்சி யுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

'ஓம் அதர்வண பத்ரகாள்யை நமோ நம:’ என்பதுதான் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் மூலமந்திரம். அமாவாசை நாளிலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கே வந்து, ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்துகொண்டு, கண்கள் மூடி, இதனைச் சொல்லச்சொல்ல, எதிர்ப்புகள் மொத்தமும் தவிடுபொடியாகிவிடும். எதிரியே இல்லை எனும் நிலை, நம் வாழ்வில் வந்துவிடும்.

ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்கு வந்து சந்நிதி சந்நிதியாக நின்று, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். ஸ்ரீகாளிதேவி எனும் சூட்சும சக்தி, ஏதேனும் ஒரு வடிவில் வந்து உங்களையும் உங்கள் குலத்தையும் காத்தருள்வாள் என்பது உறுதி!

'தாயே நீயே துணை’ என்று கைகுவித்து, கண்களில் நீர் கசிய அவளின் சந்நிதியில் நிற்கிறோம். மூக்குத்தி டாலடிக்க... அரளிப்பூ மாலையில் அழகு மிளிர...., சிரசில், தோள்களில், திருப்பாதங்களில் இருக்கிற தாமரையைப் போலவே அவளின் உதடுகளும் கண்களும் மலர்ந்திருக்க... அந்தத் தரிசனச் சிலிர்ப்புடனே மீண்டும் நம்மிடம் இருந்து வருகிறது... 'தாயே நீயே துணை’ எனும் வாசகம், பிரார்த்தனையாக!

சிவந்த உதடு பிரியாமல், கண்களால் சிரித்தபடி, நம் கருணைமனுவை ஏற்று அருள்கிறாள் தேவி.

ஓம் ஸ்ரீகாளிகாம்பிகே ரக்ஷ ரக்ஷ!

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

இதோ... எந்தன் தெய்வம் - 8

அம்மனுக்கு வளைகாப்பு!

திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி சமேத ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் விசேஷம். இந்த விழாவின் நான்காவது நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உத்ஸவம் நடைபெறும். அப்போது, ஊறவைத்த பயறு வகைகளை அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வார்கள். பார்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண் போலவே காட்சி தருவாள் அம்பாள்.

இந்த வளைகாப்பு வைபவத்தை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்; குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு பிள்ளைப்பேறு விரைவில் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

- விஜயா சீனிவாசன், திருச்சி-13