Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்! - 32

சேய்த் தொண்டர்: ராமலிங்க வள்ளலார்மயூரப்ரியா, ஓவியம்: பத்மவாசன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'ராமலிங்கம் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்வதில்லை; படிப்பு இல்லாத தம்பிக்குச் சோறு எதற்கு? இனி, அவனுக்கு உணவு கொடுக்காதே!'' என்றார் அண்ணன் சபாபதி, தன் மனைவியிடம்.

பாவம் ராமலிங்கம்..! சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். அண்ணனின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். அப்போது ராமலிங்கத்துக்கு வயது 9. அவரது தந்தையார் திதி நடந்த அன்று, அண்ணனுக்குத் தெரியாமல் தோட்டத்துப்புறமாக ராமலிங்கத்தை அழைத்து உணவு அளித்துவிட்டுக் கண்ணீர் வடித்தார் அண்ணியார். அது, சிறுவன் ராமலிங்கத்தின் மனத்தைக் கரைத்தது.

''அண்ணி! இனிமேல் நம் வீட்டு மாடி அறையில் நான் படிக்கிறேன்'' என்று உறுதி கூறினார். அண்ணியார் மகிழ்ந்தார்.

மாடி அறைக்கு படிக்க வந்த ராமலிங்கம், அங்கிருந்த நிலைக்கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்து வரலானார். ஒருநாள், திருத்தணி முருகன் அந்தக் கண்ணாடியில் கண்கொள்ளாக் காட்சியளித்தான். தன்னை மறந்து அக்காட்சி இன்பத்தைப் பாடினார் ராமலிங்கம். அந்தப் பாடல் :

'சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும், திகழ்கடப்பம்
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும், ஓர்
கூர் கொண்ட வேலும் மயிலும், நற்கோழிக்கொடியும், அருள்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே!’

தணிகை முருகனின் அருட்காட்சி, அவருக்கு அனைத்துப் புலமையும் அளித்து, ஓதாது உணரச் செய்தது.

சென்னை ஏழுகிணறு பகுதியில் 35 வயது வரை வாழ்ந்த காலத்தில், தினமும் திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்கு நடந்தே சென்று வழிபட்டவர் ராமலிங்கம். அந்தக் கோயிலில் உள்ள அருட்ஜோதி முருகனையும், மாணிக்கத் தியாகரையும், வடிவுடை மாணிக்க அன்னையையும் மனம், மொழி, மெய்களால் வழிபடுவார். திருஞானசம்பந்தர் அவரது குரு. மணிவாசகரது திருவாசகத்தைப் பாடி உருகுவார்.

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்! - 32

ஒருநாள், திருவொற்றியூர் வடிவுடை அம்மையை வழிபட்டு இல்லம் திரும்பும் போது, மிகவும் காலதாமதம் ஆனது. அந்த நள்ளிரவில் அண்ணியாரை எழுப்பி உணவு கேட்க மனம் இன்றி, வீட்டுத் திண்ணையிலேயே பசியோடு படுத்து உறங்கிவிட்டார். அண்ணி அவரை எழுப்பி உணவை அளித்ததும், அதை உண்ட மயக்கத்தில் மீண்டும் அயர்ந்து தூங்கிவிட்டார். ஆனால், காலையில் அண்ணியார் அவரிடம், ''தம்பி! இரவு சாப்பிடவில்லையே? ஏன் என்னை எழுப்பவில்லை?' என்று வினவ, ''தாயே! நீங்கள்தான் என்னை எழுப்பி உணவு அளித்தீர்கள்! மறந்துவிட்டீர்களா?' என்றார் ராமலிங்கம்.

''நானா? இல்லையே!' என்று அண்ணி குழப்பத்தோடு சொல்ல, அப்போதுதான் வடிவுடை அம்மையே அண்ணியார் வடிவில் வந்து உணவு அளித்துத் திருவருள் புரிந்தது தெரிந்தது. இதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டார் ராமலிங்கம். இதை,

'இருள் இரவில் ஒரு மூலைத் திண்ணையில் நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க, எனைத் தேடி வந்தே
பொருள் உணவு கொடுத்து உண்ணச் செய்வித்தே!’

என்று தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

மற்றொரு நாள், பசியோடு கோயில் மண்டபத்தில் சாய்ந்திருந்தார் ராமலிங்கம். அப்போது கோயில் குருக்கள் வடிவில் இறைவனே வந்து அவருக்குப் பிரசாதம் அளித்து உண்ண வைத்தார். பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பசி தீர்க்க வழி செய்ய வந்துள்ளார் ராமலிங்கம் என்பதால், இறை வனே இவரைத் தேடிவந்து பசி நீக்கினார் போலும்!

ஒருமுறை, திருவொற்றியூர் இறைவன் இவருக்கு குருவடிவில் வந்து ஆசி கூறி, உடல் வருடி, அன்போடு நோக்கி மறைந்தார். இப்படிப் பெருமானே காட்சி தந்து, ஞானத்தை ஊட்டி பசிப்பிணி நீக்கி அருளினார் என்றால்... அவர் எப்படிப்பட்ட மகானாக இருந்திருப்பார்!

திருவொற்றியூரில் சன்னதித் தெருவில் நிர்வாண சாமியார் ஒருவர் இருந்தார். கோயிலுக்கு வருவோர் போவோர் அனை வரையும் பார்த்துக் கொண்டே இருப்பார். திடீரென்று, ''கழுதை போகிறது! குதிரை போகிறது! நரி போகிறது! குரங்கு போகிறது! நாய் போகிறது!'' என்பார். அந்தந்த மிருகக் குணம் உள்ள மனிதர்கள் போகிறார்கள் என்பது அதன் உட்பொருள். ஒருநாள், ராம லிங்கம் போவதைப் பார்த்துவிட்டு, ''உத்தமமான மனிதன் போகிறான்'' என்று சொல்லிக்கொண்டே இடுப்பில் துணியைக் கட்டிக்கொண்டாராம் அவர். அதாவது, மிருகங்களின் குணத்தைக்கொண்ட மனிதர்கள் போகும்போது, அவர்கள் இவர் கண்ணுக்கு மிருகங்களாகவே தெரிந்தார்கள். எனவே, அவர்களின் முன் நிர்வாணமாக இருக்க இவருக்குக் கூச்சம் ஏற்படவில்லை. ஆனால், உத்தம மனிதரான ராமலிங்கத்தைக் கண்டதும் சட்டென்று வெட்கப்பட்டு, இடுப்பில் ஆடையைச் சுற்றிக்கொண்டார்.

அப்படிப்பட்ட உத்தம மனிதர் யார் என்று தெரிகிறதுதானே? அவர்தான் பிற்காலத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் என்று புகழ்பெற்ற ராமலிங்க சுவாமிகள். 'மனம் கறுத்து உடல் வெளுத்த உலகத்தாரைத் திருத்தி, மண் உலகையே சொர்க்கம் ஆக்கிக் காட்ட சன்மார்க்க சங்கத்தைத் தொடங்க இந்தக் கலியுகத்தே தன்னை இறைவன் வரவழைத்தான்’ என்கிறார் வள்ளலார்.

தில்லை எனும் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூரில் கருணீகர் மரபில் ராமையா பிள்ளை- சின்னம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது புதல்வராக 1823-ஆம் ஆண்டு பிறந்தார் ராமலிங்கம். இவர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரது பெற்றோர் சிதம்பரம் நடராஜப் பெருமானைச் தரிசிக்கச் சென்றனர். குழந்தை, தாயின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தது. அறியாத அந்தப் பருவத்தே நடராஜப் பெருமானது வலது பக்கத்தில் உள்ள சிதம்பர ரகசியத் திரையை விலக்கி தரிசனம் காட்டியபோது, இக்குழந்தை சிதம்பர ரகசியம் வழங்கப்பெற்று, பெருவெளி இன்பத்தை அனுபவித்தது.

சிறு வயதிலேயே சென்னை கந்த கோட்டத்து முருகப்பெருமான் மீது இவருக்குத் தீராத பக்தி உண்டு. தினமும் அந்தப் பெருமானை தரிசித்து, அவன் அருள் முழுதுவம் பெற்று, அவர் பாடிய அற்புதமான பாமாலைதான் 'தெய்வ மணிமாலை’.

'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்
வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே’

என்ற வரிகளை எல்லோரும் கேட்டு இன்புற்றிருக்கலாம். 31 பாடல்களைக் கொண்ட அந்தப் பாமாலை அவரது அருட்பாக்களுக்கு முதன்மை பெற்று நின்ற திருவும் பெருமையும் உடையது.

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்! - 32

ராமலிங்கர் தமது 21-வது வயதில், தமக்கை உண்ணாமுலையம்மை மகள் தனம்மாளை உறவினர்கள் வற்புறுத்தலின்பேரில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருக்கு இல்லற வாழ்வில் நாட்டமோ ஆசையோ இல்லை. சிற்றின்ப நாட்டமின்றி இறைவனது பேரின்ப உணர்வில் மூழ்கத் தொடங்கினார். சரிவரப் படிக்காத தன் தம்பி எப்படிப் பிழைக்கப் போகிறான் என வருந்தினார் அண்ணன் சபாபதி. அவர் புராணப் பிரசங்கம் செய்து வாழ்ந்து வந்தவர்.

ஒருமுறை, சென்னை முத்தையாலுப் பேட்டையில் அவரது சொற்பொழிவுக்காக அனைவரும் காத்திருந்தனர். அன்று சபாபதிக்கு உடல்நலம் சரியில்லை. ''அண்ணன் வரமுடியாவிட்டால் என்ன... தம்பியாகிய நீங்கள் பேசலாமே?'' என அனைவரும் ராமலிங்க வள்ளலாரை அழைக்க, அவரும் ஒப்புக்கொண்டு, 'உலகெலாம் உணர்ந்து...’ எனத் தொடங்கும் பெரியபுராண முதற் பாடல் முதலடிக்கு நீண்ட விளக்கம் அளித்தார். ராம லிங்கத்தின் சொற்பொழிவு ஆற்றலைக் கண்டு சபையோர் அனைவரும் பிரமித்துப் போனார்கள். அடுத்து வந்த நாட்களிலும் அவரையே பேசுமாறு பணித்தனர். தெய்வீகமான அவரது குரலில் அருள் அருவி கொட்டியதைக் கண்டார் அண்ணன் சபாபதி. இப்படிப்பட்ட ஞானவான் தனக்குத் தம்பியாகப் பிறந்ததை எண்ணிப் பெருமை கொண்டார்.

திருத்தணிகாசலம் முருகன் மீது ராமலிங்க வள்ளலார் பாடியுள்ள பாடல்கள் 525. திருமுல்லைவாயில், திருவள்ளுர், திருவலிதாயம், விருத்தா சலம், திருவண்ணாமலை, திருவாரூர், சீர்காழி, திருக்கண்ணமங்கை, வைத்தீஸ்வரன்கோவில், சிதம்பரம் முதலான தலங்களைத் தரிசித்து இறைவனுக்குப் பாமாலை சூட்டி இன்புற்றார் ராமலிங்க வள்ளலார்.

தமது 35 வயதுக்கு மேல் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள கருங்குழி என்ற ஊரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபோது, பல அற்புதங்களை நிகழ்த்தினார். அவரது அறையில் ஒருமுறை, விளக்கில் எண்ணெய் தீர்ந்து போனபோது, தண்ணீரை ஊற்றி விளக்கு எரித்தார். அங்கே பல அன்பர்களின் குஷ்டநோய், கண்நோய், வயிற்றுவலி முதலான உடல்நோய்களைத் தீர்த்தார்.

1865-ஆம் ஆண்டில், சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ஆன்ம நேய ஒருமைப்பாடே அதன் தாரக மந்திரம். சாதி, மதம், இனம் முதலான வேறுபாடுகளை நீக்கி, எவ்வுயிரையும் தம் உயிர்போல எண்ணி அன்பு செய்ய வேண்டும்; உயிரைப் பலியிடல், புலால் உண்ணுதல் முதலியன கூடாது; ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்... என்பன உள்ளிட்ட பல கொள்கைகளைக் கொண்டது இந்தச் சங்கம்.

அதோடு, உயிர்ப் பசி தீர்த்தலே ஆண்டவனுக்குச் செய்யும் மிக உயர்ந்த தொண்டு என்ற அடிப்படையில் வடலூரில் 'சத்திய தருமச் சாலை’யை 1867-ல் நிறுவினார். தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கும் அந்தத் தர்மசாலை 145 ஆண்டுகளாகத் தொடர்ந்து பசிப்பிணி ஆற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்பதே வள்ளலார் அருளிய மகாமந்திரம்.

'சன்மார்க்க போதினி’ என்னும் மும்மொழிக் கல்விச் சாலையைத் தொடங்கி, அதில் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பயில வழி வகுத்தார். முதியோர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி வழங்கினார். 'சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் பத்திரிகையை நடத்தினார். 1872-ல் 'சத்திய ஞான சபை’யை எண்கோண வடிவத்தில் அமைத்தார். தைப்பூசத்தன்று திரையை நீக்கி ஜோதி தரிசனம் செய்வதே இதன் கோட்பாடாகும்.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் முதலான உரைநடை நூல்களுடன் ராமலிங்க வள்ளலார் பாடியுள்ள மொத்த பாடல் தொகை 6411. இவை 6 திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. தமிழில் எழுந்த ஆசிரியப்பா வகையில் 1596 அடிகளைக் கொண்ட 'அருட்பெரும் சோதி அகவல்’ என்ற நூலே மிகப்பெரியதாகும். இதனை ஒருநாள் இரவிலேயே வள்ளலார் முழுமையாகப் பாடி முடித்தார் என்பார்கள்.

சத்திய ஞான சபையை 1871-ல் நிறுவி, அதன் மூலம் கொல்லாமை, இரக்கம் முதலான சமரச சன்மார்க்க நெறிகளைப் பரப்பினார் வள்ளலார். சாகா கல்வி மூலம் நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு முதலியவைகளைத் தவிர்த்து மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழும் வகையையும் கூறியுள்ளார். உடலோடு இறைவன் தன்னை ஏற்கும் ஞானதேகம் பற்றியும், ஸித்தி பற்றியும் தமது பாடலில் குறிப்பிடுகிறார் அவர்.

'இனி உமது வழியில் புலப்படாது உலவிடுவோம்’ என்று தம்மைச் சூழ்ந்திருக்கும் அன்பர்களிடம் குறிப்பால் உணர்த்திய ராமலிங்க வள்ளலார், மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் தனி அறையில் புகுந்து தாளிட்டுக்கொண்டார். 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் அருட்பெரும் சோதியில் கலந்து மரணம் இல்லாப் பெருநிலையை அடைந்தார் அருட்பிரகாச வள்ளலார்.

'அனைத்துயிரும் தம் உயிர்போல் அரவணைக்கும் பெருங்கருணை
தனை நிறுவும் சமரச சன்மார்க்க சார்புணர்த்தி
மனிதரிலே தெய்வமென மாண்புபெறு இராமலிங்கர்
மனம் நிறைந்த ஆறுமுக மன்னவன் பொற் பதம் போற்றி’

- கவிஞர் கு.ஆறுமுகம்

- அடியார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு