Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 9

சிவமயம்! வி.ராம்ஜி

இதோ எந்தன் தெய்வம்! - 9

சிவமயம்! வி.ராம்ஜி

Published:Updated:
##~##

'இதோ எந்தன் தெய்வம்’ தொடரில் இதுவரை ஸ்ரீகாளிகாம்பாளின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் பார்த்தோம். இந்த இதழில், 'இதோ எந்தன் தெய்வம்’ என ஏராளமான அன்பர்கள் பூரித்து மகிழும் இறைவனைப் பார்க்கப் போகிறோம்.

அதற்கு முன்னதாக, ஸ்ரீகாளிகாம்பாளின் தீவிர பக்தர் துளசிதாஸின் அனுபவத்தைப் பார்த்துவிடுவோமே!

''ஸ்ரீகாளிகாம்பாள் குடிகொண்டிருக்கிற அதே தம்புசெட்டிதெருவுல தான் நான் பொறந்தேன்; வளர்ந்தேன்! எங்களோட விளையாட்டு மைதானம்னா, அது காளிகாம்பாள் கோயில்தான். கிரிக்கெட்டோ கேரம்போர்டோ, கண்ணாமூச்சியோ ஓட்டப்பந்தயமோ... விளையாட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, 'அம்மா... நான் ஜெயிக்கணும்’னு வேண்டிக்கிட்டுத்தான் விளையாடப் போவேன். அப்படியே என்னை ஜெயிக்க வைச்சிடுவா அம்மா! இந்தப் பழக்கம் ஸ்கூல், காலேஜ்னு தொடர்ந்துச்சு. பின்னாளில் நான் சார்ட்டர்ட் இன்ஜினீயரா ஆகறதுக்கும் அவளே காரணம்!'' என்று சொல்லும் துளசிதாஸுக்கு இப்போது வயது 64.

இதோ எந்தன் தெய்வம்! - 9

''அதுமட்டுமா... மார்கழியும் தைப்பொங்கலும் வந்துட்டா, மொத்த ஏரியா பெண்களும் கோயில்லதான் இருப்பாங்க. விதம்விதமா கோலங்கள் போட்டு, கோயிலை இன்னும் அழகாக்கிடுவாங்க. அப்பதான் கோலத்தின் மேலயும் ஓவியத்தின் மேலயும் எனக்கு ஓர் ஈர்ப்பு வந்துச்சு. ஒரு பொங்கல் திருநாளின்போது, கோயில் பிராகாரத்துல ஸ்ரீகாளிகாம்பாளோட திருவுருவத்தை ரங்கோலி ஓவியமா வரைஞ்சேன். எல்லாரும் பாராட்டினாங்க. எனக்குள்ளே இப்படியரு திறமை இருக்குன்னு எனக்கே தெரிய வைச்சது, காளிகாம்பாள்தான்! அதன்பிறகு, உலகத்தில் எந்த மூலைல இருந்தாலும், பொங்கலின்போது இங்கே வந்து ஸ்ரீகாளிகாம்பாள், ஸ்ரீகற்பகாம்பாள், ஸ்ரீகாமாட்சின்னு வரைஞ்சதெல்லாம் இன்னும் பசுமையா நினைவில் இருக்கு'' என்று சொல்லி நெகிழ்கிற துளசிதாஸ், நினைக்கும்போதெல்லாம் அவளின் சந்நிதிக்குக் குழந்தைகளுடன் வந்து நின்றுவிடுவாராம்.

''என் பொண்ணு அப்ப சின்ன குழந்தை. சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் அவளைப் பார்க்கும்போதெல்லாம், 'என்ன டாக்டர் சௌக்கியமா?’ன்னு கேட்டுக்கிட்டே, நெத்தியில குங்குமம் இட்டுவிடுவார். 'நீ டாக்டர்தான்’னு சொல்லி, கன்னம் கிள்ளி ஆசீர்வாதம் செய்வார். அது, ஸ்ரீகாளிகாம்பாளின் வாக்கு. அதன்படியே இன்னிக்கு அவ டாக்டரா, மகப்பேறு மருத்துவரா இருக்கா. எல்லாம் ஸ்ரீகாளிகாம்பாள் போட்ட பிச்சை. வேற என்ன சொல்றது?'' என்று நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் சொல்கிறார் துளசிதாஸ்.

இவரைப் போன்று லட்சக்கணக்கான பக்தர்களின் வாழ்வில் இன்றைக்கும் கூடவே இருந்து ஒளியேற்றி அருள்பாலித்து வருகிறாள் ஸ்ரீகாளிகாம்பாள். அவளின் பெருமைகளை முழுவதுமாக எடுத்துரைக்க நமக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது!

இதோ எந்தன் தெய்வம்! - 9

நாம் அனைவரும் இறைவனுக்கு அடியாராக இருக்கிறோம். அப்படி இருப்பதையே விரும்புகிறோம். அதுவே நம் பாவங்களையெல்லாம் போக்கவல்லது என்று உறுதியாக நம்புகிறோம். 'உன் அடிமை நான். என்னை நீதான் காத்தருளணும்’ என மெய்யுருகிப் போகிறோம். 'உன் அடியவனான என்னை ஆட்கொள்ளேன், தெய்வமே...’ என்று மனமுருகி வேண்டுகிறோம். 'இந்த ஜென்மமும் இந்தப் பிறவியும் போதும். உன் அடியவனான என்னை, உன் திருவடியில் இணைத்துக் கொள்’ என்று சரணாகதியாகிறோம்.

உண்மைதான். கடவுளைச் சரணடைந்து விட்டால், நம்மை நம் பாவங்களில் இருந்து அகற்றிக் காத்தருள்வான் இறைவன். நம் கண்ணீரையும் துக்கத்தையும் கண்டு நமக்கு ஆறுதல் அளிக்க, அவனே நம்மைத் தேடி ஓடிவருவான். அவனின் அடியார்தான் நாம். ஆனாலும், நம் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளில் நமக்கு அடியவனாக, அடியார்க் கும் அடியானாக மாறிப் போவான் அவன்.

அப்படி அடியவருக்கு அடியாராகவும் தோழனுக்குத் தோழனாகவும் இருந்து, அவனருளைக் காட்டிய திருத்தலத்துக்குச் செல்வோமா?

அந்த ஊரின் பெயர் நடனவிநோத நல்லூர். நடனம் என்றாலும் விநோதமான நடனம் என்றாலும், நமக்குச் சட்டென்று நினைவுக்கு வருபவர் ஆடல்வல்லானான சிவபெருமான்தானே! அவர் குடிகொண்டி ருக்கும் நடனவிநோதநல்லூர் திருத்தலம், இன்றைக்கும் சொர்க்கபூமிதான். மலையும் மரங்களும் வயல்வெளிகளும் கொண்ட மிக அற்புதமான பூமி இது!

''இந்த ஊர்ல சில இடங்கள்ல அன்ன (சாதம்) வாசனையும், நெல் வாசனையும் தடால்னு வந்து, நம்ம நாசியைத் தொட்டுப் பார்த்துட்டுப் போகும். ஓரிடத்துல வேப்ப மரமோ, அரச மரமோ அல்லது வேற ஏதாவது மரமோதான் இருக்கும். ஆனா, அங்கே மகிழம்பூவோட வாசனை, வில்வத்தோட நறுமணம்னு வந்து, நம்ம மூக்கைத் துளைச்சு எடுக்கும். எல்லாத்துக்கும் காரணம் சிவ மகிமைதான்!'' என்று ஊர்ப் பெருமையை, தலத்தின் மேன்மையைப் போற்றிச் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

நடனவிநோதநல்லூர் என்று சொல்வது போல, இந்த ஊருக்கு ஆலக்கோயில் என்றொரு பெயரும் உண்டு. அதாவது, இந்தத் தலத்தின் விருட்சம்- கல்லால மரம். எனவே, ஆலக்கோயில் என்றும் இந்த ஊரை அந்தக் காலத்தில் அழைத்து வந்துள்ளனர். அதுமட்டுமா... ஆதிகாஞ்சி என்றும் இந்த ஊருக்குப் பெயர் இருப்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. புராண- புராதனப் பெருமைகள் கொண்ட, கல்லால மரத்தை விருட்சமாகக் கொண்ட அற்புதமான இந்த ஊர் இன்றைக்கு இன்னொரு விதத்திலும் போற்றிப் புகழப்படுகிறது. அதாவது, பசிப்பிணியைப் போக்கி அருளும் திருத்தலமாக இது திகழ்கிறது.

ஆமாம். ஆரூரில் இருந்து கிளம்பிய அந்த அடியவர், வழிநெடுக உள்ள சிவஸ்தலங்களையெல்லாம் தரிசித்தபடியே வந்தார். இங்கே வரும்போது களைப்பிலும் பசியிலுமாகக் கிறங்கி, வாடிப் போயிருந்தார். ஊருக்குள் நுழைந்து திண்ணை ஒன்றில் அமர்ந்தவர், அப்படியே சாய்ந்து கண்செருகி இளைப்பாறினார். ''எல்லாவற்றையும் துறந்தால்கூட, வயிற்றுப் பசிக்கு உணவு தேவையாக இருக்கிறதே..! ஒரு கவளம் உள்ளே இறங்கினால்தான், உடலெங்கும் தெம்பு பரவும் போல...'' என்று தனக்குத் தானே பேச்சாகவும் முனகலாகவும் சொல்லிக்கொண்டார்.

அந்த அடியவரின் பேச்சு யார் காதில் விழவேண்டுமோ, அவரது காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது. அதையடுத்து, தள்ளாமையும் நரைமுடியுமாக முதியவர் வேடம் பூண்ட அவர், கையில் திருவோடு ஏந்தி, தெருவுக்குள் இறங்கினார். அந்த ஊரில் உள்ள எல்லா வீதிகளிலும் நடந்தார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்றபடி, 'சிவனடியாருக்காக யாசகம் கேட்டு வந்திருக்கிறேன். அன்னம் தானம் செய்யுங்கள், தாயே!’ என்று குரல் எழுப்பினார்.

இன்றைக்கும் அந்த ஊரில், எவர் வந்து வீட்டின் முன்னே நின்று பசி என்று கேட்டாலும், இல்லையென்று சொல்வதே இல்லை ஊர்மக்கள். ஏனென்றால் வந்திருப்பது அந்த முதியவராகக்கூட இருக்கலாம் என்று இன்றைக்கும் ஓர் நம்பிக்கை உண்டு, மக்களுக்கு.

அதேபோல், அந்த அடியவர் வழிபட்ட ஆலயத்தில் பிரதோஷம் முதலான முக்கிய நாட்களில் ஜாம்ஜாமென்று நடைபெறுகிறது அன்னதானம். பொதுவாக, பிரதோஷ நாளில் பூஜைகள் முடிந்த பிறகு, ஒரு சின்ன இலையில் அல்லது தொன்னையில் நைவேத்தியம் செய்த உணவைப் பிரசாதமாக வழங்குவதுதானே வழக்கம்? ஆனால், இங்கே ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும், பூஜைகள் முடிந்ததும் அந்த நீண்ட நெடிய பிராகாரத்தில் அனைவரையும் உட்காரச் சொல்லி, இலை போட்டு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அல்லது தயிர்சாதம் எனப் பரிமாறுகிறார்கள்.ஏனென்றால், வந்திருக்கும் அடியவர் கூட்டத்தில் அந்த முதியவரும் வந்திருக்கலாம் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

அந்த முதியவர்... சிவனாரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்? இந்தத் திருவிளையாடல்கள் எல்லாம் அவனுக்குத்தானே அத்துப்படி?!

ஆமாம்... தன் அடியவருக்காகக் கையில் திருவோடு ஏந்தி, வீதிவீதியாக யாசகம் கேட்டு வந்த அந்த முதியவர், சிவபெருமான்தான்.

சென்னை- தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பஸ் மார்க்கத்திலும் ரயில் மார்க்கத்திலும் உள்ளது சிங்கபெருமாள் கோவில். இங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கச்சூர். மறைமலைநகர் ரயில் நிலையத்தில் இருந்தும் திருக்கச்சூரை அடையலாம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர்.

மிகச் சிறிய ஊரில், மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ளது அந்தச் சிவாலயம். அங்கே சிவனாரின் திருநாமம்- ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி. இவர்தான் உத்ஸவர். மூலவரின் திருநாமம்- ஸ்ரீகச்சபேஸ்வரர். இதனால்தான் இந்தத் தலத்துக்கு திருக்கச்சூர் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

திருக்கச்சூர் ஊருக்குப் போயிருக்கிறீர்களா? அப்படிப் போகிறபோது, உங்களிடம் எவரேனும் 'பசிக்கிறது’ என்று கேட்டால், உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். காரணம், அப்படி உங்களிடம் கையேந்தி விளையாடுவது சாட்சாத் அந்த சிவபெருமானாகக்கூட இருக்கலாம். ஊர்க்காரர்களும் ஸ்ரீகச்சபேஸ்வரரின் பக்தர்களும் அப்படித்தான் சொல்லிச் சிலிர்க்கிறார்கள்.

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா, ரா.மூகாம்பிகை