மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 10

சிவமயம்! வி.ராம்ஜி

இதோ எந்தன் தெய்வம்! - 10

யாசகம் கேட்பது என்பது சாதாரண காரியம் அல்ல. 'அம்மா, பிச்சை’ என்று வாசலில் நின்று குரல் கொடுப்பதற்கு, தான் என்கிற கர்வத்தை அறவே விட்டிருந்தால்தான் சாத்தியம்! 'என்னிடம் இது இல்லை; கொஞ்சம் தந்து உதவுங்களேன்’ என்று ஒருவர் கேட்பதற்குப் பக்குவமான, அலட்டல் இல்லாத மனம் வேண்டும்.

'அப்பாடா... என்ன வெயில்! வழிநெடுக சிவலிங்க தரிசனம் கிடைத்த தெம்பில், பசியோடு இவ்வளவு தொலைவு நடந்தே வந்துவிட்டோம். சுட்டெரிக்கிற வெயிலில் ஒருவழியாக நடனவிநோதநல்லூருக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது. ஆனால், இதுவரை மட்டுப்படுத்திய பசி, இப்போது கட்டுக்குள் அடங்க மறுத்து, வயிற்றைக் கிள்ளுகிறதே..! எத்தனை துறந்தாலும், இந்தப் பசியில் இருந்து இன்னும் மீள முடியவில்லையே..!’ என வாய்விட்டுச் சொன்ன அந்தச் சிவனடியார், சாதாரணர் அல்லர்; சிவபெருமானின்

##~##
ஸ்நேகிதன் எனக் கொண்டாடப்பட்ட அவர் - சுந்தரர். தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான அதே சுந்தரர்தான்! திருவாரூரில், 'ஆரூரா...’ என்று சிவனாரை அன்புடனும் நட்புடனும் அழைத்துச் சிலிர்த்த அதே சுந்தரர் பெருமான்தான்!

அடியவரில் பேதம் பார்ப்பதில்லை இறைவன். என்றாலும், வந்திருப்பது தன் நெருங்கிய தோழனாயிற்றே! சும்மா இருந்துவிடுவாரா சிவபெருமான்? அவர் பொருட்டு வயோதிகராக உருவெடுத்து, வீடு வீடாகச் சென்று, 'சிவனடியார் ஒருவர் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார். அவர் சுந்தரர் பெருமான். அவருக்கு அன்னம் தந்து உதவுங்கள்’ என்று அடியவரின் பெயரைச் சொல்லி, அவரின் பெருமையைச் சொல்லி, யாசகம் கேட்ட புண்ணிய ஸ்தலம் திருக்கச்சூர்!

''நண்பர்கள்தான் இந்தக் கோயிலைப் பத்திச் சொன்னாங்க. ரொம்ப சாந்நித்தியமான கோயில். ஒருமுறை போயிட்டு வா, உன் பிசினஸ் இன்னும் சிறப்பா நடக்கும்னு சொன்னாங்க. ஒரு ஞாயிற்றுக்கிழமைல, மனைவி ஜெயப்ரியாவையும் பையன் சாயி யுக்தேஷையும் கூட்டிக்கிட்டு, கோயிலுக்குப் போனேன். மொட்டைக் கோபுரமும் அதுக்கு எதிரே இருக்கிற மண்டபமும் பார்த்து, வியந்து போனேன். மிகப் பெரிய பிராகாரம், என் மனசையே விசாலமாக்கிருச்சு. எனக்குச் சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்துல உசிலம்பட்டி. ஏதோ, சொந்த ஊருக்குப் போயிட்டு வந்தது மாதிரியான ஒரு நிம்மதி, அங்கே கிடைச்சுது. அப்புறம், அடிக்கடி போக ஆரம்பிச்சு, இப்ப தொடர்ந்து போயிட்டிருக்கேன். பிசினஸும் முன்னைக்கிப்ப நல்லாவே போயிட்டிருக்கு!'' என்கிறார், சென்னை தாம்பரத்தில் வசிக்கும் கண்ணன். கோடம்பாக்கத்தில் கிராஃபிக்ஸ் டிசைனிங் அலுவலகம் வைத்திருக்கிறார்.

இதோ எந்தன் தெய்வம்! - 10

''கோயிலோட ஸ்தல புராணம் பத்தித் தெரிஞ்சதும் இன்னும் பிடிச்சுப் போச்சு! அங்கே பிரதோஷத்தின்போது அன்னதானம் செய்றது ரொம்பவே விசேஷம்னு குருக்கள் சொன்னார். அடுத்த பிரதோஷத்தின்போது, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம், ஆளுயர மாலை, அரளிச் சரம், தாமரை, வில்வம், மருக்கொழுந்துன்னு வாங்கிட்டுப் போனோம். தயிர்சாதமும் புளியோதரையும் அன்னதானம் பண்ணினோம். அன்னிலேருந்து மனசுல எந்த ஒரு கவலையோ துக்கமோ நுழையறதே இல்லீங்க. அவரோட பிசினஸும் குறைவில்லாம நடக்க ஆரம்பிச்சுது. அப்பலேருந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திருக்கச்சூர் வர்றதுன்னு நானும் கணவரும் உறுதியெடுத்துட்டோம்'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஜெயப்ரியா.

''சுந்தரரால் தேவாரப் பாடல் பாடப்பட்ட பெருமை வாய்ந்த தலம் இது. இங்கே சுந்தரருக்குத் தனிச்சந்நிதியே இருக்கு. அதேபோல வயோதிகரா சிவபெருமான் வீடுவீடாப் போய் யாசகம் கேட்டார் இல்லையா? அப்புறம் அந்த உணவை, சுந்தரருக்குக் கொண்டு வந்து, தானே பரிமாறினாராம். சுந்தரர் சாப்பிட்டு முடிச்சதும், அவருக்குக் காட்சி கொடுத்தார். 'என் சிவனே... என் சிவனே...’ன்னு உருகிப் போயிட்டார் சுந்தரர். பிற்பாடு, அந்த இடத்துல சுந்தரருக்கு ஒரு சந்நிதியும் சிவனாருக்கு ஒரு சந்நிதியுமா ராஜாக்கள் காலத்துல கட்டப்பட்டது. அந்த ஸ்வாமிக்கு, விருந்திட்ட ஈஸ்வரர்னு திருநாமம்!'' என்று கோயிலின் பெருமைகளை சிலாகித்துச் சொல்கிறார் முரளி குருக்கள்.

இதோ எந்தன் தெய்வம்! - 10

''பரம்பரை பரம்பரையா இந்தக் கோயில்ல பூஜைகள் செஞ்சுட்டு வரோம். எங்க தாத்தாவும் அப்பாவும் பூஜை பண்ணினதை சின்னப் பையனா பாத்திருக்கேன். எனக்கு ஸ்ரீகச்சபேஸ்வரரும் தியாகராஜரும் அஞ்ச னாட்சி அம்பாளும்தான் எல்லாமே!'' என்று கண்களில் நீர் கசியச் சொல்கிறார் முரளி குருக்கள்.

ஒரு பிரதோஷத்தின்போது, திருக்கச்சூரில் ஏகப்பட்ட கூட்டம். தாம்பரத்தில் இருந்தும் திருவொற்றியூரில் இருந்தும் மந்தைவெளியில் இருந்தும் குடும்பம் குடும்பமாகப் பலரும் வந்திருந்தார்கள். அருகில் உள்ள மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி எனப் பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள்.

இதோ எந்தன் தெய்வம்! - 10

''பொதுவா பிரதோஷத்தின்போது, பூஜையெல்லாம் முடிஞ்சதும் பிரசாதத்தை தொன்னைல தர்றதைத்தான் பார்த்திருக்கோம். ஆனா இங்கே, சுந்தரர் பசின்னு சொல்லி, சிவபெருமானே யாசகம் கேட்டு, உணவு கொடுத்து, அவரே பரிமாறியதாலோ என்னவோ... இங்கே பக்தர்களை உட்காரச் சொல்லி, இலை போட்டுப் பரிமாறுறாங்க போல! பார்க்கவே மனசுக்கு திருப்தியா இருந்துச்சு. எங்களுக்கு சிவபெருமான் எத்தனையோ கொடுத்திருக்கார். நாம இந்த அன்னதானத்தை முடியும்போதெல்லாம் செய்யணும்னு சங்கல்பம் எடுத்துக்கிட்டோம்'' என்கிறார் கண்ணன்.

இந்த உலகில், எது கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்று கேட்பதுதான் மனித மனம். உடை கிடைத்தாலும், நகை கிடைத்தாலும் மனம் திருப்தியுறாமல் இன்னும் வேண்டுமே என்று கேட்பவர்கள்தான் அதிகம்! ஆனால், 'போதும். இனி, வேண்டாம்!’ என்று மனநிறைவோடு சொல்கிற ஒரே விஷயம்... உணவுதான்!  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து! வயிறு குளிர்ந்து, நிறைந்து போதும் என்று சொல்லக்கூடிய உணவை, இங்கே பிரதோஷ வைபவத்தின்போது, அன்னதானமாக வழங்க வழங்க... நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும். இன்னும் இன்னும் வளமாகும்.

கச்சபம் என்றால் ஆமை. இங்கே ஸ்வாமிக்கு கச்சபேஸ்வரர் என்கிற திருநாமம். சென்னை, ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில் உள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீகமடேஸ்வரர் என்று திருநாமம். கமடம் என்றாலும் ஆமைதான்! ஆமையானது தன் ஓட்டுக்குள் தலை முதலான சகலத்தையும் ஒடுக்கி வைத்துக்கொள்வது போல ஆணவம், கர்வம், விடாப்பிடியான குணம், சுயநலமான போக்கு என்கிற அனைத்து கெட்டதுகளையும் ஒடுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். அப்படி ஒடுக்கி வைத்தோ அல்லது முழுவதுமாக சிந்தனையில் இருந்து அறுத்துக்கொண்டோ எவர் ஒருவர் மற்ற அனைவரிடமும் இனிதே பழகுகிறாரோ, அவரைத் தேடி இறைவனே வருவான். அதற்கு அத்தாட்சியாகத் திகழ்கிறது இந்தத் தலம்!

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா, ரா.மூகாம்பிகை