உதவலாம்... வாருங்கள்!
##~## |
ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

சுகப் பிரசவம் நிகழ கர்ப்பிணிப் பெண்கள் சொல்லக்கூடிய ஸ்லோகம் அது. அதில், தனஞ்சயன் என்ற வார்த்தை வரும். 'ஜலத்துடன் பிறந்தான் அன்றே’ என்று முடிவடையும் இந்த ஸ்லோகம் எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது. உங்களில் யாருக்கேனும் அது தெரியும் எனில், எழுதியனுப்ப வேண்டுகிறேன்.
- சுதா நாராயணன், ஸ்ரீரங்கம்


நாங்கள் திருச்சி தென்னூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். எங்களது குலதெய்வம் உத்தண்டிய பெருமாள் என்று எங்கள் தந்தை கூறியதாக ஞாபகம். ஆனால், எங்கள் உறவினர்களில் சிலர் உத்தண்டி என்பது ஊரின் பெயர் என்றும், பெருமாள்தான் குலதெய்வம் என்றும் சொல்கிறார்கள். அதேநேரம், பெரும்பாலான உறவினர்கள், உத்தண்டிய பெருமாள் என்கிற பெயரில் ஸ்வாமி இருப்பதாகவும், அவருக்கான கோயில் மிகச்சிறிய அளவிலேயே இருக்கும் என்றும் கூறுகிறார்கள். அதோடு, அந்த தெய்வத்துக்கான கோயில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். உங்களுக்கு அந்த ஸ்வாமியின் கோயில் பற்றித் தெரியும் எனில், எனக்கு விரிவான தகவல்களைத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
- ஜி.வேணுகோபால், சென்னை-53

ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகளால் இயற்றப்பட்ட காசி துண்டி விநாயகர் பதிகம் எனக்குத் தேவைப்படுகிறது. உங்களிடம் அந்தப் பதிகம் இருந்தால், எனக்கு அதன் நகல் பிரதியை அனுப்பிவைக்கவும்.
- எஸ்.சந்திரமௌலி, சென்னை-61


ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர், நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள், மாணிக்சந்த் மஹராஜ் சுவாமிகள், அக்கல்கோட் மஹராஜ் சுவாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகளுக்குச் சென்று தரிசிக்க ஆசைப்படுகிறேன். மேற்கண்ட சுவாமிகளின் ஜீவசமாதிகள் எங்கே அமைந்துள்ளன, அங்கே எப்படிச் செல்வது என்கிற விவரங்களை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
- சித்ரா, சென்னை-87

ஆலய வழிபாட்டு முறைகள் பற்றித் தெளிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதோடு, எங்கள் மேற்பார்வையில் உள்ள கோயிலில் பூஜைகள் முறைப்படி நடைபெறுவதற்கு வசதியாக 'மகோத்ஸவ விளக்கம்’ என்னும் நூலை வாங்கிப் படிக்க விரும்புகிறேன். இந்த நூல் எங்கே கிடைக்கும்?
- என்.சண்முகநாதன், சென்னை-92

'உந்தனையே நம்பி வந்தேன் - உத்தம கந்தா
வேறு துணை யாருமில்லை வேலவா கந்தா...' என்று துவங்கும் பாடல் எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது. இந்தப் பாடல் உங்களிடம் இருப்பின், எனக்கு எழுதியனுப்ப வேண்டுகிறேன்.
- ஜி.சங்கர், திருவனந்தபுரம்


தமிழ்நாட்டில் வாழ்ந்த பெண் சித்தர்கள், பெண் மகான்கள் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவர்கள் வாழ்ந்து சமாதி ஆன இடங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரியும் எனில், தெரியப்படுத்துங்களேன்.
- அ.வசந்தகுமார், டி.வாடிப்பட்டி

பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயரைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவரது சரித்திரம், அவருக்குரிய ஸ்தோத்திரங்கள், அவர் எழுந்தருளியுள்ள ஆலயங்கள், அவர் இயற்றிய தத்த கீதை, யது கீதை, அவதூத கீதை, ஜீவன் முக்தி கீதை ஆகிய நூல்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. இவை அத்தனையும் எங்கே கிடைக்கும்? உங்களிடம் இவற்றில் ஏதேனும் இருந்தாலும் அனுப்பிவைத்து உதவவும்.
- ஜ.சத்யநாராயணன், பண்ருட்டி

1898-ல் ராமநாதபுரம் பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் தொகுத்து வெளியிட்ட 'பன்னூற்றிரட்டு’ நூலைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். அந்த நூல் இப்போதும் விற்பனையில் இருக்கிறதா? உங்களிடம் அந்த நூல் கைவசம் இருப்பின், அதனை நகலெடுத்து எனக்கு அனுப்பிவைத்து உதவ இயலுமா?
- ஏ.துரைசாமி, சேலம்

'ஊரில் எல்லோருக்கும் ஒருமுகம், உமக்காறு முகமேனோ?’ என்று துவங்கும் பாடல் எனக்குத் தேவைப்படுகிறது. இதை இயற்றியவர் யார்? கேசட் அல்லது சி.டி-யாக இது வெளிவந்துள்ளதா?
- ரா.வேங்கடசுப்ரமணியன், கோவை

'திருக்கயிலாய மலையைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதுதொடர்பான புத்தகம் எனக்குத் தேவை’ என்று, 9.7.13 இதழில் கோவை வாசகி பிரேமா ராமராஜ் கேட்டிருந்தார்.
'பாரத தேசமே ஒரு புண்ணிய பூமிதான். இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலையை 'மேரு மலை’ என்பார்கள். அங்கே உள்ள பெரிய பெரிய மலைகள் எல்லாவற்றையும்விட உயர்ந்தது திருக்கயிலாய மலையே! கயிலைநாதன் என்றாலே நம் கண்முன் தோன்றுபவர் சிவபெருமான்தான். நம் அனைவரையும் வாழ்வாங்கு வாழச்செய்து வருபவரும் இந்தக் கயிலைநாதனே! இறைவனான சிவபெருமானை மனமுருகி திருமுறைப் பாடல்களைப் பாடி வழிபடுவதால் தீவினைகள் தீரும் என்பது ஐதீகம். அவ்வாறு சிவபெருமானை வழிபடாமல் கிரகங்களை மட்டும் வழிபட்டால், அந்தக் கிரகங்களே அதை ஏற்காது. ஆக, சர்வ வல்லமையுள்ள ஏகநாயகனான சிவபெருமானிடம் அளவுகடந்த பக்தியும், மனோதைரியமும் இருந்தால் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கயிலை தரிசனம் கிடைக்கும். அந்த வகையில்தான் எனக்கும் அந்த தரிசனம் கிட்டியது...' என்று கூறியுள்ள, ராஜபாளையம் வாசகி கே.இராமதிலகம், தான் திருக்கயிலாயம் சென்று வந்த அனுபவங்கள் இடம்பெற்ற புத்தகத்தை அனுப்பியிருக்கிறார். இது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.