தொடர்கள்
Published:Updated:

‘நின்னுக்கிட்டு பாடம் எடுக்கமுடியலை!’

மதுரை முகாமில் வாசகி வருத்தம்

##~##

ல்லிகைக்குப் பெயர் பெற்ற மதுரை மாநகரில், சிறப்புற நடைபெற்றது மனவளக்கலைப் பயிற்சி முகாம். மதுரையில், சொக்கிக்குளம் பகுதியில் உள்ள அறிவுத் திருக்கோயிலில், கடந்த 21.7.13 அன்று காலையில் துவங்கி மதியம் வரை சக்திவிகடன் வாசகர்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம் நடந்தது.

சக்திவிகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து வழங்கும் இந்த முகாமில், ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

''எதுக்கு எடுத்தாலும் எனக்குச் சட்டுனு கோபம் வந்துடும். நண்பர்கள் எல்லாரும், 'இந்த முன்கோபத்துலேருந்தும் வீண் டென்ஷனிலேருந்தும் நீ விடுபடணும்னா, மனவளக்கலை யோகா பயிற்சியைக் கத்துக்கோ’ன்னு சொன்னாங்க. எனக்கும் கோபத்தை ஒழிச்சாதான் ரிலாக்ஸா இருக்கமுடியும்னு புரிஞ்சுது. இப்ப இந்தப் பயிற்சியை அரை நாள் செய்யும்போதே, ஒரு மாற்றத்தையும் அமைதியையும் நல்லாவே உணரமுடியுது. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து கத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!'' என்று அமைதியும் ஆனந்தமுமாகச் சொன்னார் வாசகர் சண்முகபாண்டியன்.

''மதுரைல இருக்கிற ஸ்கூலுக்கு, சோழவந்தான்லேருந்து தினமும் பஸ்ல வரேன். கூட்ட நெரிசல், பஸ் பயணம்னு அதுவே பாதி உடல் அயர்ச்சியைக் கொடுத்துடுது. சில சமயங்கள்ல மதியத்துக்கு மேல உடம்பு அசதி, முதுகு வலின்னு வந்து இம்சை பண்றதால, பசங்களுக்கு நின்னுக்கிட்டும் நடந்துக்கிட்டும் கிளாஸ் எடுக்க முடியலை. மனவளக்கலை பயிற்சி எடுத்துக்கிட்டா, முதுகு வலியும் உடல் அசதியும் காணாம போயிடும்னு என்னோடு வேலை பார்க்கிற டீச்சர் ஒருத்தங்க சொன்னாங்க. இதோ, பயிற்சியையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பார்த்தா, அப்படியரு விடுதலை, வலியிலேருந்து..!'' என்று விழிகள் விரிய, ஆச்சரியத்துடன் சொல்கிறார் வாசகி மீனாட்சி கண்ணபிரான்.

‘நின்னுக்கிட்டு பாடம் எடுக்கமுடியலை!’

''எனக்கு ஷ§கர் இருக்கு. அதனால அடிக்கடி சின்னச் சின்னதா சில தொந்தரவுகள் வரும். 'வாழ்க வளமுடன்’ தொடரை சக்திவிகடன்ல படிச்சப்ப, சர்க்கரை நோயை இந்தப் பயிற்சி கட்டுப்படுத்தும்னு அதுல எழுதியிருந்தது மனசுல பதிஞ்சிருச்சு. இப்ப மதுரைல, நாங்க இருக்கிற ஏரியாவுக்குப் பக்கத்துலயே யோகா இலவச முகாம் நடக்குதுன்னு தெரிஞ்சதும், ரொம்பச் சந்தோஷமா பதிவு பண்ணிக் கலந்துக்கிட்டேன். இந்தப் பயிற்சியை இனிமேல் தினமும் செய்யப் போறேன். மனவளக்கலையின் மொத்தப் பயிற்சியையும் கத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்!'' என்று சொல்கிறார், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி லட்சுமி நரசிம்மன்.

சர்க்கரையின் தொந்தரவில் இருந்து விடுபடுவது இனிப்பான சேதிதானே!

- வி.ராம்ஜி

படங்கள்: பா.காளிமுத்து