தொடர்கள்
Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

பிரகஸ்பதி, ஓவியம்: முத்து

கலகல கடைசிப் பக்கம்

றுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் நந்தனார். இந்த அடியாருக்குச் சிதம்பரம் சென்று ஸ்ரீஅம்பலவாணனைத் தரிசிக்க ஆசை. ஆனால், சூழலும் பொருளாதாரமும் அதற்குத் தடையாக இருந்தன. எனவே, ஒவ்வொரு நாளும் 'இன்று இயலாது. நாளைக்கு எப்படியாவது தில்லைக்குப் பயணப்பட வேண்டியதுதான்’ என்று சொல்லிக்கொள்வார். தினம் தினம் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்ததால், அவருக்குத் 'திருநாளைப்போவார்’ என்று திருநாமம் வாய்த்தது.

நாட்களைத் தள்ளிப்போட்டாலும், 'நாதனைக் காணவேண்டும்’ எனும் வைராக்கியத்தைத் தள்ளிவைக்காமல் ஆழ்மனத்தில் பதித்துக்கொண்டதால், ஒருநாள் தில்லைக்குச் செல்லும் பாக்கியமும், அங்கே இறைவனுடன் ஐக்கியமாகும் பேறும் அவருக்குக் கிடைத்தது.

ஆனால், நம்மிடையே சில 'திருநாளைத் திருவாளர்’கள் உண்டு. எந்தவொரு விஷயமாக இருந்தாலும், 'நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’ என்பதே அவர்களது தாரக மந்திரமாக இருக்கும். இந்த மாதிரியான தவறான போக்குக்கு அவர்களின் சோம்பலே

##~##
காரணம். இதை விட்டொழிக்க வேண்டும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
- எனப் போதிக்கிறார் வள்ளுவர். 'ஓரடியால் உலகை அளந்த இறைவன் தாவிய உலகப் பரப்பு முழுவதையும் சோம்பல் இல்லாத அரசன் தன் குடையின் கீழ் கொண்டு வந்துவிட முடியும்’ என்கிறார் அவர்.

சிலர் தங்களின் சோம்பேறித்தனத்துக்குப் பொறுமை, நிதானம் என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டிக்கொள்வார்கள். பொறுமையும் நிதானமும் அவசியம்தான். ஆனால், சில காரியங்களுக்கு வேகமும் அவசரமும் அத்தியாவசியம் என்பதை உணரவேண்டும்.

பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்த அன்னை வேடிக்கையான கதை ஒன்றை மேற்கோள் காட்டுவார்.

அரபு நாட்டில் அடிமை ஒருவன் இருந்தான். ஒருநாள் அதிகாலையில் அவனது எஜமானி அடுப்பு மூட்டுவதற்காக, பக்கத்து வீட்டுக்குச் சென்று 'தணல்’ வாங்கி வரும்படி அவனைப் பணித்தாள்.

அடிமையும் தணல் வாங்கச் சென்றான். அப்போது, வீதியில் நாடோடிக் கும்பல் ஒன்று செல்வதைக் கவனித்தான். தானும் ஒரு நாடோடியாக இருந்தால், இவர்களைப் போன்று சுதந்திரமாக வாழலாமே என்று நினைத்தவன், அவர்களுடன் கலந்துவிட்டான்.  

ஒரு வருடம் கழிந்தது. சில நாட்களுக்கு உணவு, பல நாட்கள் பட்டினி என்று நகர்ந்த நாடோடி வாழ்க்கை அவனுக்கு ஒரு கட்டத்தில் அலுத்துவிட்டது. 'எவ்வளவு வேலை தந்தாலும், எவ்வளவு திட்டு திட்டினாலும் என் எஜமானி ஒருபோதும் என்னைப் பட்டினி போட்டதில்லையே! பேசாமல் அங்கேயே சென்றுவிடலாம்’ என்று எண்ணியவன், நாடோடிக் கும்பலிடம் இருந்து பிரிந்து, ஒரு வழியாக ஊருக்கு வந்து சேர்ந்தான். ஊருக்குள் நுழையும்போதுதான், எஜமானி தனக்கு இட்ட கட்டளை ஞாபகத்துக்கு வந்தது. அவசர அவசரமாக பக்கத்து வீட்டுக்குச் சென்று, ஒரு தட்டில் தணல் வாங்கிக் கொண்டான். எஜமானியின் வீட்டுக்கு வேகமாக வரும் வழியில், கால் தடுக்கி விழுந்துவிட்டான். கையிலிருந்த தணல் மண்ணில் விழுந்து அணைந்துபோனது. உடனே, அவன் சலித்துக்கொண்டான்...

''சே..! 'அவசரம், வேகமா வா’ன்னு எஜமானியம்மா அடிக்கடி என்னை விரட்டுறாங்களே... அவசரப்படுவது எவ்வளவு தொல்லைன்னு அவங்களுக்கு எப்பத்தான் புரியப்போகுதோ?!''