சிவமயம்! வி.ராம்ஜி
##~## |
வரத்தைத் தருவதற்கு எல்லாத் தெய்வங்களும் எப்போதும் தயாராகத்தான் இருக்கின்றன. அந்த வரத்தைக் கேட்பதற்கு நாம்தான் தயாராக இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், என்ன வரம் கேட்பது என்றே நமக்குத் தெரியவில்லை; எது வரம் என்பதும் புரிவதில்லை. அப்படிச் சரியாகப் புரிந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறவர்களே பாக்கியசாலிகள்!
''எனக்கு இதைக் கொடு, அதைக் கொடுன்னு எதையும் நான் கேக்கறது இல்லை. ஆனா, சின்னதா மனசுல ஒரு சோகம்னாலும் இங்கே ஓடோடி வந்துடுவேன். ஒவ்வொரு சந்நிதியா போய், கண்மூடி நிப்பேன். எல்லாம் முடிச்சுட்டு வெளியே வரும்போது, அப்படியரு நிம்மதி மனசுக்குள் பரவியிருக்கும். இதுதான் இந்தத் திருக்கச்சூர் கோயிலோட மிகப் பெரிய விசேஷம்!'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ருத்ரகோட்டி. ஆட்டோ டிரைவராகப் பணிபுரிகிறார் இவர்.

சென்னைக்கு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்தும், மறைமலைநகரில் இருந்தும் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கச்சூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருத்தலம், இப்படித்தான் ஒவ்வொரு பக்தருக்குள்ளேயும் ஊடுருவியிருக்கிறது. இங்கே உள்ள மூலவர் ஸ்ரீகச்சபேஸ்வரர் மிகுந்த வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமைகளிலும், மாதந்தோறும் வருகிற சிவராத்திரி நாளிலும் எங்கிருந்தெல்லாமோ இருந்து வந்து தரிசித்துச் செல்கிறார்கள், பக்தர்கள்.
''மறைமலைநகர்லதான் என் வீடு இருக்கு. சின்ன வயசுலேருந்தே கோயில் திருவிழா, விசேஷ நாள்னு இந்தக் கோயிலுக்கு வர்றது என் வழக்கம். கோயில்ல ஒவ்வொரு இடமும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த பிரமாண்டமான பிராகாரமும் மண்டபங்களும் பார்க்கவே அவ்ளோ அழகு! குறிப்பா, இந்தக் கோயில்ல இருக்கிற அம்பாளோட பேர், ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாள். மைவிழி அம்பாள்னும் சொல்லுவாங்க.

ஆட்டோ ஓட்டுற பொழைப்பு எனக்கு. உடம்பு ஹீட்டாயிடும். கண்ணெல்லாம் சூட்டுல பொங்கி, எரிச்சலை ஏற்படுத்தும். இங்கே வந்து அம்பாளைத் தரிசனம் பண்ணினா போதும்... உடம்பும் மனசும் அப்படியே குளிர்ந்து போயிடும். கண்ல தேங்கி இருந்த மொத்த வெப்பமும் காணாம போயிடும்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் ருத்ரகோட்டி.
''ஆமாம்... கண்ணுல எதுனா பிரச்னை, பார்வைல கோளாறு, மங்கலான பார்வைனு இருந்தா, இங்கே வந்து அம்பாளுக்கு வேண்டிக்கிட்டு, கண்மலர் சார்த்தினா போதும்... உடனே நம்மளைக் காபந்து பண்ணி, நம் கண்ணுல ஒளியைத் தந்துடுவா அம்பிகை!'' என்கிறார் முரளி குருக்கள்.
ஆனால் என்ன... கோயில் வாசலில் பூஜைக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் இல்லை. கண்மலர் முதலானவற்றை ஊரில் இருந்தே வாங்கி வந்து, அம்பாளுக்குக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர் பக்தர்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகிற பெண்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளை வழிபட்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது இங்கே ஐதீகம்.
''சுந்தரர் பாடிய திருத்தலங்களில், திருக்கச்சூர் தலமும் ரொம்ப விசேஷமானது! செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் இத்தனை பிரமாண்டமான கோயில் வேறெங்கும் இல்லை. அவ்வளவு ஏன்... சென்னையிலும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மாதிரியான கோயில்களைத் தவிர்த்து, வேறு எந்தக் கோயிலும் இத்தனை பெரியதாக இல்லை. கோயிலும், அதன் திருக்குளமும், கோயிலுக்கு முன்புறத்தில் இருக்கிற மண்டபமும், தெருமுனையில் உள்ள தேர்மண்டபமும் கோயிலின் பிரமாண்டத்தையும் மகிமையையும் சொல்கின்றன.
ஒருகாலத்தில், விழாக்களும் விசேஷமுமாகக் கொண்டாடப்பட்ட கோயிலாக இது இருந்திருக்கிறது. பிறக்க முக்தி ஸ்தலம் என்று எல்லோராலும் போற்றப்படுகிற திருவாரூர் தலம் போல, இந்தத் தலத்தில் பிறந்தாலும் வாழ்ந்தாலும், வந்து வணங்கிச் சென்றாலும் முக்தியைத் தரும் திருத்தலம் என்பதாகப் போற்றிச் சொல்கின்றனர் பக்தர்கள்.

''திருவாரூர் கோயில்ல இருக்கிற ஸ்வாமி ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி. இங்கேயும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி, உத்ஸவரா தரிசனம் தர்றார். அதேபோல, ஆரூரில் இருந்த சுந்தரர் பெருமான் இங்கே வந்து பதிகம் பாடிய வேளையில், பகவானே அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். தொண்டை நாட்டில், தேவாரப் பதிகங்கள் பாடிய 32 தலங்களில், இதோ இந்தத் திருக்கச்சூர் 26-வது தலமாக விளங்குகிறது. திருக்கச்சூர் ஆலக்கோயில் என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கு, வாழ்வில் ஒருமுறையேனும் வந்து தரிசித்தால் போதும்... அவர்களுக்கு ஞானத்தையும் முக்தியையும் தந்தருள்வார் சிவபெருமான்!'' என்று நம்பிக்கை மிளிரத் தெரிவித்தார் முரளி குருக்கள்.
மெய்ப்பசியால் மிகவருந்தி
இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங்
கியானுமக்குக் கொணர்கிறேன்
அப்புறம் நீர் அகலாதே
சிறிதுபொழு தமரும் எனச்
செப்பியவர் திருக்கச்சூர்
மனைதோறுஞ் சென்றிரப்பர்!
- என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிறவாய் இறவாய் மூவாய் பெற்றம்
ஏறிப் பேய் சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும்
இடமாக் கொண்டு நடம் ஆடி
ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக்கோயில் அம்மானே!

அதாவது, 'பிறப்பு- இறப்பு அற்றவனே! எதையும் விரும்பாதவனே! மூப்பில்லாதவனே! ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவனே! நடனம் ஆடுபவனே! உடைந்த மண்டையோட்டை ஏந்தி, வீடுதோறும் சென்று நீ பிச்சையெடுப்பதைக் கண்டால், உன் அடியவர்கள் மனமுருகிக் கண்ணீர்விடுவார்களே..! திருக்கச்சூர் வடக்கில் ஆலக்கோயிலில் உறைகின்ற பெருமானே... இதையெல்லாம் மொத்தமாக ஒழித்துவிடு!’ என்று மனமுருகிப் பாடுகிறார் சுந்தரர் பெருமான். இவருக்கு இங்கே தனிச்சந்நிதி உள்ளது.
அந்தச் சந்நிதியில் ஒரு ஐந்து நிமிடம் கண்மூடி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் வந்திருப்பதை, தன் தோழன் சிவனாரிடம் சொல்லி, அருளச் செய்வார் சுந்தரமூர்த்தி நாயனார்.
கோயிலின் விக்கிரகத் திருமேனியை இறைவனாகவும் இறைவியாகவும் பார்ப்பதற்கு, மிகுந்த பக்தி அவசியம். அந்த இறைவனை, தென்னாடுடைய சிவபெருமானை, இனிய நண்பனாக, உற்ற தோழனாக நினைத்து வேண்டுவதற்கு மிகப்பெரிய ஞானமும் பேரன்பும் வேண்டும்.
அப்பேர்ப்பட்ட ஞானத்தையும் யோகத்தையும் பேரன்பையும் பெருங் கருணையையும் தருகிற திருக்கச்சூர் தலத்துக்கு, சோமவார நாளில் (திங்கட்கிழமை) ஒருமுறை, ஒரேயரு முறை வந்து சிவ-சக்தி தரிசனம் செய்து பாருங்கள்; சிந்தையில் தெளிவும், வாழ்வில் ஏற்றமும் பெறுவீர்கள் என்பது சத்தியம்!
- வேண்டுவோம்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா, ரா.மூகாம்பிகை