விருந்தும் மருந்தும்!பிரகஸ்பதி, ஓவியம்: முத்து
##~## |
'விருந்தும் மருந்தும் மூணு நாளைக்கு’ன்னு பெரியவங்க சொல்லி வெச்சிருக்காங்க. ஏன் தெரியுமா?
கிராமத்துல புதுமாப்பிள்ளை ஒருத்தன் இருந்தான். கல்யாணமாகி மூணு மாசம் ஆச்சு. அம்மா வீட்டுக்குப் போகணும்னு சொன்னாள் பொஞ்சாதி. இவன் தன்னோட அம்மாகிட்ட போயி, ''யம்மோவ், நான் மாமியா வீட்டுக்குப் போறேன். எப்ப திரும்பட்டும்?'னு கேட்டான்.
''சோத்துல முகம் தெரிஞ்சதும் புறப்பட்டு வந்துடு''ன்னு சூதானமா சொல்லிட்டா அம்மாக்காரி. இவனும் பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு பதவிசா போய் இறங்கிட்டான், மாமியார் வீட்டுக்கு.
அங்கே இவனுக்கு ராஜ உபசாரம். ஏழு வகை கறி சமைத்து, வடை பாயசத்தோட தலைவாழை இலை விருந்து போட்டாள் மாமியார்க்காரி. இவனுக்குச் சந்தோஷம் தாளலை. ரெண்டு நாள் கழிஞ்சுது. விருந்து சாப்பாடு மாறி, சாம்பாரும் வாழைக்காய்ப் பொரியலும் கிடைச்சுது. 'ஆனாலும் பரவாயில்ல... மாமியார் கைப்பக்குவம் ருசியாத்தான் இருக்கு’ன்னு ரசிச்சு சாப்பிட்டான்.

இன்னும் ஒரு வாரம் போச்சு. வெறும் ரசமும் சோறும்தான். இதாவது பரவாயில்ல; அடுத்த ரெண்டு நாள் கழிச்சு மாமியார்க்காரி சொன்னாள்... 'மருமகனே! இன்னிக்கு வயல்ல வேலை இருக்கு. நேத்து வெச்ச சோறும் கொஞ்சம் மிஞ்சிடிச்சு. எல்லாருமா சேர்ந்து பழையது சாப்பிடலாமா?’ன்னு கேட்டு, அவன் பதிலை எதிர்பார்க்காமலேயே, தண்ணியும் சோறுமா கொண்டுவந்து வெச்சா. இவன் சாப்பிட தலையைக் குனிஞ்சான். சட்டியில இருந்த நீச்சத்தண்ணில இவன் முகம் தெரிஞ்சுது.
சட்டுன்னு அம்மாக்காரி சொன்னது புத்தில உறைச்சது. இதுக்கு மேல இங்க இருந்தா மரியாதை கிடையாதுன்னு உடனே ஊருக்குக் கிளம்பிட்டான்.
மாமியார் வீடு மட்டுமில்லீங்க, எந்த உறவுக்காரங்க வீடா இருந்தாலும், மனசுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடாக இருந்தாலும் சரி... சோறு கண்ட இடமே சொர்க்கம்னு அங்கேயே ரொம்ப நாள் டேரா போட்டுடக்கூடாது. அப்படித் தங்கினால், அவர்களை அறியாமலே அவர்களுக்குள் நம் மீதான சலிப்பு ஏற்பட நாமே காரணமாகிவிடுவோம்!
விருந்து சரி... மருந்து?
வயிற்றுவலியோ, காய்ச்சலோ எதுவாக இருந்தாலும், நாமாக மருந்து- மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படியே மாத்திரைகள் சாப்பிட்டாலும், கைவைத்தியம் செய்துகொண்டாலும்... மூன்று நாட்களில் குணமாகவில்லை என்றால், மருத்துவரிடம் சென்று காண்பிப்பதுதான் நல்லது. அதனால்தான் மருந்துக்கும் மூணு நாள் என்று டைம்!
கிராமத்து ஆசாமி ஒருத்தன், கொஞ்சம் எசகுபிசகான பேர்வழி! ஒருநாள் அவனுக்குக் கடுமையான வயிற்றுவலி. வழக்கமாக அவன் செல்லும் கிளினிக் விடுமுறை. ஆகவே, அந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் மருத்துவரிடம் சென்றாகவேண்டிய கட்டாயம்.
இவனோ தொட்டதுக்கெல்லாம் சந்தேகப்படுற ஆசாமி. எனவே, புதிதாக வந்திருக்கும் அந்த டாக்டர் அசலா, போலியா என்று சந்தேகம் வந்துவிட்டது. இருந்தாலும் வேறு வழியில்லை. ஒரு முடிவுக்கு வந்தான். வழக்கமான டாக்டர் வயிற்றுவலிக்கு ரோஸ் கலர் மாத்திரை கொடுப்பார். இவரும் அப்படி தந்தால் அசல். இல்லையானால் போலி. அவர் தரும் மாத்திரைகளைப் புறக்கணித்து விடலாம் என்ற முடிவுடன் சென்றான்.
நல்லவேளையாக இவரும் ரோஸ் கலர் மாத்திரையே கொடுத்தார். விடைபெறும்போது இவன் சொன்னான்... ''மன்னிச்சுக்குங்க டாக்டர்! நீங்கள் போலி டாக்டரோன்னு சந்தேகப்பட்டுட்டேன்.''
டாக்டர் சொன்னார்... ''நீங்களும் என்னை மன்னிக்கணும். பேஷன்ட்ங்கிற பேர்ல அதிகாரிங்க வந்து சோதனை பண்றதா நண்பன் ஒருத்தன் ஃபோன்ல எச்சரிச்சான். நீங்களும் அவங்கள்ல ஒருத்தரா இருப்பீங்களோன்னு நானும் சந்தேகப்பட்டுட்டேன். என் நல்ல நேரம்... நீங்க நெஜம்மாவே பேஷன்ட்டுதான்!''