Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 12

சிவமயம்! வி.ராம்ஜி

இதோ எந்தன் தெய்வம்! - 12

சிவமயம்! வி.ராம்ஜி

Published:Updated:
##~##

''முதல்ல சக்திவிகடன் வாசகர்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும். சுந்தரர் பாடிய திருக்கச்சூர் கோயில்ல, நினைவு தெரிஞ்ச நாளா, நான் சின்னப் பையனா இருக்கும்போதிலிருந்தே அப்பாவோடு சேர்ந்து பூஜைகள் பண்ணியிருக்கேன். எனக்கு இப்ப 50 வயசு. இத்தனை வருஷ அனுபவத்துல, இப்படியரு தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டத்தை, கடந்த பிரதோஷத்தின்போதுதான் பார்த்தேன்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார், திருக்கச்சூர் கோயிலின் முரளி குருக்கள்.

சென்னை- செங்கல்பட்டு சாலையில், மறைமலைநகர் மற்றும் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கச்சூர் ஸ்ரீதியாகராஜர் கோயில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சோமவாரம்னு சொல்லப்படுற திங்கட்கிழமை அன்னிக்கோ, சனிக்கிழமையிலோ வர்ற பிரதோஷம்தான் கொஞ்சம் கூட்டமா, சிறப்பா வழிபாடுகள் நடக்கும். ஞாயித்துக் கிழமைகள்ல பிரதோஷம் வந்தா, அப்படியண்ணும் பெரிய கூட்டமெல்லாம் வராது. ஓரளவுக்குதான் ஜனங்க வருவாங்க.

மழைல நனைஞ்சதால அன்னிக்குக் கொஞ்சம் தலைவலி. சாயந்திரம் நடை திறக்கற நேரம் வந்துருச்சேன்னு சட்டுபுட்டுனு கிளம்பி, கோயிலுக்குப் போனேன். பார்த்தா... ஒரு முப்பது நாப்பது காரும் வேனுமா வாகனங்கள் நிக்கறது. சரி... அக்கம்பக்கத்துல இருக்கிற வீட்டுல எதுனா விசேஷம் போலன்னு நினைச்சுக்கிட்டே, கோயில் கதவைத் திறந்தேன். இதுநாள் வரைக்கும் கதவு திறந்து, நான் மட்டும்தான் உள்ளே போவேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பக்தர்கள் வருவாங்க. ஆனா, இந்த முறை கதவு திறந்ததும் தபதபன்னு கார்லேருந்தும் வேன்லேருந்துமா கூட்டம் முண்டியடிச்சுக்கிட்டு, என்னைக் கடந்து உள்ளே போனப்ப, ஒரு நிமிஷம் மிரண்டு போயி நின்னுட்டேன்!'' என்று சிலிர்ப்பும் பரவசமும் மாறாமல் சொல்கிறார் முரளி குருக்கள்.

இதோ எந்தன் தெய்வம்! - 12

''இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆகணும். அப்பல்லாம் பிரதோஷத்தன்னிக்கி அஞ்சு பத்து பேர்தான் வருவாங்க. இங்கே நந்தி ரொம்பவே அழகா, பிரமாண்டமா இருக்கும். அந்த நந்திக்குப் பாலபிஷேகம் செய்யும் போதெல்லாம், 'நந்திதேவா! உனக்குக் குடம் குடமாப் பாலெடுத்து அபிஷேகம் பண்ற நாள் என்னிக்கு வரப்போகுதோ தெரியலை; சொம்பு சொம்பா எடுத்து பாலபிஷேகம் பண்ற எனக்கு அந்தக் கொடுப்பினை உண்டான்னும் புரியலை. எனக்கு அந்தப் பாக்கியத்தைக் கொடுக்கக்கூடாதா?’ன்னு மானசீகமா வேண்டிக்குவேன்.

ஆனா, இந்த முறை அந்த அதிசயம் நடந்துச்சு! பல வருஷங்களுக்கு முன் நான் ஆசைப்பட்டபடியே, நந்திதேவருக்குக் குடம் குடமா அபிஷேகம் பண்ணினேன். பக்தர்கள் பாக்கெட் பாக்கெட்டா பால் கொண்டு வந்து கொடுத்தாங்க. என் தோள்பட்டை ரெண்டும் வலியெடுத்துப்போகிற அளவுக்குக் குடம் குடமா பாலபிஷேகம் பண்ணினேன். என் இந்த ஜென்மமே பூர்த்தியாயிட்ட மாதிரி ஒரு மனநிறைவு! என் நெடுங்காலக் கனவை, ஆசையை நிறைவேத்தி வைச்சுட்டார் சிவபெருமான்!'' என்று மேற்கொண்டு பேச முடியாமல், நா தழுதழுக்கச் சொன்னவரின் கண்களில் இருந்து கரகரவென வழிகிறது நீர்.

''சென்னை தி.நகர்ல ஆபீஸ் எனக்கு. ஒருமுறை, திருக்கச்சூர் வழியா ஒரகடம் போகவேண்டி வந்தது. அப்போ அந்தக் கோயிலைப் பார்த்தேன். ஊர்ல பாதி அளவு கோயிலும், கோயில்ல பாதி அளவு குளமுமா இருந்ததைப் பார்த்ததும், 'அட... இந்தச் சின்ன ஊர்ல இவ்வளவு பெரிய கோயிலா! இந்தக் கோயில்ல இத்தனைப் பெரிய திருக்குளமா!’னு ஆச்சரியப்பட்டுப் போனேன். கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணினப்ப, இனம் புரியாத நிம்மதி மனசுக்குள் பரவியதை உணர முடிஞ்சுது!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் ரவிசங்கர் எனும் அன்பர்.

இதோ எந்தன் தெய்வம்! - 12

''கோயிலுக்குப் போயிட்டு வந்த நாள்லேருந்து, அந்தக் கோயிலைப் பத்தியே பெருமையா சொல்லிட்டிருந்தார். பிராகாரங்கள், கோயிலோட ஸ்தல புராணம், ஸ்வாமி அம்பாளோட திருமேனின்னு ஒவ்வொண்ணையும் விவரிச்சிட்டே இருந்தார். அந்த வாரமே ஞாயித்துக்கிழமைல, குடும்பத்தோடு மொத்தமா கிளம்பி கோயிலுக்குப் போனோம். கோபுரம் இல்லாத நுழைவாயிலையும், அதுக்கு முன்னால் இருக்கிற சின்ன மண்டபத்தையும் பார்க்கும்போதே உற்சாகமும் சந்தோஷமுமாயிட்டேன்!'' என்று குதூகலக் குரலில் சொல்கிறார் ரவிசங்கரின் மனைவி ஷர்மிளா.

''அப்ப ஆரம்பிச்ச கோயிலுக்கும் எங்களுக்குமான தொடர்பு, இப்பவும் தொடர்ந்துக்கிட்டிருக்கு. இந்த ஜென்மம் இருக்கும்வரைக்கும் இங்கே இந்தக் கோயிலுக்கு வந்துட்டே இருப்போம். எல்லார் வாழ்க்கையிலும் இருக்கிற முக்கியமான கனவும் ஆசையும் சொந்த வீடு வாங்கணும்கறதுதான்! இந்தக் கோயிலுக்கு ஒரு பிரதோஷ தினத்துல வந்தப்ப, 'எங்களுக்கே எங்களுக்குன்னு சொந்தமா ஒரு வீடு வாங்கணும். அதுக்கு நீதான் அருள்புரியணும்’னு மனசார வேண்டிக்கிட்டேன்.

அடுத்த பிரதோஷம் வர்றதுக்குள்ளே, நல்ல இடமா கிடைச்சுது. அப்புறம் அந்த இடத்தை வாங்கித் தனி வீடு கட்டி முடிச்சப்போ, திருக்கச்சூர் சிவபெருமானுக்குத்தான் நன்றி சொன்னோம். இடம் வாங்கறதுலயும் வீடு கட்டறதுலயும் எத்தனையோ பிரச்னைகள் வந்தாலும், அவையெல்லாம் தானாவே விலகி மறைஞ்சதை சிவ கருணைங்கிறதைத் தவிர வேற என்னன்னு சொல்றது!'' என்று கண்களில் நீர் திரையிட, நிறைந்த மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஷர்மிளா.

திருக்கச்சூர் எனும் அற்புதமான திருத்தலத்துக்கு நீங்களும் ஒருமுறை வந்து பாருங்கள். நந்திதேவருக்குப் பாலபிஷேகம் செய்தாலும் சரி, மூலவர் ஸ்ரீகச்சபேஸ்வரருக்கு வில்வம் சார்த்தினாலும் சரி, ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளுக்குப் புடவை சார்த்தி வணங்கினாலும் சரி... சிவ சந்நிதியில் நீங்கள் எதைக் கேட்டு உருகி உருகிப் பிரார்த்தனை செய்தீர்களோ, அதை விரைவிலேயே நிறைவேற்றித் தந்தருள்வார் ஸ்ரீதியாகராஜர்.

''உங்களின் வேண்டுதல்களையெல்லாம் ஒரு போஸ்ட்மேன் போல அம்மையப்பனிடம் சமர்ப்பிக்கும் பணி எனக்கு! அம்பாளும் ஸ்வாமியும் சேர்ந்து என் விருப்பத்தை, என் நீண்ட காலக் கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள் எனும்போது, எங்கிருந்தெல்லாமோ இந்தத் தலத்துக்கு வந்து, உண்மையான பக்தியோடும் நம்பிக்கையோடும் நீங்கள் மனமுருகிப் பிரார்த்தனை செய்வதை அவர்கள் செவிமடுக்காமலா இருப்பார்கள்? அந்த சர்வேஸ்வரன் சர்வ நிச்சயமாக உங்களுக்கு அருள்பாலிப்பார்!'' என்று சொல்லிவிட்டு, பூஜையில் மூழ்கலானார் முரளி குருக்கள்.

- வேண்டுவோம்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா, ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism