Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

‘எள்ளு வேணுமா... எண்ணெய் வேணுமா?’பிரகஸ்பதி, ஓவியம்: முத்து

##~##

'எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்!’ - இப்படி ஒரு சொல்வழக்கு உண்டு. ஒரு விஷயத்தை ஒப்படைத்தால், எந்தப் பிசிறுமின்றி கனகச்சிதமாக அதைச் செய்து முடிக்கும் நபர்களைச் சிலாகித்துச் சொல்லும் வகையில் இந்தச் சொல்வழக்கைக் கையாள்வார்கள்.

உதாரணத்துக்கு... இப்படியான எள்-எண்ணெய் அன்பர்களிடம் 'ஒரு வீடு வாடகைக்கு வேண்டும்’ என உதவி கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஏதேனும் ஒரு காலி வீட்டை நமக்குக் காட்டிச் செல்வதோடு தனது கடமை முடிந்தது என்றில்லாமல், அந்த வீடு எங்கே இருக்கிறது, அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்கள் எப்படியானவர்கள், வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளிக்கூடம், மருத்துவமனை, பஸ் ஸ்டாண்டு, கடை கண்ணிகள் உள்ளதா... என சகலத்தையும் தீர விசாரித்து, முன் பணம் கொடுத்து,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலகல கடைசிப் பக்கம்

சாவியை நம் கையில் ஒப்படைக்கும் வரையிலும் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்டு உதவுவார்கள்.

'ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்’
என்கிறார் வள்ளுவர்.

செய்யும் வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்துவிடும் துடிப்பும் வேகமும் மிகுந்த இப்படியான நண்பர்களைத் துணையாகக் கொண்டால், எதையும் சாதிக்கலாம்.

இன்னும் சில அன்பர்கள் உண்டு. பேச்சில் வேகம் காட்டுவார்கள். உதார் விடுவார்கள். உதவுகிறேன் பேர்வழி என்று வலிய வந்து நம்மை உபத்திரவத்தில் ஆழ்த்திவிடுவார்கள். இவர்களுக்காகவும் ஒரு 'எள்- எண்ணெய்’ கதை உண்டு.

குடியானவன் ஒருவனுக்கு ஒரு பெரிய நிலமும், அதன் மத்தியில் ஒரு சிறு வீடும் இருந்தன. எப்போதும் வீட்டுக்குள் சோம்பிக்கிடந்த அவனை, நிலத்தை உழுது சீர்படுத்திப் பயிரிடுமாறு அறிவுறுத்தினாள் மனைவி. அவனோ உழுவதற்கு ஏர்க்கலப்பை இல்லையென்று சாக்கு சொன்னான். நிலத்தின் மத்தியில் இருக்கும் வேழ மரத்தை வெட்டி, ஏர்க்கலப்பை செய்யும்படி ஆலோசனை சொன்னாள் அவனது இல்லக்கிழத்தி. வேறு வழியின்றிக் கோடரியுடன் புறப்பட்டான்.

அந்த மரத்தில் பேய் ஒன்று வசித்தது. குடியானவன் ஏர்க்கலப்பைக்காக மரத்தை வெட்டினால், தங்குவதற்குத் தனக்கு வேறு இடம் கிடைக்காதே என்று யோசித்த பேய், குடியானவனிடம் ஒரு ஒப்பந்தம் போட்டது. 'ஆறு மாசத்துக்கு ஒருமுறை உனக்கு ஆறு மூட்டை எள் தரேன். மரத்தை வெட்டாம விட்டுடு!’ என்று கேட்டுக்கொண்டது. குடியானவனும் சந்தோஷமாகச் சம்மதித்தான்.

கலகல கடைசிப் பக்கம்

ஒருநாள், அந்த மரத்துக்கு வேறொரு பேய் வந்து சேர்ந்தது. அப்போது பழைய பேய் எள்ளை மூட்டையாகக் கட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு, என்ன ஏதென்று விசாரித்து தெரிந்துகொண்ட அந்தப் புதிய பேய், ''அட அசடே! மனிதர்களைக் கண்டா நாம் பயப்படுவது? நம்மைக் கண்டல்லவா அவங்க மிரளணும்! இரு, நான் போய் அவனை ஒரு வழி பண்ணிட்டு வரேன்'' என்று வீறாப்புடன் புறப்பட்டது.

புதிய பேய் வந்த நேரத்தில், மாட்டுக்குச் சூட்டுக்கோல் வைக்கப் பழுக்கக் காய்ச்சிய கம்பியுடன் குடிசையில் இருந்து வெளிப்பட்டான் குடியானவன். அவ்வளவுதான்! அரண்டுபோனது புதிய பேய். ''யார் நீ? என்ன விஷயம்?'' என்று குடியானவன் கேட்க, புதிய பேய் நடுநடுங்கியபடி பதில் சொல்லியது...

''இல்ல... என் நண்பன் எள்ளா கொடுத்தான். நான் வேணும்னா எண்ணெயாவே கொடுத்தா உங்களுக்கு இன்னும் உதவியா இருக்குமான்னு கேட்டுட்டுப் போக வந்தேன்!''

குடியானவனும் அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டான். அப்புறம் என்ன... பழைய பேயின் பாடு இன்னும் திண்டாட்டமா போச்சு! இனிமே இப்படியான உபத்திரவக்காரர்களைப் பக்கத்திலேயே சேர்க்கக்கூடாதுன்னு தனக்குத்தானே புத்திமதி சொல்லிக்கொண்டது அந்தப் பழைய பேய்.

அந்த புத்திமதி நமக்கும்தான்!