
சிவமயம்! வி.ராம்ஜி
##~## |
மனிதனுக்கு எதிரி என்பவன் எதிரில் இருப்பவன் அல்ல. ஒருவனின் மனத்துக்குள் இருக்கிற கர்வம்தான் அவனுக்குச் சத்ரு. ஒருவனுடைய அத்தனை சத்குணங்களையும் ஒரேயரு கர்வம் எனும் எண்ணமே குலைத்துப் போட்டுவிடும். சபையில், வீட்டில், உறவுகளிடத்தில், தோழமைகள் வட்டாரத்தில் என எல்லா இடங்களிலும் கர்வக் கொப்பளிப்புடன் இருப்பவர்களுக்கு மரியாதை என்பது அறவே இல்லாமல் போய்விடும். அலட்டலும் அகங்காரமும் கொண்டு திரிந்தால், அன்புக்கு ஏங்கித் தவிக்கிற மிகப் பரிதாபமான நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்!
எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் அடக்கத்துடனும் அமைதியுடனும் இருப்பதே உத்தமம். அப்படி இருப்பதே உறவுக்கும் தொடர்புக்கும் பாதுகாப்பு என்பதை தன்னைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்டிருக்கிற ஆமை உணர்த்துகிறது. அதனால்தான் வேதத்துக்கெல்லாம் நாயகனாகத் திகழ்கிற சிவபெருமான், திருக்கச்சூர் திருத்தலத்தில், ஸ்ரீகச்சபேஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கச்சபம் என்றால் ஆமை!
''ஆமாம். எனக்குள்ளே சின்ன வயசுக்கே உண்டான அலட்டலும் 'என்னால முடியாதா? என்னால செய்ய முடிஞ்சதை யாராலயும் செய்யமுடியாது’ங்கற மனோபாவம்லாம் இருந்துச்சு. 'ரொம்ப அலட்டிக்கறான்டா இவன்’ன்னு மத்தவங்க சொன்னாங்களோ இல்லியோ... எனக்கே நல்லாத் தெரிஞ்சுச்சு. இதெல்லாம் ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும்தான்! அதுக்குப் பிறகு என்னை மொத்தமாவே மாத்தித் தெளியவைச்சுட்டார் ஸ்ரீகச்சபேஸ்வரர்'' என்கிறார் சேகர்.
''எந்த ஜென்மத்துல முன்னோர்கள் செஞ்ச புண்ணியமோ... திருக்கச்சூர் கோயிலுக்குப் பக்கத்துலதான் எங்க வீடு. அதுமட்டுமா? பரம்பரை பரம்பரையா கோயில் பாதுகாவலரா இருக்கோம். தாத்தாவும் அப்பாவும் பார்த்த வேலையை, இப்ப நான் பண்ணிக்கிட்டிருக்கேன்.

சின்ன வயசுல நிக்கும்போது, எல்லாமே விளையாட்டா தெரிஞ்சுச்சு. கடவுளுக்குப் பக்கத்துல நிக்கிறதும் அவரோட பல்லக்கைத் தூக்கிட்டு வர்றதும் உற்சாகமா, ஜாலியா இருந்துச்சு. அப்புறம் மெள்ள மெள்ள, ஸ்ரீகச்சபேஸ்வரரும் ஸ்ரீதியாகராஜரும் எனக்குள்ளே ஊடுருவிப் போனப்ப... நான் புதுமனுஷனா பொறந்தேன்னுதான் சொல்லணும்'' என்று நெகிழ்ந்து சொல்கிற சேகர், கேட்டரிங் படித்துவிட்டு, சிங்கபெருமாள்கோவில் பகுதியில், ஹோட்டல் வைத்திருக்கிறார்.
''எப்பவும் ஒரு ஆர்ப்பாட்டம், எதுக்கு எடுத்தாலும் ஒரு பரபரப்புன்னு இருந்துக்கிட்டே இருந்த வாழ்க்கைல, ஒரு நிதானம், ஒரு அமைதி, தெளிவுன்னு வர ஆரம்பிச்சுதுன்னா, அதுக்கு கச்சபேஸ்வரரை மனசார கெட்டியா பிடிச்சுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லணும்!
'சாப்பாடுங்கறது ரொம்ப உசத்தியான விஷயம். காசு கொடுத்தாத்தான் சாப்பாடு தர்றே. ஆனாலும் புண்ணியமான வேலைடா’ன்னு நிறைய பேர் சொன்னாங்க. அதேபோல, ஹோட்டல்லயும் சரி, கல்யாணம், காதுகுத்துன்னு ஆர்டர் கொடுக்கறவங்களுக்கும் சரி... அவங்ககிட்ட பெரிய லாபம் வரணுமேன்னு நினைச்சதே இல்லை. ஒரு அம்பது நூறுன்னு லாபம் குறைஞ்சாலும் பரவாயில்லை. சாப்பாட்டுல ஒரு நிறைவு வரணும். நல்ல பேரெடுத்தாலே போதும்னு நினைச்சு, அப்படியே செஞ்சுக்கிட்டும் வரேன்.
விழா, வீதியுலான்னா உடனே எல்லாத்தையும் விட்டுட்டு, கோயிலுக்கு வந்துருவேன். சிங்கபெருமாள்கோவில்ல, மெயின் ரோட்ல ஹோட்டல் வைச்சிருந்தாலும், இன்னும் நல்லா வளரணும்னு ஆசைப்படுறேன். ஏன்னா... வீட்ல பொண்ணு பாக்கறாங்க. அந்த நேரத்துல, கொஞ்சம் செட்டிலாகற மாதிரி, ஸ்ரீகச்சபேஸ்வரர் தொழிலை உசத்திக் கொடுப்பார்னு நம்பிக்கை இருக்கு'' என கண்களில் ஒளி மிளிரச் சொல்கிறார் சேகர்.
''நானும் இப்படித்தான். டெய்லர் வேலைன்னு ஆரம்பிச்சு என்னன்னமோ பார்த்துட்டேன். எல்லாத்தையும் இழந்துட்டேன். அந்த சமயத்துலதான், நண்பர் மூலமா ரியல் எஸ்டேட் வேலையைப் பாக்க ஆரம்பிச்சேன். ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல பொய்தான் முதல் மூலதனம். ஆனா, அந்த மூலதனம் முதல்ல மட்டுமில்ல, கடைசிவரைக்கும் நம்மகிட்ட இருக்கக் கூடாதுங்கறதுல தெளிவா இருந்தேன்'' என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் குமார். அருகில் உள்ள பேரமனூர் எனும் கிராமத்தில் வசிக்கிறார்.

''காதல், கல்யாணம், குடும்பம், குழந்தைகள்னு ஏதோ எல்லாமே தடதடன்னு முடிஞ்ச மாதிரி ஒருகட்டத்துல தோணுச்சு. நல்லவிதமான வாழ்க்கை அமையணும். எப்பவும் நிம்மதியும் சந்தோஷமுமா இருக்கணும். இன்னும் சொல்லப் போனா, படுத்தா சட்டுன்னு தூங்கிடணும். இப்படிலாம் யோசிச்சப்பதான், திருக்கச்சூர் கோயில் நினைவுக்கு வந்துச்சு. இந்தக் கோயில்ல, எத்தனையோ முறை உழவாரப்பணி செஞ்சிருக்கோம், நாங்க!
அப்படி உழவாரப் பணி செய்யும்போதெல்லாம், 'இவ்ளோ பெரிய கோயிலா இருக்கு. பிராகாரம், தேர்மண்டபம், வசந்த மண்டபம்னு எவ்ளோ அழகா இருக்கு. இந்தக் கோயிலுக்கு கூட்டம் வந்தா நல்லாருக்குமே’ன்னு நினைச்சுக்குவேன். கிட்டத்தட்ட என் வேண்டுதல், இதுவும் நிம்மதியான வாழ்க்கையும்னுதான் இருந்துச்சு. இன்னிக்கி என் ரியல் எஸ்டேட் பிஸினஸ் குறைவில்லாம போயிக்கிட்டிருக்குன்னா அதுக்குக் காரணம் இந்தக் கோயில்தான்! இப்ப, திருக்கச்சூர் கோயிலுக்கு எங்கிருந்தெல்லாமோ கூட்டம் வந்து குவிஞ்சுக்கிட்டே இருக்கு'' என்று பெருமை பொங்கச் சொல்கிற குமார், அமாவாசைதோறும் ஆந்திராவின் காளஹஸ்திக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
''ஆமாம்.... இங்கே மாசம் தவறாம உழவாரப் பணி நடக்கும். ஏராளமான இளைஞர்கள் ஒண்ணாச் சேர்ந்து, கோயிலைச் சுத்தப்படுத்துற பணியில ஆத்மார்த்தமா ஈடுபடுவாங்க. காலைல ஏழு மணிக்கு வந்து, சாயந்திரம் அஞ்சு, ஆறு மணிவரைக்கும் தடதடன்னு சுத்தம் செஞ்சு, கோயிலையே அழகாக்கிருவாங்க. அப்படிப் பாக்கறபோதெல்லாம், 'இன்னிக்கி உழவாரப் பணில ஈடுபட்டவங்க எல்லாரும், அவங்க குடும்பத்தாரோட சகல சௌபாக்கியங்களோட சீரும் சிறப்புமா நல்லாருக்கணும்னு அம்பாள்கிட்டயும் ஸ்வாமிகிட்டயும் வேண்டிக்குவேன். கடவுளுக்கும் பக்தனுக்கும் நடுவுல எனக்கொண்ணும் வேலை இல்லைதான்னாலும்கூட, அந்தப் பக்தர்களுக்கு எதுனா சத்காரியமா பண்ணக்கூடாதான்னு ஒரு வேண்டுதலா, பிரார்த்தனையா, ஒரு விருப்பமா 'ஆப்ளிகேஷன் - அப்ளிகேஷன்’ போடுறதுல தப்பில்லைதானே! உழவாரப் பணியில் ஈடுபட்ட நிறைய இளைஞர்கள் இன்னிக்கி நல்லாருக்கேன்னு சொல்லும்போது, மனசுக்கு நிறைவாவும் நிம்மதியாவும் இருக்கு'' என்கிறார் முரளி குருக்கள்.
சிவனாருக்கு தொண்டு செய்யும் சேகர்களும் குமார்களும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் என்பது உறுதி! திருக்கச்சூர் தலத்துக்கு வந்து, பூஜையில் பங்கு பெறுங்கள். பிராகாரம், மண்டபங்கள், கிணற்றடி எனப் பல இடங்களைச் சுத்தம் செய்யுங்கள். உங்கள் மனம் சுத்தமாகும்; கவலையின்றி ஆனந்தமாக வாழ வைப்பார் ஸ்ரீகச்சபேஸ்வரர்!
- வேண்டுவோம்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா, ரா.மூகாம்பிகை