##~## |
ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
• ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இருபதையும் படித்துவிட்டு, கடைசி நான்கு வரியில் ஒரு சிறிய ஸ்லோகமும் சொல்லிவிட்டு, மங்களம் பாடி முடிப்பது என் வழக்கம். இப்போது, அந்த நான்கு வரி ஸ்லோகம் மறந்துபோய்விட்டது. அது தெரிந்தவர்கள், தயவுசெய்து எழுதியனுப்ப வேண்டுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- சுசிலா உபேந்திரன், கோவை-38

• எங்களது பூர்வீகம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை என்று வீட்டில் சொல்வார்கள். அந்த ஊருக்கு எங்கள் குடும்பத்தாரின் போக்குவரத்து இல்லாததால், எங்களின் குலதெய்வம் எது என்று அறியமுடியாமல் போய்விட்டது. அருள்வாக்கு கேட்ட இடத்தில், எங்களின் குலதெய்வம் அங்காள ஈஸ்வரி என்று பதில் வந்தது. அதனால், திசையன்விளையிலோ அல்லது அதற்குப் பக்கத்திலோ அந்த அம்மனுக்குக் கோயில் இருக்கிறதா என்கிற விவரம் தெரிந்த வாசகர்கள், எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
- எஸ்.எம்.ராமகிருஷ்ணன், தேனி
• ஆடி மாதம் அம்மன் வழிபாடு செய்தால், கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார் என்பது ஐதீகம். அதேபோல், திருமணம் ஆகாத ஆண்களுக்குத் திருமணம் நடைபெற அவர்கள் எந்தத் தெய்வத்தை வழிபட வேண்டும்? அவர்கள் என்ன விரதம் இருந்தால் திருமண பாக்கியம் கைகூடும்? தகவல் தாருங்களேன், வாசகர்களே..!
- பி.பூங்கோதை, திருப்பூர்
• கருட பத்து ஸ்துதி, கமலாம்பிகை ஸ்தோத்திரம், வாஞ்சா கல்பா கணபதி மந்திரம் ஆகியவை எனக்குத் தேவைப்படுகின்றன. இந்த ஸ்தோத்திரங்கள் வைத்திருப்பவர்கள், தயவுசெய்து எனக்கு அவற்றின் நகல் பிரதியை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- எம்.கே.சாமி அப்பன், மதுரை

• 'கோவிந்தன் துணை இருக்க கோள்தான் என்செய்யும்!’ என்கிற தலைப்பில் ஆன்மிகப் புத்தகம் இருப்பதாக அறிகிறேன். அந்தப் புத்தகம் இப்போது எனக்குத் தேவைப்படுகிறது. உங்களில் யாரிடமேனும் அந்தப் புத்தகம் இருந்தால், அதை நகல் எடுத்து அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
- ஆர்.ஆர்.தாமோதர், புதுச்சேரி
• கொங்கண முனிவர் திருப்பதியில் ஜீவசமாதி ஆகியுள்ளதாகக் கூறுவர். அங்கே தரிசிக்கச் செல்லவேண்டும் என்கிற ஆசையில் சென்றேன். ஆனால், அவருடைய சமாதிக்குச் செல்லும் வழியை அறிய முயன்று தளர்ந்துபோனதுதான் மிச்சம். வாசகர்கள் யாரேனும் சரியான தகவல் தெரிவித்தால் மகிழ்வேன்.
- பி.ஜி.சூரியநாராயணன், வாலாஜாபேட்டை
• விடைதாங்கி என்னும் திருத்தலம் பற்றிச் சமீபத்தில் கேள்விப்பட்டேன். இங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீநந்தீஸ்வரர் பற்றி அறிந்து வியந்தேன். இவரைத் தரிசிக்கும் ஆவல் என்னுள் எழுந்துள்ளது. ஆனால், விடைதாங்கிக்கு எப்படிச் செல்வது என்றுதான் தெரியவில்லை. நான் கேள்விப்பட்ட வரையில், திருவண்ணாமலையில் இருந்து ஆரணி செல்லும் வழியிலோ அல்லது செய்யாறு செல்லும் வழியிலோ இந்தத் திருத்தலம் இருப்பதாக அறிகிறேன். ஆனால், சரியான விவரம் கிடைக்கவில்லை. நான் கேள்விப்பட்ட தகவல் உண்மைதானா? விவரம் தெரிந்த வாசகர்களின் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
- சி.டி.சௌந்தரராஜன், செங்கல்பட்டு

'சுகப்பிரசவம் நிகழ கர்ப்பிணிப் பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம் எனக்கு வேண்டும்’ என்று, 20.8.13 இதழில் ஸ்ரீரங்கம் வாசகி சுதா நாராயணன் கேட்டிருந்தார்.
'ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின்
சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே’
மேற்படி மந்திரத்தை அனுப்பியுள்ள சென்னை வாசகி ஜெ.பூர்ணாம்பாள், 'இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும். திருச்சி மலைக்கோட்டையில் கோயில்கொண்டுள்ள, செட்டிப்பெண்ணுக்கு அவளது தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்த ஸ்ரீதாயுமானவரின் அருளால் இது சாத்தியமாகும்!'' என்று தெரிவித்துள்ளார்.
'பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவரது சரித்திரம், ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகம் எங்கே கிடைக்கும்?’ என்று, 20.8.13 இதழில் பண்ருட்டி வாசகர் ஐ.சத்யநாராயணன் கேட்டிருந்தார்.
'கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பற்காக, மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து ஆச்சார்ய வடிவில் வந்தவரே ஸ்ரீதத்தாத்ரேயர். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும்

அந்த பரப்பிரம்ம ஸ்வரூபமே! சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே! இந்தக் கருத்தைச் சொல்ல வந்தவரே ஸ்ரீதத்தாத்ரேயர். மற்ற எல்லா அவதாரத்துக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால், இந்த அவதாரத்துக்கு முடிவு கிடையாது. மார்க்கண்டேயரைப்போல, ஹனுமனைப்போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி! அத்ரி மகரிஷி- அனுசூயை தம்பதியர் புத்திர பாக்கியம் வேண்டித் தவம் இருக்க... அவர்கள் முன் மும்மூர்த்திகளும் தோன்றி, அவர்களுக்கு மகனாக அவதரிப்பதாக வரம் தந்தனர். அந்த வரத்தின்படி நிகழ்ந்த அவதாரம்தான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். மும்மூர்த்திகளும் தாமே வந்து இந்தத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்ததால் தத்தாத்ரேயர் எனும் திருநாமம் அமைந்தது. இவர் அவதரித்தது மார்கழி மாதம், பௌர்ணமி மிருகசீரிட நட்சத்திரம்...' என்று கூறியுள்ள திருச்சி வாசகர் சரோஜா சுதர்சன்ராம், ஸ்ரீதத்தாத்ரேயர் தொடர்பான மேலும் பல தகவல்களையும் எழுதி அனுப்பியிருக்கிறார். இது சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
இதேபோல், 'புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அதிஷ்டானத்தில் ஸ்ரீதத்தாத்ரேயரின் சரித்திரம் கொண்ட புத்தகங்கள் மற்றும் சி.டி-க்கள் கிடைக்கின்றன. மேலும், இங்கேயே பகவான் தத்தாத்ரேயருக்குச் சந்நிதி இருக்கிறது. தவிர, நாமக்கல்லை அடுத்த சேந்தமங்கலம், கும்பகோணம் அருகில் உள்ள சேங்காலிபுரம், சேலம் ஸ்கந்தாஸ்ரமம், சென்னை கந்தாஸ்ரமங்களிலும் இவருக்குத் தனிச் சந்நிதிகள் இருக்கின்றன' என்று, சென்னை வாசகர் ஆர்.தத்த கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.