Published:Updated:

வள்ளல் பெருமான் நீக்கக்கோரிய 42 பாவங்கள்... பசிப்பிணி தீர்க்க உபதேசித்த பகலவனின் அவதாரதினம் இன்று!

‘வாரித் தந்த வள்ளலார்’
‘வாரித் தந்த வள்ளலார்’

பஞ்சமாபாதகங்கள் தவிர்த்த 42 பாவங்களைப் பட்டியலிடுகிறார் வள்ளலார். இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் நம் வாழ்வில் செய்தவண்னம் இருக்கிறோம். ஆனால் அவை பாவம் என்பதை அறியாமல் வாழ்கிறோம்.

வள்ளல் என்றால் வாரிவழங்குபவர் என்று பொருள். வாரி வழங்குவதற்குத் தேவை மிகுதியான பொருள்மட்டுமல்ல... அதை வழங்கும் மனமும் தேவை. பிற உயிர்களின் தன்மையைக் கண்டு மனம் இரங்காவிட்டால் எப்படி ஒருவரால் அதற்கு உதவ முடியும்... கண்ட கணத்தில் மனம் இரங்கிப் பிற உயிர்களின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருத முடிகிறவர்களே வள்ளல்கள் ஆகிறார்கள். அவ்வாறு, பொருள்குறையும் அருள்குறையும் கொண்ட சமூகத்தில் சகல உயிர்களையும் நேசிப்பதே இறைப்பணி என்பதை விளக்கத் தோன்றிய மகான் வள்ளாலார் எனப்படும் ராமலிங்க அடிகளார்.

உலகில் தாவரம் முதல் மனிதர் வரை அனைத்துமே உயிர்கள் என்பது நம் மரபின் ஈடு இணையில்லாத ஞானம். உயிர்கள் எடுக்கும் பிறவிகளில் புல்லாகிப் பூடாகி... என்று மணிவாசகப் பெருமான் பாடுவதை அறிவோம். அப்படிப்பட்ட நாம் புல்லையும் பயிரையும் தாவரத்தையும் உயிர் எனக்கருதும் வழக்கத்தை இழந்தோம். மனிதன் சுயநலமிக்கவன் ஆனான். அதன் விளைவுகள் இயற்கைச் சீரழிவுகள்.

வள்ளலார்
வள்ளலார்

மனிதர்கள் சுயநலத்தினால் பாவங்களைச் செய்கிறார்கள். அவற்றில் 5 பாவங்கள் மிகவும் கொடியது என்கிறார் வள்ளலார். அவற்றைப் பஞ்சமா பாதகங்கள் என்கிறார். பொய், கொலை, களவு, கள், காமம் ஆகியனவே அவை. இதில் காமம் என்பது முறையற்ற காமத்தைக் குறிக்கும். இந்த பஞ்சமா பாதகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்லும் தன்மையுடையது. எனவே இவற்றை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.

ஆனால் இவை மட்டுமே பாவங்கள் இல்லை. இவை தவிர்த்த 42 பாவங்களைப் பட்டியலிடுகிறார் வள்ளலார். இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் நம் வாழ்வில் செய்தவண்னம் இருக்கிறோம். ஆனால் அவை பாவம் என்பதை அறியாமல் வாழ்கிறோம். பாவங்களே நம்மை மீண்டும் மீண்டும் பிறப்புக்கும் இறப்புக்கும் உள்ளாக்குகிறது. எனவே அவற்றை நாம் கட்டாயம் செய்யாதிருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.

வாழ்வில் தவிர்க்க வேண்டிய 42 பாவங்கள்

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!

வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!

கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!

கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசிநின்றேனோ!

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!

பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!

ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!

வெய்யிலுக் கொதுங்கும் விருட்ச மழித்தேனோ!

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!

சிவனடியாரைச் சீறி வைதேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!

தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

வள்ளலார்
வள்ளலார்
வள்ளலார் ஆன்மிகவாதியாக ஆன்ம சுத்தியை மட்டும் பேசியவர் அல்ல. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்வோடு வாழ்ந்தால்தான் அந்த சமூகம் அமைதியான வாழ்வைவாழும் ஒரு நிறைவான சமூகமாக இருக்கும் என்று எண்ணியவர். அதனால்தான் ‘வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ! தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!’ என்னும் வரிகளையும் கூறி இத்தகைய பாவங்களிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

பசிப்பிணி என்னும் பகைவன் இருப்பதேன்?

பசி என்பது என்ன என்பது குறித்து வள்ளலார் பல்வேறு விளக்கங்களை அளித்திருக்கிறார். பசி இல்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாத போது, ஒருவருக்கொருவர் உதவ மாட்டார்கள். அப்படி உதவ வில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும். மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவிதான்

பசி ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு!

பசி ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று!

பசி ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி!

பசி உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்!

பசிப்பிணி என்பது மிகவும் பயங்கரமானது. அதைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்!

வள்ளலார்
வள்ளலார்

பெற்றவர்கள், பிள்ளைகளையும் விற்றுவிடுவார்கள். அதேபோல் பிள்ளைகளும் பெற்றவர்களை விற்பார்கள்!

பசி உண்டானதும் அறிவு மயங்கும். கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும். சித்தம் கலங்கும். நம்பிக்கை குலையும். கண் பஞ்சடைந்து போகும். காதில் இரைச்சல் ஏற்படும். நாக்கு உலர்ந்து போகும். கை, கால் சோர்ந்து துவளும். வார்த்தை குழறும். வயிறு வாடும். தாபமும் கோபமும் பெருகும். நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்று திரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை என்கிறார் வள்ளலார்.

நுரையீரல் தொற்று நோய்களைத் தடுக்கும் உள்முக சுவாசப் பயிற்சி... ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோகா!

பசிப்பிணி தீர்த்த பகலவன்

அதே வேளை பசி அகன்றுவிட்டாலோ, பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும். தத்துவங்கள் மறுபடி தழைக்கும். உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர்க்கும். தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள்.

உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட் கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப் பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணை என்று எதுவுமில்லை என்கிறார் வள்ளல் பெருமான்.

வடலூர் அணையா அடுப்பு
வடலூர் அணையா அடுப்பு
இதற்கு முன்மாதிரியாகத் தானே வடலூரில் என்றும் அணையாத அடுப்பை மூட்டி பசியோடு வரும் மக்களுக்கு உணவிட்டார். 'பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!’ என்று தன் வாழ்நாள் முழுவதும் உபதேசம் செய்த வள்ளல் பெருமானின் அவதார தினம் இன்று (அக்டோபர் 5.) இந்த நாளில் நம்மால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து ஜோதிவடிவான அந்த வள்ளல்பெருமானின் நினைவைப் போற்றுவோம்.
அடுத்த கட்டுரைக்கு