சிவமயம்! வி.ராம்ஜி
##~## |
பரவசமும் நிம்மதியும் வேண்டும் என்று நினைக்காதவர்களே இல்லை. ஆனந்தமும் பூரிப்புமாக வாழத்தான் அனைவருமே ஆசைப்படுகிறோம். அப்படியரு பரவசம் இங்கே கிடைக்காதா, இப்படியான நிம்மதியை இங்கே உள்ள இறைவன் வழங்கமாட்டானா... அந்த ஆண்டவனை வணங்கினால், ஆனந்தம் கிடைக்கும் என்கிறார்களே, இந்தச் சந்நிதியில் மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், பூரிப்புடன் வாழலாம் என்று சொல்கிறார்களே... என்று தவித்து மருகுகிற சாதாரண பக்தர்கள்தான் நாம்! இப்படியான சாதாரண பக்தர்களுக்கு, தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அனைத்தையும் வழங்கி அருள்கிறவராக இருக்கிறார் திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரர்.
சென்னை வேளச்சேரியிலும் மற்றும் அருகில் உள்ள பகுதிகளிலும் வசிக்கும் அன்பர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, 'திருக்கோயில் உழவாரப் பணி மன்றம்’ என்று அமைத்து, ஒரு குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சிவனடியார்கள் ஒவ்வொரு கோயிலாகத் தேடிச் சென்று உழவாரப் பணி செய்வது, கோயிலைத் தூய்மையாக்குவது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அமைப்பாளர் ஆடலரசன், ''அப்படி உழவாரப் பணி செய்வதற்காக, எங்கள் குழுவினர் திருக்கச்சூருக்கு வந்தோம். கோயிலின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தோம். ஸ்தல புராணத்தைக் கேட்டதும் சிலிர்த்துப் போனோம். அப்புறம்தான், 'சுந்தரரின் பசி தீர்க்க யாசகம் கேட்ட சிவனாரின் இந்த ஆலயத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அன்னதானம் செய்தால் என்ன’ என்று தோன்றியது. அப்படியே வாரம் தவறாமல் இங்கே திருக்கச்சூர் தலத்தில், தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறோம். எல்லாம் சிவனருள்!'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

''சென்னையில், வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் வசிப்பவர்கள் இந்தக் குழுவில் இருந்தாலும், திருக்கச்சூர் தலத்தின் மீது எல்லோருக்குமே அதீத ஈடுபாடு! சொந்த ஊர் போல, பிறந்த கிராமத்தைப்போல, வாழ்கிற இடத்தைப் போல, மனசுக்கு மிக நெருக்கமாகிவிட்டது திருக்கச்சூர் திருத்தலம்'' என்று வியப்பும் மலைப்புமாகச் சொல்கிறார்கள் இந்த அமைப்பில் உள்ள பக்தர்கள்.
''ஆமாம். சிங்கபெருமாள் கோவிலுக்கும் மறைமலைநகருக்கும் அருகில், 3 கி.மீட்டர் தொலைவில், இப்படியரு பாடல்பெற்ற ஸ்தலம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை. இப்போது, 'இதோ... எந்தன் தெய்வம்’ படித்துவிட்டு, நிறையப் பேர் கோயிலுக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். 'கண்மலர் சார்த்துகிறேன்’ என்றும், 'வஸ்திரம் சார்த்தி வழிபட வந்தோம்’ என்றும், 'அன்னதானம் செய்யவேண்டும்’ என்றும் தினமும் எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள், பக்தர்கள்'' என்கிறார் முரளி குருக்கள்.

சுந்தரர் வழிபட்ட அந்தத் தலத்தைத் தேடி இன்றைக்குப் பலரும் வருகிறார்கள். வந்து உருகி உருகி, சிவனாரை வழிபடுகிறார்கள். சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் வந்தபடி இருக்க... நாளுக்கு நாள் அன்னதானம் செய்யும் அன்பர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
கோலங்கள், திருமதி செல்வம், மூன்று முடிச்சு, ஆனந்தம், வீட்டுக்கு வீடு லூட்டி என டி.வி. சீரியல்களில் நடித்திருப்பவர் விழுதுகள் சந்தானம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, குடும்பத்துடன் திருக்கச்சூர் கோயிலுக்கு வந்திருந்தார்.
''சென்னைக்குப் பக்கத்துல இப்படியொரு சாந்நித்தியமான, பிரமாண்டமான கோயில் இருக்கறதை சக்திவிகடன்ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே வரணும்னு நினைச்சு, ஏதேதோ காரணங்களால முடியாம போச்சு! இதோ... இன்னிக்கிதான் அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு!'' என்று நெகிழ்ந்தபடி தொடர்ந்தார்...
''திருக்கச்சூர்னு இந்தப் பக்கத்துல ஒரு ஊர் இருக்குன்னு தெரியும். ஆனா, சுந்தரர் பெருமான் இங்கு வந்து பாடினார்ங்கறதும், இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்னும் சக்தி விகடன் மூலமா தெரிய வந்ததும், கோயிலை உடனே வந்து தரிசிக்கணும்னு ஆசை எழுந்தது. அதன்படி, இங்கே வந்து ஸ்ரீகச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி வழிபட்டப்ப, மனசே நிறைஞ்சு போயிருச்சு.

அதேபோல, அம்பாள் சந்நிதிக்குப் போய், அவளுக்கு அபிஷேகம் பண்ணி, புடவை சார்த்தி வழிபட்டப்ப, கண்ணுல ஒரு பரவசமும் நெஞ்சுல ஒரு நிம்மதியும் பரவிச்சு. இதைவிட வேற என்ன கொடுப்பினை வேணும் நமக்குன்னு தோணுச்சு! அற்புதமான, வரங்கள் பலவும் கொடுக்கக்கூடிய இந்தத் தலத்தை, இதன் மகத்துவத்தை எல்லோருக்கும் தெரியப் படுத்திய சக்திவிகடனுக்கு நன்றி!'' என்று உணர்ச்சிபூர்வமாகச் சொன்னார் சந்தானம்.
கோயிலில் பிராகாரத்தில் இருக்கிற ஸ்ரீஞான விநாயகரும் கொள்ளை அழகு! சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். அழகு முருகப்பெருமானும் அருகில் சந்நிதி கொண்டிருக்க, அப்படியே ஸ்ரீதுர்கை சந்நிதிக்கு வருவதற்கு முன்னதாக, ஸ்ரீசுந்தரருக்கு சந்நிதி இருக்கிறது. பக்கத்திலேயே, ஸ்ரீவிருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் உண்டு.

ஒவ்வொரு சந்நிதியிலும் அமைதியுடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும் மனதார வேண்டி நிற்க... கோயிலின் உன்னதத்தை நன்றாகவே உள்வாங்கிக் கொள்ளமுடிந்தது.
''இங்கு உழவாரப் பணி செய்யும்போதும் சரி, அதையடுத்து வாரம் தவறாம, ஞாயித்துக்கிழமைகள்ல அன்னதானம் பண்ணும்போதும் சரி... இந்த உலகம் இன்னும் பசுமைச் செழிப்போடயும் வளத்தோடயும் இருக்கணும்; எல்லார்க்கும் வயிறு நிறைவதற்கான உணவும், மனசு நிறையறதுக்கான சத்காரியங்களும் கிடைக்கணும்னு வேண்டிக்குவோம். எல்லாம் சிவ கருணை!'' என்று மெய்சிலிர்த்துச் சொல்கிறார்கள், திருக்கோயில் உழவாரப்பணி மன்ற அன்பர்கள்.
''முன்னாடியெல்லாம், இந்தக் கோயில் ரொம்ப கல்லும் முள்ளுமா இருந்துச்சு. நண்பர்கள் ஒண்ணாச் சேர்ந்து, உழவாரப் பணி செய்வோம். பக்கத்து ஊரான பேரமனூர்லதான் வீடு. காலைல ஆரம்பிச்சு, சுட்டெரிக்கிற வெயிலையும் பொருட்படுத்தாம முழுசா சுத்தம் செஞ்சு, மூணு நாலு மணி போல வீட்டுக்குப் போகும்போது, பசியே எடுக்காது; அயர்ச்சியோ சோர்வோ எதுவும் தெரியாது.

அன்னிக்கி இரவு கண்ணை மூடிப் படுத்தா... சிவசிந்தனையும் அந்த லிங்க சொரூபமும்தான் கனவா வரும். கனவுல எப்பவுமே ஐயாதான் வருவார். நான் ஐயான்னு சொல்றது, சிவபெருமானைத்தான்! ஈசன் எனக்கு ஐயா... பார்வதிதேவி எனக்கு அம்மா! இந்த ஜென்மத்தைக் கொடுத்ததும் ஜென்மம் முழுக்க எனக்குத் துணையா இருக்கறதும் அந்தச் சிவனார்தான்!'' என்று நா தழுதழுக்கச் சொல்கிறார் பேரமனூர் குமார். இப்படி... ஒவ்வொரு பக்தருக்குள்ளும் திருக்கச்சூர் எனும் தலம் ஊடுருவி, மனம், புத்தி, செயல் எல்லாவற்றிலும் சிவமாகவும் சக்தியாகவும் திகழ்ந்து, நிறைந்திருக்கிறது. நீக்கமற எல்லாப் பொழுதுகளிலும் எல்லார்க்கும் துணைநிற்கும் அந்த சாந்நித்தியத்தை உணர்த்துவது கடினம். உணருவதே பேரின்பம்!
இதோ... திருக்கச்சூர் எனும் அதிசயத்தில், 'மண்ணே மருந்து’ என்பதும் உண்டு என அறிவீர்களா?
ஸ்ரீகச்சபேஸ்வரரும் ஸ்ரீதியாகராஜரும் ஊருக்கு நடுவே கோயில்கொண்டிருக்க, சற்றுத் தள்ளி சின்னதொரு மலையில், நம் உடல் நோயையும் பிறவிநோயையும் தீர்க்கவென்றே குடிகொண்டிருக்கிறார், ஸ்ரீமருந்தீஸ்வரர்.
வாருங்கள்... அவரைத் தரிசிப்போம்!
- வேண்டுவோம்
படங்கள்: ரா.மூகாம்பிகை
