Published:Updated:

1 கோடிக்கும் மேலான பக்தர்கள், 48 நாள் கொண்டாட்டம்... அத்திவரதர் வைபவம் ஒரு ரீவைண்ட் ஸ்டோரி!

சைலபதி

அத்திவரதர் வைபவம், நினைத்ததைவிட வேகமாக, 48 நாள்கள் பரபரப்பும் கொண்டாட்டமுமாக நடந்து முடிந்துவிட்டது. நேற்றோடு பொதுமக்களுக்கான தரிசனம் முடிந்தது. இன்று ஆராதனைகள் முடிந்து அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுவார்.

athi varadar
athi varadar

அத்திவரதர்... தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகப் பெரும்பாலானவர்களால் உச்சரிக்கப்பட்ட பெயர். பக்தர்கள், ஊடகங்கள் எல்லாவற்றிலும் அத்திவரதரே நிறைந்திருந்தார். காஞ்சிபுரம் மிகவும் சிறிய நகரம். அந்த நகரத்தில், திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் நிறைந்திருக்கும். அத்திவரதர் தரிசனம் அதை மெருகூட்டி, காஞ்சிபுரம் ஓர் ஆன்மிகபூமி என்பதை மெய்ப்பித்தது. இப்படிப்பட்ட அபூர்வ தருணம், தரிசனம் இனி 2059-ம் ஆண்டில்தான் வாய்க்கும்.

அனந்த சரஸ்
அனந்த சரஸ்

கடந்த ஜூன் 28 -ம் தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட அத்திவரதர், ஜூலை 1 முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். 48 நாள்கள் அத்திவரதரை தரிசிக்கலாம் என்றார்கள். நினைத்ததைவிட வேகமாக, 48 நாள்கள் பரபரப்பும் கொண்டாட்டமுமாக ஓடிமுடிந்துவிட்டது. நேற்றோடு பொதுமக்களுக்கான தரிசனம் முடிந்தது. இன்று ஆராதனைகள் முடிந்து அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டுவிடுவார்.

அத்திவரதரைக் காண திரண்டனர் ஒருகோடிக்கும் அதிகமான மக்கள். இந்த 48 நாள்களிலும் உள்ளூர் வாசிகளுக்கு பல அசௌகர்யங்கள் இருந்திருக்கும். தினமும் பல விருந்தினர்கள் வந்து போயிருப்பார்கள். 'எப்போது இதெல்லாம் முடியும்' என்கிற அலுப்புகூட தோன்றியிருக்கும். சில வணிகங்கள் மிகவும் சிறப்பாக நடந்திருக்கும். சில வணிகங்கள் வழக்கமான வாடிக்கையாளர்கள் வந்துபோக முடியாமல் சுணங்கியிருக்கும்.

அத்திவரதர் வைபவத்தில் மக்கள் கூட்டம்!
அத்திவரதர் வைபவத்தில் மக்கள் கூட்டம்!

அவையெல்லாம் முடிந்து, காஞ்சி மாநகரம் தன் இயல்புக்கு நாளை முதல் திரும்பிவிடும். ஆனால், அந்த இயல்பு பழக சில காலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு மக்களின் உணர்வோடு கலந்து இருந்தது இந்த வைபவம். இந்த வைபவத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

Vikatan
  • ஜூன் மாதம் 28 -ம் தேதி அதிகாலை, அனந்த சரஸ் குளத்திலிருந்து எழுந்தருளிய அத்திவரதருக்கு அபிஷேகம் மற்றும் தைலக்காப்பு சாத்தப்பட்டது.

  • ஜூலை 1 -ம் தேதி முதல் அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடங்கிய சில நாள்களிலேயே நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் சென்றனர்.

  • ஜூலை 10 -ம் தேதி முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமானதையடுத்து, காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

  • ஜூலை 12 -ம் தேதி, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் வந்து அத்திவரதரைத் தரிசனம் செய்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் தரிசனம்செய்தார்.

athi varadar
athi varadar
  • ஜூலை18 -ம் தேதி, அத்திவரதரை தரிசிக்க மூன்று லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நான்கு பேர் உயிரிழந்தனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

  • ஜூலை 22 - ம் தேதி, ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமாநுஜர் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார். 'அத்திவரதரை மீண்டும் அனந்த சரஸ் குளத்திற்குள் வைக்காமல், ஆலயத்திலேயே வைத்து வழிபட வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். இதற்கு, ஆதரவும் எதிர்ப்புமான கருத்துகள் ஊடகங்களில் வலம்வந்தன. கோயில் நிர்வாகம், இந்த வேண்டுகோளை ஏற்கவில்லை.

  • ஜூலை 23 -ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 31-ம் தேதி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அத்திவரதரை தரிசனம்செய்தனர்.

  • ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல் நேற்றுவரை அத்திவரதர் நின்றகோலத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி, பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

  • ஆகஸ்ட் 7 -ம் தேதி, விஐபி வரிசையில் நின்ற சில பக்தர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் அங்கு மேடை அமைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.

athi varadar
athi varadar
  • ஆகஸ்ட் 9 -ம் தேதி, மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரி ஒருவரை திட்டிய வீடியோ பரவ, சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • ஆகஸ்ட்10 -ம் தேதி முதல் நேற்றுவரை தினமும் நான்கு லட்சம் முதல் ஆறு லட்சம் பக்தர்கள் வரை அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

  • ஆகஸ்ட் 12 -ம் தேதி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அத்திவரதரை தரிசனம்செய்தார்.

இதுவரை அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் தரிசித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்திவரதர் தரிசனம் தொடங்கிய தினத்திலிருந்து இன்றுவரை தினம்தோறும் ஏதேனும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. எதிர்பாராமல் சில அசம்பாவிதங்களும் நடந்தன. அதன்காரணமாக, பக்தர்கள் வரத்து குறையும் என்று எதிர்பார்த்தனர். மாறாக, பக்தர்கள் அதிக அளவில் வந்து குவிந்தனர். நேற்றோடு தரிசனம் முடிந்த நிலையில், இன்று அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்திற்குள் எழுந்தருளுவார்.

ஆரம்பத்தில் அசௌகர்யங்களால் திணறிய காஞ்சிபுரம் மக்கள், இது அவர்கள் வாழ்வில் மிக முக்கியமான தருணம் என்பதை உணர்ந்துகொண்டனர். போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருந்தது. மக்களின் காலடிச்சத்தம் இரவும் பகலும் நிறைந்திருந்தன. இவையெல்லாம் இன்னும் ஓரிரு நாள்களில் அடங்கிவிடும். ஒரு பெரும் பண்டிகையின் நிறைவுக்குப் பின் எழும் வெறுமை அனைவரையும் சூழலாம்.

athi varadar
athi varadar
Vikatan

அத்திவரதரை தரிசித்தவர்கள், வைபவத்தை முன்னிட்டு பல்வேறு சேவைகளில் ஈடுபட்டவர்கள், நிர்வாகத்தினர், காவல்துறையினர், அதிகாரிகள், இரவுபகலாக உழைத்தவர்கள் அனைவரின் நினைவுகளிலும் அத்திவரதர் குறித்த நினைவுகள் எப்போதும் மாறாது பசுமையாய் நிறைந்திருக்கும். தங்கள் வாழ்க்கையின் பெரும் பாக்கியமாக, பொக்கிஷமாக அந்த நினைவுகளை அவர்கள் பாதுகாப்பார்கள். இனி, அத்திவரதரை நேரில் தரிசிக்க வேண்டுமானால், 2059 வரை காத்திருக்க வேண்டும். அதுவரைக்கும் அவர் பக்தர்களின் மனதில் எழுந்தருளி அருள்பாலிப்பார்