'கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்' என்று உபதேசிக்கிறார் நம்மாழ்வார். நாமெல்லாரும் பிறந்தது நமது கர்மங்களின், ஊழ்வினைகளின் காரணமாக! ஆனால், இறைவனார் பிறப்பது கர்மத்தின் காரணமாக அல்ல; நம்மிடம் கொண்டிருக்கும் அன்பின் காரணமாக.
நமது சரித்திரம், நமது வாழ்க்கை முறை, நமது நடத்தைகள் பல தருணங் களில் நமக்கே பிடிப்பதில்லை. ஆனால், பகவானது அவதாரங்கள் எப்படி நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றனவோ, அப்படியே அவனுக்கும் ஆனந்தத்தை விளைவிக்கின்றன. இதைத்தான் 'ஜந்ம கர்ம ச மே திவ்யம்' என்று கீதையில் சொல்கிறான் கண்ணன். எவனொருவன் அவதார ரகசியத்தைப் பற்றிய ஞானத்தை உடையவனோ, அவன் மீண்டும் பிறப்பதில்லை என்கிறது கீதை.
கண்ணனது லீலைகளே முக்திக்கான சாலைகள். இடைப்பெண்ணான யசோதையின் கையால் கட்டுண்ட பகவானுக்கு, இடையிலே தழும்பு உண்டாயிற்றாம். எனவேதான், தாமோதரன் என்று பெயர் பெற்றான். 'எத்திறம் உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே' என்று உருகி உருகி, ஆறு மாத காலத்துக்குக் கண் விழிக்காமல் மயங்கிக்கிடந்தாராம் நம்மாழ்வார்.
பரம்பொருள் ஓர் அபலைப் பெண் கையாலே கட்டுப்பட்டுக் கிடந்தான். அவன் உரலிலே கட்டுண்டு கிடந்தான் என்று நினைத்தாலே, நமது சம்சாரக் கட்டு தானாக அவிழும் என்கிறார் பரமாச்சார்யரான நம்பிள்ளை.
கண்ணன் பிறந்ததே இரண்டு காரணங்களுக் காகத்தான் என்பார்கள் பெரியோர். ஒன்று வெண்ணெய்; மற்றொன்று பின்னை... அதாவது, நப்பின்னையை மணம் புரிய!
கை நிறைய வெண்ணெய் கொடுத்தாலும், திருடித் தின்பதில்தான் கண்ணனுக்கு விருப்பம். இன்றைக்கும் துவாரகை முதலான திருத்தலங்களில், பக்தர்கள் பரவசத்துடன் உரத்த குரலில் உச்சரிப்பது, 'மாகன் சோர்' (விகிரிபிகிழி சிபிளிஸி) என்ற திருநாமத்தையே! மாகன் சோர் என்றால், வெண்ணெய்த் திருடன் என்று பொருள். 'திருடா' என்று அழைத்தாலும் சிரிக்கிறது தெய்வம்!
பானையிலிருந்து வெண்ணெய் திருடுவது மட்டுமல்ல; மொத்த வெண்ணெய்யையும் விழுங்கிய பிற்பாடு, வெண்ணெய் இருந்த பானையை கீழே போட்டு உடைத்து, அந்த ஒலியைக் கேட்பதிலே அளவற்ற ஈடுபாடு கண்ணனுக்கு என்கிறார் பெரியாழ்வார். துள்ளிக்குதித்து தனது பிஞ்சுக் கைகளைத் தட்டி மகிழ்வான் கண்ணன்.
ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் எனும் நூலில், கண்ணனின் லீலைகளை வெகுவாகப் புகழ்கிறார் லீலாசுகர்.
ஒருமுறை... கோபிகை ஒருத்தியின் வீட்டுக்குள், அவள் இல்லாத நேரம் பார்த்து, சகாக்களுடன் நுழைந்தான் கண்ணன். அவர்கள் பெரு முயற்சி செய்து பானையைக் கீழே இறக்கி, வெண்ணெயைப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் கோபிகை வந்துவிடுகிறாள். அவளைக் கண்டதும் மற்றவர்கள் எப்படியோ தப்பித்து ஓடிவிட, கண்ணன் மட்டும் அகப்பட்டுக் கொள்கிறான். அவளிடம் இருந்து எப்படிப் தப்பிப்பது என்று பகவான் யோசிக்க... அந்தப் பெண், கண்ணனிடம் 'நீ யார்?' என்று கேட்கிறாள்.
|