கோப்பிரளயர், கோபிலர் எனும் முனிவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, கடும் தவம் இருந்தனர்; அதில் மகிழ்ந்த பெருமாள், அவர்களுக்குக் காட்சி தந்தருளினார்; அடுத்து, முனிவர்களது வேண்டுகோளின்படி, இன்றளவும் பக்தர்களைத் தாமே தேடிச் சென்று, அருள்பாலித்து வருகிறார் ராஜகோபால ஸ்வாமி என்பது ஐதீகம். மூலவரின் திருநாமம்- ஸ்ரீவாசுதேவபெருமாள்; தாயாரின் திருநாமம்- ஸ்ரீசெங்கமலத் தாயார். இந்த ஆலயத்தின் உற்ஸவர் ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி, அழகுத் திருமேனியராக, சேலையை வேஷ்டியாகவும், தலைக்கு முண்டாசாகவும் கட்டிக்கொண்டு காட்சி தரும் கோபாலனை வேறெங்கும் காண்பது அரிது என்கின்றனர்.
ஆம். பகவான் கிருஷ்ணர், கோபியர் 16,108 பேருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஒரு போட்டி வைத்தாராம். அதாவது, குளித்துவிட்டுக் கரைக்கு வந்ததும், யார் வேண்டுமானாலும் யாருடைய ஆடையையும் உடுத்திக் கொள்ளலாம்; யார் வேகமாக உடுத்திக் கொள்கிறார் என்பதே போட்டி. அதன்படி, அனைவரும் குளித்துக் கரைக்கு வந்ததும், கையில் கிடைத்த ஆடையை எடுத்து வேகவேகமாக உடுத்திக்கொண்டனர். இதில், கிருஷ்ணருக்குக் கிடைத்ததோ சேலை! அந்தப் புடவையை அப்படியே வேஷ்டியாகவும், தலைக்கு முண்டாசாகவும் கட்டிக்கொண்டு, பெண்கள் அணியும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டாராம். இதனால் இங்கேயுள்ள மூலவருக்கு, ஸ்ரீவித்யா ராஜகோபாலன் எனும் திருநாமம் அமைந்ததாம். ஆகவே, இந்தத் தலத்தில்... ஒரு காதில் குண்டலம், மறு காதில் தோடு, இடுப்பில் கச்சம், தலையில் முண்டாசு, கையில் பொன்னாலான சாட்டை... எனக் காட்சி தருகிறார் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்.
|