தொடர்கள்
Published:Updated:

ஓடி வருவான் கண்ணன்!

ஓடி வருவான் கண்ணன்!


ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி சிறப்பிதழ்
செல்லக் கண்ணா தாலேலோ...
ஓடி வருவான் கண்ணன்!
ஓடி வருவான் கண்ணன்!

ஞ்சாவூரில் உள்ள கரந்தை எனும் பகுதியில் கோயில் கொண்டு, வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களைத் தந்தருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி யாதவக் கண்ணன்.

கி.பி.1755-ல் யாதவர்களின் நாட்டாண்மையாக விளங்கிய பெரியண்ணா என்பவரின் முயற்சியால், தஞ்சாவூர் மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம மன்னனால் எழுப்பப்பட்ட அழகிய ஆலயம் இது!

பிள்ளை பாக்கியம் இன்றி தவித்து மருகும் பெண்களுக்கு, இங்கேயுள்ள யாதவக் கண்ணன், வரப்பிரசாதி. ஆலயத்தில் உள்ள தொட்டில் கிருஷ்ணனை, தம்பதிகள் மடியில் ஏந்தி, தாலாட்டி வழிபட... விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதி எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!

பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும் நாளில், கரந்தை யாதவக் கிருஷ்ணன் ஆலயத்துக்கு வந்து, வளைகாப்பு சீர் வரிசைப் பொருட்களை சந்நிதியில் வைத்துப் பிரார்த்தனை செய்துவிட்டு, வளைகாப்பு விழாவை சீரும் சிறப்புமாக நடத்துவது, தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்க்காரர்களின் வழக்கம். இதனால், ஒருகுறையுமின்றி சுகப்பிரசவம் நடைபெறுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. பிரசவம் நல்லபடியாக ஆன பின்பு, குழந்தையை துலாபாரத்தில் வைத்து, தாங்கள் வேண்டிக்கொண்டபடி எடைக்கு எடை நேர்த்திக்கடனைச் செலுத்தி, கிருஷ்ணனை வழிபட்டுச் செல்கின்றனர்.

மூலவர், ஸ்ரீசத்தியபாமா ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீவேணு கோபால ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார். உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீயாதவக் கண்ணன். நர்த்தனக் கோலத்தில் அழகிய வடிவம் கொண்டு காட்சி தரும், யாதவக் கண்ணனைப் பார்த்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிட்டது போன்ற உணர்வு! பிராகாரத்தில் திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதியின் திருக்காட்சியையும் தரிசிக்கலாம்.

ஓடி வருவான் கண்ணன்!

ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமப்படி இங்கே ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உத்ஸவம், 11 நாள் விழாவாக அமர்க்களப்படும். விழாவின் போது, தினமும் ஸ்வாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் சிறப்புற நடைபெறும். பதினோரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரத்தில் கிருஷ்ணனைக் காணக் கண்கோடி வேண்டும். 7-ஆம் நாள், உறியடித் திருவிழா. 11-ஆம் நாள், விடையாற்றியுடன் நிறைவுக்கு வருகிறது ஸ்ரீஜயந்தி விழா.

சோழ தேசத்தில் பிரமாண்டமாக நடைபெறும் பதினெட்டு கருடசேவை பிரசித்தம். அப்போது, யாதவக் கண்ணனும் சர்வ அலங்காரத்துடன் அந்தக் கருடசேவையில் பங்கேற்பார்.

பழைமையும் பெருமையும் வாய்ந்த கரந்தை யாதவக் கண்ணனை தரிசித்து வணங்குங்கள்; உங்கள் வாழ்வை வளமாக்க, கண்ணன் நிச்சயம் ஓடோடி வருவான்!

- ரா. மங்கையர்க்கரசி, படங்கள் ந. வசந்தகுமார்