திண்டுக்கல்-பழநி சாலையில் உள்ளது ரெட்டியார் சத்திரம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோபிநாத மலை. குழலூதும் கண்ணன் இங்கே கோயில் கொண்டிருப்பதால், இறைவனின் பெயரே மலையின் பெயராகிவிட்டது!
மாங்கரை ஆறு; அதிலிருந்து சுமார் 450 அடி உயரத்தில், 619 படிகளைக் கடந்தால், கோபிநாத மலையின் எழிலார்ந்த சூழலில் அமைந்துள்ளது ஆலயம். கொஞ்சி விளையாடப் பிள்ளை இல்லையே என வருந்துவோர், இங்கு வந்து கோபிநாத ஸ்வாமியைத் தரிசித்து, அத்திமரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் கட்டி, தாலாட்டுப் பாடலாம் என்கின்றனர் பக்தர்கள்!
உள்ளே மூலஸ்தானத்தில், குழலின் கானத்தால் ஆவினங்களை மேய்த்துக் காத்த கோபிநாத ஸ்வாமி, கையில் புல்லாங்குழலுடன், அழகே உருவெனக் கொண்டு காட்சி தருகிறார். பசுக்களுக்கு ஏதேனும் நோய் என்றால், ஸ்ரீகோபிநாத ஸ்வாமியை மனதார வேண்டிச் சென்றால் போதும்; பசுக்களின் நோயை விரட்டி, வாயில்லா ஜீவனைக் காத்தருள்வது கோபிநாத ஸ்வாமியின் பொறுப்பு என்று சொல்லிச் சிலிர்க்கும் விவசாயிகள், ''இந்த சாமியைக் கும்பிட்டுட்டு, விதைநெல்லை விதைச்சாப் போதும்; அந்த முறை அமோக விளைச்சல் உறுதி'' என்கின்றனர். இன்னொரு விஷயம்... மாடுகள், சரிவர உண்ணவில்லை எனில், ஸ்ரீகோபிநாத ஸ்வாமியை வணங்கிவிட்டு, மலையில் உள்ள தீர்த்தம் அல்லது ஒரு பிடி புல்லை எடுத்துச் சென்று, பசுக்களுக்குத் தர... அதன்பின் தீவனத்தை வெளுத்து வாங்குமாம் மாடுகள்!
|